

பழனி முருகன் சிலை நவபாஷாணத்தால் ஆனது என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதேபோல பட்டுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி செல்லும் வழியிலுள்ள குறிச்சி கிராமத்தில் இருக்கும் அஷ்ட தச புஜ மகாலட்சுமி கோயிலுள்ள மூலவர் சிலையான அஷ்ட தச புஜ மகாலட்சுமி சிலையும் நவ பாஷாணத்தால் ஆனது என்பது ஒரு ஆச்சரியகரமான விஷயம்.
அஷ்ட தச புஜ மகாலட்சுமி என்பது 18 கரங்களைக் கொண்ட மகாலட்சுமியின் தோற்றம். 12 அடி உயரம் கொண்ட இந்த அம்பாள் சிங்கத்தின் மீது அமர்ந்து காட்சி தருகிறாள். இந்த அம்பிகை துர்கை, லட்சுமி மற்றும் சரஸ்வதியின் சக்தியை கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.
வஜ்ராயுதம் அரம்பையர்கள், சிந்தாமணி, சூடாமணி, கௌஸ்தபமணி, மூத்த தேவி, அகலிகை, காமதேனு, கற்பக விருட்சம், அமுதம், அஷ்ட திக்கு கஜங்கள் இவற்றோடு பாற்கடலில் தோன்றியவள் திருமகள். உலகிலுள்ள அத்தனை அழகுக்கும் செல்வங்களுக்கும் அடையாளமாக இருப்பவள் மகாலட்சுமி தாயார்.
இவள் பூரண மகாலட்சுமியாய் பிரம்மாண்ட வடிவில் காட்சியளிப்பது அஷ்ட தச புஜ மகாலட்சுமி வடிவில்தான் என்கின்றன புராணங்கள். யாகங்களால் மகிழ்பவள் மகாலட்சுமி. ஆகையால், இந்தத் தலத்தில் மகாலட்சுமிக்கு சிறப்பான யாகங்கள் நடைபெறுகின்றன. பக்தர்களும் இதில் பங்கு பெறலாம்.
மூலவரிடமிருந்து 15 அடி தொலைவில் ஒரு ருத்திராட்ச மரம் உள்ளது. இமயமலை அடிவாரத்திலும், திருப்பதியுலும் மட்டுமே காணப் படும் இந்த அரிய தெய்வீக மரம் இந்தத் தலத்திலும் காணப்படுகிறது. பொதுவாக, கோயில்களில் அரசமரத்தடியில் அருள்பாலிக்கும் விநாயகர், இங்கே ருத்திராட்ச மரத்தடியில் அமர்ந்திருக்கிறார்.
நீண்ட கால மற்றும் கடுமையான நோய்களிலிருந்து முழுமையாக குணம் அடைவதற்கும், தொழில் வளர்ச்சி, திருமண முயற்சிகளிலுள்ள தடைகள் நீங்குதல், குழந்தை பாக்கியம் வேலை வாய்ப்புகள், கல்வி சாதனைகளில் சிறந்து விளங்க மக்கள் அம்பிகையை பிரார்த்தனை செய்கின்றனர்.