‘இறைவனின் ஒளி’ பஹாவுல்லா வழியில் ஏழு மில்லியன் மக்கள்!

Bahaullah
Bahaullah

நானே இறைவன் என்றும், இறைத்தூதர் என்றும் அறிவித்துக் கொண்டவர்கள் பலர் இருக்கின்றனர். அப்படி அறிவித்துக் கொண்டவர்களது வழியைப் பின்பற்றித் தங்களது வாழ்க்கையை மாற்றிக் கொண்டவர்களும் அதிகமாகத்தான் இருக்கின்றனர்.

1844 ஆம் ஆண்டில் பாரசீக (தற்போதைய ஈரான்) நாட்டில் ஷிராஸ் எனும் நகரில் இருந்த சையது அலி முகம்மது என்பவர், பாப் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டு, அனைத்துச் சமயங்களிலும் வாக்களிக்கப்பட்ட இறைத்தூதர் தாமே என்று தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டார். அதன் பிறகு, “எனக்குப் பின்னால் வரவிருக்கும் ஒரு மாபெரும் இறைத்தோற்றத்தின் முன்னோடியும் நானே” என்றார்.

அதனைத் தொடர்ந்து, 1863 ஆம் ஆண்டில், பாரசீக (தற்போதைய ஈரான்) நாட்டின் தெஹரான் நகரத்தின் மேல்குடிகளில் ஒருவரான மிர்சா ஹூசைன் அலி என்பவர், தனது பெயரை அரபி மொழியில், ‘இறைவனின் ஒளி’ எனப் பொருள் தரும் பஹாவுல்லா என்று மாற்றிக் கொண்டு, தனது அரச வாழ்க்கை மற்றும் பாதுகாப்பைத் துறந்து, ஈராக் நாட்டின் பாக்தாத் நகருக்குச் சென்று, அங்கு பாப் அவர்களால் சொல்லப்பட்ட, ‘இறைவனின் தோற்றம் தானே’ என்று அறிவித்தார்.

அவரது அறிவிப்பைத் தொடர்ந்து, பாப் கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்கள் அனைவரும் பஹாவுல்லாவை ஏற்றுக் கொண்டனர். பஹாவுல்லாவை இறைவனாகக் கொண்டு, பஹாய் சமயம் தோன்றியது. இன்று உலகம் முழுவதும் சுமார் 7 மில்லியன் பேர் பஹாய் சமயக் கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
அஷ்ட திக் கஜங்கள் வணங்கிய அத்திகிரி அருளாளனின் தேரோட்டம்!
Bahaullah

பஹாவுல்லா, பெருந்துன்பம் மற்றும் இல்லாமைக்கிடையே, ஒற்றுமை மற்றும் ஐக்கியம் குறித்த மனம் நெகிழச் செய்கின்ற செய்தி ஒன்றை மனிதக் குலத்திற்கு அளித்தார். பஹாவுல்லா, தாம் புதிய மற்றும் சுதந்திரமான இறைத்தூதர் என்பதையும் மிகத் தெளிவாக அறிவித்தார். அவரது வாழ்வுமுறை, செய்த செயல்கள் மற்றும் அவருடைய செல்வாக்கு போன்றவை ஆபிரகாம், மோசே, ஸோராஸ்டர், புத்தர், இயேசு, முகம்மது நபி ஆகியோரைப் பிரதிபலித்தது. பஹாவுல்லாவைத் தெய்வீகத் தோற்றங்களின் தொடர்வரிசையில் மிகவும் அண்மையில் தோன்றியவர் என்று அவரது வழியைப் பின்பற்றி வரும் பஹாய் சமயத்தினர் கருதுகின்றனர்.

பஹாவுல்லாவின் அடிப்படையான செய்தி ஐக்கியம் குறித்ததாகும். இறைவன் ஒருவரே எனவும், ஒரு மனித இனமே உள்ளது எனவும், உலகின் சமயங்களெல்லாம் மனிதக் குலத்திற்கான இறைவனின் விருப்பம், நோக்கம் ஆகியவற்றின் படிப்படியான கட்டங்களைப் பிரதிபலிக்கின்றன எனவும் அவர் போதித்தார். மனிதக்குலம் இக்காலத்தில் கூட்டாக முதிர்ச்சி நிலை அடைந்துவிட்டதென பஹாவுல்லா கூறினார். உலகப் புனித சாஸ்திரங்களில் முன்னறிவிக்கப்பட்டுள்ளது போல், எல்லா மக்களும் ஒரே அமைதியான ஒன்று சேர்க்கப்பட்ட உலகளாவிய சமூகமாக ஐக்கியப்படுத்தப்பட வேண்டிய காலம் கனிந்துவிட்டது, “உலகம் ஒரே நாடு, மனிதர்கள் யாவரும் அதன் குடிகள்” என அவர் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com