திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழாவின் ஏழாம் திருநாளான இன்று சிவப்பு சாத்திக் கோலத்தில் அருள்பாலித்த சுவாமி ஷண்முகர், எட்டாம் திருநாளான நாளை வெள்ளை சாத்தியிலும் பச்சை சாத்தியிலும் எழுந்தருள்வார். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் ஆண்டு தோறும் நடைபெறும் ஆவணி திருவிழாவில் சுவாமி ஷண்முகர் பச்சை சாத்திக் கோலத்தில் எழுந்தருளி மக்களை பக்திப் பரவசப்படுத்துவார். முருகப்பெருமான் திருச்செந்தூரில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் அம்சமாகத் திகழ்ந்து அருள்பாலிக்கிறார் என்பது ஐதீகம். அதை காட்டும் வகையிலேயே சிவப்பு சாத்தி, வெள்ளை சாத்தி, பச்சை சாத்தி கோலத்தில் ஷண்முகர் அருள்பாலிக்கிறார். சிவப்பு சாத்தி அலங்காரம் அன்று ஆராதனைகள் சுவாமி அம்சம் எல்லாமே சிவப்பாக இருக்கும்.
அதேபோல, வெள்ளை சாத்தியில் எழுந்தருளும்போது எல்லாம் வெள்ளை மயமாக இருக்கும் வெள்ளை சாத்தியைக் கண்டு ஷண்முகரை தரிசனம் செய்தால் பிரம்மாவின் அருளால் நம் தலையெழுத்தே மாறும் என்பது நம்பிக்கை.
சிவப்பு சாத்தி அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளும்போது தங்க சப்பரத்தில் சுவாமி ஷண்முகர் வள்ளி தெய்வானையுடன் செம்பட்டாடை அணிந்து செம்மலர்ச் சூடி சிவப்பு சாத்தி கோலத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். சுவாமி ஷண்முகர் சிவப்பு சாத்திக் கோலத்திலும் பின்புறமாக நடராஜர் அலங்காரத்தில் சிவன் அம்சமாக பக்தர்களுக்குக் காட்சியளிப்பார்.
பச்சை சாத்தி கோலத்தில் சுவாமி ஷண்முகர் எழுந்தருளும்போது பச்சை நிற பட்டாடை உடுத்தி மரிக்கொழுந்து மற்றும் பச்சை நிற மாலை அணிந்து பச்சை சாத்தி அலங்காரத்தில் கேடய சப்பரத்தில் எழுந்தருளி உள்பிராகாரத்தினை சுற்றி வந்து தனது இருப்பிடம் சேர்வார்.
பச்சை நிறமாகத் தோற்றமளிக்கும் சுவாமி ஷண்முகரை பார்த்தால் வாழ்வில் செல்வம் சேரும் என்பது ஐதீகம். எனவே, பச்சை சாத்திக்கு மிகுந்த வரவேற்பு உண்டு. சிவப்பு சாத்தி, வெள்ளை சாத்தி, பச்சை சாத்தி மூன்றையும் கண்டு மும்மூர்த்திகளின் அருளை பெற்றால் எளிதில் முக்தி பெற முடியும் என்று திருச்செந்தூர் தல வரலாறு கூறுகிறது.
திருச்செந்தூரில் ஆவணி மற்றும் மாசி இரண்டு மாதங்களும் பெருந்திருவிழாவும் வருடத்திற்கு இரண்டு முறை தேரோட்டமும் சிறப்பாக நடைபெறும். ஆவணி மற்றும் மாசி திருவிழாவில் குமாரவிடங்க பெருமானே வாகன சேவை கண்டருள்வார். ஆவணி திருவிழாவின்போது வள்ளியம்மை தனியாகவும் மாசி திருவிழாவின்போது தெய்வானை அம்மை தனியாகவும் வாகன சேவை கண்டருள்வார்கள்.
இன்று வெள்ளிக்கிழமையன்றும் நாளை சனிக்கிழமையன்றும் சிவப்பு சாத்தி மற்றும் வெள்ளை சாத்தி, பச்சை சாத்தி கோலங்களில் ஷண்முகர் எழுந்தருளி அருள்பாலிக்க உள்ளார். திருச்செந்தூர் ஷண்முகரை இந்த கோலங்களில் தரிசித்து அவரின் பேரருளைப் பெறுவோம்.