

1909ம் ஆண்டு பாபாவின் நித்ய பூஜையும் ஆரத்தியும் ஆரம்பமானது.
ஆனால் குரு பூர்ணிமா அன்று விசேஷ பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை.
அந்த வருடம் குரு பூர்ணிமா வந்தது. பாபா அணுக்கத் தொண்டரான தாதா கேல்கரை தன்னிடம் வரச் சொன்னார். அவரும் வந்தார்.
அவரிடம் பாபா, “இன்று குரு பூர்ணிமா தினம் என்பது உனக்குத் தெரியாதா, என்ன? உனது பூஜை சாமான்களை எல்லாம் கொண்டு வந்து குருவுக்கு பூஜை செய்” என்றார்
அவ்வளவு தான், ஓடோடிச் சென்ற கேல்கர் பூஜா திரவியங்களைக் கொண்டு வந்து வெகு விமரிசையாக குரு பூஜையைச் செய்தார்.
அன்று ஆரம்பித்த குரு பூர்ணிமா தினத்தன்று செய்யும் குரு பூஜை இன்று வரை தொடர்கிறது.
ஆனால் ஹெச்.வி.சாதே என்ற பக்தர் சிவராத்திரி தினத்தன்று நள்ளிரவில் வழிபட வந்த போது, பாபா வேண்டாம் என்று கூறி அதை மறுத்து விட்டார்.
ஒரு முறை பாபா கூறினார் இப்படி:
“இந்த உலகம் வேடிக்கையானது. எல்லோரும் எனக்கு வேண்டியவர்களே. எல்லோரையும் சமமாக நோக்கி நான் சமமாக பாவிக்கிறேன். ஆனால் சிலரோ திருடர்களாக மாறி விடுகிறார்கள். அவர்களுக்காக நான் என்ன செய்ய முடியும்? மரண வாயிலில் இருக்கும் அவர்கள் மற்றவர்களைத் தீர்த்துக் கட்டத் திட்டம் தீட்டுகிறார்கள்! அவர்கள் எனக்கு மிகுந்த வேதனை தருகிறார்கள். நான் பேசாமல் அமைதியாக இருந்து விடுகிறேன். கடவுள் மிகப் பெரியவர். அவர் மிகவும் சக்தி வாய்ந்த தனது அதிகாரிகளை எங்கும் கொண்டிருக்கிறார். அவர்களிடம் அனைவரும் திருப்தியுடன் இருக்க வேண்டும்.
நான் மிகவும் சக்தி வாய்ந்தவன். நான் இங்கு எட்டாயிரம் அல்லது பத்தாயிரம் வருடங்களுக்கு முன் இருந்திருக்கிறேன்."
பாபா இப்படி தன்னைப் பற்றி அபூர்வமாகக் கூறிய தருணம் இது.
அவர் ஹிந்துக்களையும், இஸ்லாமியரையும், கிறிஸ்தவர்களையும் சமமாகவே பாவித்தார். அருள்புரிந்தார்.
இதை விளக்கும் ஏராளமான சம்பவங்கள் உண்டு.
29-8-1835 அன்று அவதாரமெடுத்த ஷீர்டி சாயிபாபா 15-10-1918 அன்று மகா சமாதி அடைந்தார்.
அதுவரை அவரது வாழ்வில் ஏராளமான அற்புதமான சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டே இருந்தன.
படிக்கப் படிக்கத் திகட்டாத பல ஆன்மீக ரகசியங்களை விளக்குபவை அவை என்பது மட்டும் திண்ணம்!