
அழகர் கோவிலில் உள்ள ராஜ கோபுர கதவு நிரந்தரமாக அடைக்கப்பட்டது ஏன்?ஆண்டுக்கு ஒருநாள் மட்டும் அந்த கதவு திறக்கப்படுவது ஏன்? அந்த கதவு திறக்கப்படும் போது சக்கரத்தாழ்வார் மட்டும் அதன் வழியாக வந்து செல்வது ஏன்? என்பது போன்ற பல கேள்விகளுக்கான பதிலை இப்பதிவில் காண்போம்.
கோவிலுக்கு திருட வந்தவர்களை வெட்டி கோபுரத்தின் வாசலுக்கு கீழ் புதைத்ததால், அந்த வாசல் தீட்டுப்பட்டது. எனவே, அவ்வழியில் தெய்வம் வருவது முறையல்ல. அந்த வழியில் மக்கள் வருவதற்கு அஞ்சுவர். எனவே, அவ்வழி அடைக்கப்பட்டது. அதனால் தான் அழகர் கோவில் ராஜகோபுரம் வருடம் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள கருப்பண்ணசுவாமிக்கு உருவம் கிடையாது. கோவில் வாசலில் தான் அவர் இருப்பதாக நம்பிக்கை. எனவே, அந்த கதவிற்கு சந்தனம், குங்குமம் பூசி மாலை அணிவித்து பூஜை செய்வது வழக்கம். கருப்பண்ணசுவாமிக்கு திருவிழா என்று எதுவுமில்லை. ஆடி மாசத்தில் வரும் அமாவாசை, பௌர்ணமியன்று இக்கதவுக்கு சந்தனம் சாத்தி வழிப்படுகின்றனர்.
சக்கரத்தாழ்வார் மட்டும் ஆண்டுக்கு ஒருமுறை இவ்வழி வந்து செல்கிறார். திருமாலின் போர்க்கருவியான சக்கரத்தாழ்வார் மட்டும் இறந்தவர்களின் ஆவிப்பற்றிய அச்சத்தையும், பகையையும் வென்று அவ்வழியே செல்கிறார்.
பதினெட்டாம்படி கருப்பின் காவலைத் தாண்டி எவரும் உள்ளே செல்ல முடியாது. தினமும் நூபுர கங்கையிலிருந்து கொண்டு வரப்படும் தீர்த்தத்தை கருப்பண்ணசுவாமியின் சன்னதியில் வைத்து அது தூய்மையானது என்ற பிரமானம் செய்த பின்னரே உள்ளே கொண்டு செல்லப்படும். தினமும் அழகர் கோவில் பூட்டப்பட்டதும் கதவின் சாவியை 18 ஆம் படி கருப்பண்ணசுவாமியின் முன்பு வைத்துவிட்டு செல்வர்.
மறுநாள் காலை சாவியை பெற்று கோவில் கதவை திறக்கும் வழக்கம் இன்றளவும் உள்ளது. கருப்பண்ணசுவாமியை வணங்கினால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை. கருப்பசாமியை குலதெய்வமாக மக்கள் வணங்கி வருகிறார்கள்.
கருப்பசாமியிடம் முறையிட்டால் எந்த பிரச்னையாக இருந்தாலும் அதற்கு தீர்வுக் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கோவில் நகைகளை கருப்பண்ணசுவாமி காவல் காக்கிறார் என்பது மக்களின் நம்பிக்கை.