கால்கள் ஆரோக்கியமாக இருக்கும்போதுதான் இரத்த ஓட்டம் சீராகப் பாய்கிறது. எனவே, வலுவான கால் தசைகள் உள்ளவர்களுக்கு நிச்சயமாக வலுவான இதயம் இருக்கும். முதுமை காலில் இருந்து மேல் நோக்கித் தொடங்குகிறது. ஒரு நபர் இளமையாக இருப்பதைப் போலல்லாமல், அவர் வயதாகும்போது, மூளை மற்றும் கால்களுக்கு இடையே உள்ள அறிவுறுத்தல்களின் துல்லியம் மற்றும் வேகம் குறைகிறது. மேலும், எலும்பு உரம் என்று அழைக்கப்படும் கால்சியம் காலப்போக்கில் குறைகிறது. இதனால் வயதானவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்படும். முதியவர்களுக்கு ஏற்படும் எலும்பு முறிவுகள், தொடர்ச்சியான சிக்கல்களை, குறிப்பாக மூளை இரத்த உறைவு போன்ற கொடிய நோய்களை எளிதில் தூண்டலாம்.
இவற்றைத் தவிர்க்க தினமும் நடைப்பயிற்சி செய்யுங்கள் அல்லது முடிந்தளவுக்கு கால்களுக்கு இயக்கம் கொடுங்கள். கால்களுக்கு உடற்பயிற்சி செய்வது, 60 வயதிற்குப் பிறகும் தாமதம் என்று நினைக்க வேண்டாம். கால்களை தொடர்ந்து வலுப்படுத்துவதன் மூலம் மட்டுமே, ஒருவர் மேலும் வயதாவதைத் தடுக்கலாம் அல்லது குறைக்கலாம். உங்கள் கால்கள் போதுமான உடற்பயிற்சி பெறுவதையும், கால் தசைகள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்யவும் தினமும் குறைந்தது 30 முதல் 40 நிமிடங்கள் நடக்கவும். முடியாத நிலையில் முடிந்த மட்டும் நடந்து கொண்டே இருங்கள்.
நடைப்பயிற்சி மிகச் சிறந்தது என்பது தெரிந்ததுதான். அதிலும் மெதுவாக நடப்பதை விட வேகமாக நடைப்பயிற்சி செய்வது உங்கள் வாழ்நாளை அதிகரிக்கச் செய்கிறது என்கிறார்கள் சிட்னி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். மணிக்கு 5 முதல் 7 கி.மீ. வேகத்தில் நடந்தால் இதயநோய் மற்றும் புற்றுநோய் அபாயங்கள் தவிர்க்கப்படுகிறது.
நடப்பதால் வரும் நன்மைகள்: இரத்த நாள இறுக்க நோய் (atherosclerosis) உருவாவதைத் தடுக்கிறது. இரத்த அழுத்தம் மற்றும் இரத்த ஓட்ட நிலைமையை மேம்படுத்துகிறது. தசைகளுக்கு இயக்கத் திறனையும், வலிமையையும் தருகிறது. செயல் திறனை அதிகரிக்கிறது. உங்களது சுறுசுறுப்பை அதிகரிக்கிறது. உடல் கலோரி எரிக்கும் ஆற்றலின் அளவை அதிகரிக்கும். எலும்புகளுக்கு உரமூட்டி, எலும்பு மென்பாடு அடைவதை (osteoporosis) கட்டுப்படுத்துகிறது. நீரிழிவு நோயை தவிர்க்க உதவுகிறது. மன இறுக்கம், மனப்பதற்றம் ஆகியவற்றைக் குறைக்க உதவுகிறது. உங்கள் மன ஆற்றலைப் பெருக்க உதவுகிறது. தன்னம்பிக்கையை வளர்க்க உதவுகிறது. முதுமையை தள்ளிப்போட வைக்கிறது.
உங்கள் உடல் எடை அதிகரிக்காமல் இருக்க நடைப்பயிற்சி சிறந்த மருந்து என்று மிச்சிகனில் உள்ள வில்லியம் மருத்துவ மையம் கூறுகிறது. நடைப்பயிற்சி மூலம் 1600 கலோரி ஒரு வாரத்தில் செலவாகிறது. இதனால் இன்று வாங்கும் உங்கள் உடையை 10 ஆண்டு கழித்து அணிந்தாலும் சரியாக இருக்குமாம்.
நடைப்பயிற்சியுடன் உடற்பயிற்சியும் சேர்ந்தால் முதியவர்களின் மூளை கூட நல்ல ஆற்றலுடன் செயல்பட்டு அவர்களின் சுய மதிப்பை உயர்த்துகிறதாம். 45, 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஒரே ஒரு வாரத்தில் சுய மதிப்பு அதிகரித்து உள்ளதை பிட்ஸ்பர்க் மருத்துவக் கல்லூரி ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நடப்பது உங்கள் வாழ்நாளை மட்டுமல்ல, உங்கள் சுய மதிப்பையும் அதிகரிக்கிறது.