வங்கார தோசை என்பது நவதிருப்பதிகளில் ஒரு திருப்பதியான ஆழ்வார்திருநகரி ஆதிநாதன் பெருமாள் திருக்கோயிலின் முக்கிய பிரசாதமாகும். நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் இத்தலம் 51வது திவ்ய தேசமாகும். தூத்துக்குடி மாவட்டத்தில் புண்ணிய நதியான தாமிரபரணி நதியின் கரையில் அமைந்துள்ளது. இத்திருத்தலத்தை மையமாகக் கொண்டு சுமார் இருபது கிலோ மீட்டர் சுற்றளவில் நவதிருப்பதிகள் என போற்றப்படும் ஒன்பது திவ்யதேசங்கள் அமைந்திருப்பது மிகவும் சிறப்பாகும். இத்திருத்தலத்தையும் சேர்த்து ‘நவதிருப்பதி’ எனப்படுகிறது.
ஆழ்வார்திருநகரி மூலவர் ஆதிநாதருக்கு தினமும் காலை வேளைகளில் ஆறு எண்ணிக்கையில் வங்கார தோசை நைவேத்தியம் செய்யப்படுகிறது. இது மட்டுமின்றி, தென்திருப்பேரை திருத்தலத்திலும் இந்தப் பிரசாதம் முக்கிய உத்ஸவங்களின்போது வழங்கப்படுகிறது.
முன்னொரு காலத்தில் படைக்கும் தொழிலை செய்து வந்த பிரம்மன் மகாவிஷ்ணுவை குறித்து தவம் செய்ய சிறந்த இடத்தை கூறும்படி மகாவிஷ்ணுவிடமே வேண்டினார். அதற்கு மகாவிஷ்ணுவும், “நான்முகனாகிய உனை நான் படைக்கும் முன்பே பூலோகத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையில் சுயம்புமூர்த்தமாக எழுந்தருளியுள்ளோம். அந்த இடமே நீர் தவம் செய்ய ஏற்ற இடம்” என்று கூறினார்.
பிரம்மனும் பூலோகம் வந்தடைந்து தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள ஆழ்வார்திருநகரி பகுதியில் மகாவிஷ்ணுவை குறித்து கடுந்தவம் புரிந்தார். அந்த தவத்தின் பயனாக மகாவிஷ்ணு பிரம்மனுக்குக் காட்சியளித்து, குருவாக இருந்து படைப்புத் தொழிலுக்குரிய வேத மந்திரங்களை உபதேசித்தருளினார். பிரம்மன் இங்கு தவமியற்றுவதற்கு முன்பே சுயம்பு மூர்த்தமாய் பெருமாள் எழுந்தருளியிருந்ததால் இத்தலத்திற்கு 'ஆதிபுரி' என்றும் இத்தல பெருமாளுக்கு 'ஆதிநாதர்' என்றும் பெயர் ஏற்பட்டது. பெருமாள் பிரம்மனுக்கு குருவாக இருந்து உபதேசித்ததால் ‘திருகுருகூர்’ என்றும் வழங்கப்படுகிறது.
ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் அவதார தலமாகும். நம்மாழ்வாரின் பதினொரு பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள இத்தலத்தின் தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் மற்றும் தாமிரபரணி நதி ஆகியவை ஆகும். ஆழ்வார் பெயராலேயே வழங்கப்பெறும் ஒரு அபூர்வமான திருத்தலம் இதுவாகும்.
கோவிந்த விமானத்தின் கீழ் கிழக்கு திசை நோக்கி நின்ற திருக்கோலத்தில் பெருமாள் ஆதிநாதன் என்ற திருநாமத்தோடு அருள்பாலிக்கிறார். தல விருட்சம் உறங்காப்புளி என்று அழைக்கப்படும் புளியமரம் ஆகும். இவ்விருட்சம் திருப்புளி ஆழ்வார், உறங்காப்புளி என்னும் இரு திருநாமங்களோடு அழைக்கப்பட்டு வருகிறது. உறங்காப்புளி என்று அழைக்கப்படும் புளியமரம் பூக்கும், காய்க்கும், ஆனால் பழுக்காது. இதன் இலைகள் இரவில் உறங்காது. எனவேதான் உறங்காப்புளி எனப் பெயர் பெற்று அழைக்கப்படுகிறது.
பெருமாளுக்கு பங்குனி, சித்திரை ஆகிய மாதங்களில் இரு உத்ஸவங்களும், ஆழ்வாருக்கு மாசி, வைகாசி ஆகிய மாதங்களில் இரு உத்ஸவங்களும் மிகவும் பிரசித்தி பெற்ற உத்ஸவங்களாகும்.. மேலும், வைகுண்ட ஏகாதசி, அரையர் சேவை, கருட சேவை, சித்ரா பௌர்ணமி, உறியடி, கிருஷ்ண ஜயந்தி, நவராத்திரி, ஊஞ்சல் உத்ஸவம் முதலான விசேஷங்கள் இத்தலத்தில் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.
திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரெயில் பாதையில், ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் ஆழ்வார்திருநகரி அமைந்துள்ளது.
வங்கார தோசை செய்யத் தேவையான பொருட்கள்: பச்சரிசி - 2 கப், தோலுடன் முழு கருப்பு உளுந்து - 1 கப், சுக்குப் பொடி - 1 டேபிள் ஸ்பூன், மிளகுப் பொடி - 1 டேபிள் ஸ்பூன், நெய் - தேவையான அளவு, கல் உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பச்சரிசியையும் முழு கருப்பு உளுந்தையும் தனித்தனியே நான்கு அல்லது ஐந்து மணி நேரம் ஊற வைத்துக்கொள்ள வேண்டும். இரண்டையும் தனித்தனியாக அரைத்து பின்னர் ஒன்றாகக் கலந்துகொள்ள வேண்டும். கரகரப்பாக அரைத்த சுக்குப்பொடி, மிளகு பொடியை அரைத்த மாவில் கலந்து பின்னர் உப்பை சேர்க்க வேண்டும். இரவு முழுவதும் புளிக்க வைத்து மறுநாள் காலை மூன்று கரண்டி மாவை எடுத்து தடிமனாக தோசை போல வார்க்க வேண்டும். நெய்யை நன்கு ஊற்றி பதமாக வெந்ததும் எடுத்துப் பரிமாற வேண்டும்.