கன்னியாகுமரி மாவட்டத்தில் சைவ வைணவ ஒற்றுமையை பறைசாற்றும் வரலாற்று சிறப்புமிக்க சிவாலய ஓட்டம் பிப்ரவரி மாதம் இருபத்தைந்தாம் தேதி தொடங்குகிறது.
சிவாலய ஓட்டத்துக்காக கன்னியாகுமரி மாவட்டம் முன்சிறை அருகே உள்ள திருமலை சூலபாணி மகாதேவர் ஆலயத்தில் இருந்து தொடங்கி, திக்குறிச்சி மகாதேவர் ஆலயம், திற்பரப்பு வீரபத்திரர் ஆலயம், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் ஆலயம், பொன்மலை தீம்பிலான் குடி மகாதேவர் ஆலயம், திருப்பன்னிப்பாகம் கிராத மூர்த்தி ஆலயம், கல்குளம் நீலகண்ட சுவாமி ஆலயம், மேலாங்கோடு காலகாலர் ஆலயம், திறுவிடைக்கோடு சடையப்பர் ஆலயம், திருவிதாங்கோடு பக்தவச்சலன் ஆலயம், திருப்பன்றி கோடு பருதிபாணி மகாதேவர் ஆலயம், திருநாட்டாலும் சங்கரநாராயணர் ஆலயம், ஆகிய பன்னிரண்டு சிவாலயங்களுக்கு பக்தர்கள் ஓட்டமாக சென்று சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
சிவராத்திரி தினத்துக்கு முந்தைய நாளில் காவி உடையணிந்து, கையில் விசிறியுடன் கோபாலா கோவிந்தா என்ற நாம கோஷத்தை எழுப்பி, ஒவ்வொரு ஆலயமாக ஓடியவாறு சென்று தரிசனம் செய்கின்றனர். நூற்றிபத்து கிலோமீட்டர் தொலைவு கொண்ட இந்த ஓட்டத்தில் பெண்கள் ஆண்கள் குழந்தைகள் முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்கின்றனர். ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்கள் ஆலயங்களில் உள்ள குளத்தில் குளித்துவிட்டு ஆலயங்களுக்குள் செல்ல வேண்டும். தங்கள் கைகளில் வைத்திருக்கும் விசிறியால் சுவாமிக்கு வீசி கொடுக்க வேண்டும் என்பதும் ஐதீகம்.
சிவாலயம் ஓட்டத்தின் முதல் ஆலயமான திருமலை சூலபாணி மகாதேவர் ஆலயத்தில் பக்தர்களுக்கு பிரசாதமாக சந்தனமும் ஓட்டம் நிறைவடையும் திருநட்டாலும் சங்கரநாராயணர் ஆலயத்தில் பிரசாதமாக விபூதியும் வழங்கப்படுகிறது.
சிவாலய ஓட்டம் குறித்து மக்களிடையே ஒரு கதை நிலவி வருகிறது. இந்த கதை நெல்லை மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் கோவிலில் சிற்பமாக செதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
பாண்டவர்களுள் முதல்வரான தர்ம புத்திரனுக்கு புருஷா மிருகத்தின் பால் தேவைப்பட்டது. அந்த ராட்சச மிருகத்திற்கு சிவன் மீது மிகுந்த பக்தியும் விஷ்ணுவின் மீது மிகுந்த வெறுப்பும் உண்டு.
பீமனின் கர்வத்தை அடக்கவும், சிவனும் விஷ்ணுவும் ஒன்று என்று வியக்கரபாத மகரிஷிக்கு பாடம் புகட்டவும், பீமன் பால்கொணர மகாவிஷ்ணு கட்டளை இடுகிறார் பன்னிரு உத்திராட்சங்களை பீமனின் கையில் கொடுத்து, 'உனக்கு ஏதாவது ஆபத்து வருமாயின் இதில் ஒன்றை கீழே போட்டுவிடு' என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். பீமன் தயக்கத்துடன் உத்திராட்சங்களை வாங்கிக் கொண்டு புறப்படுகிறான். அங்கு புருஷா மிருகம் கடுந்தவம் புரிந்து கொண்டிருக்கிறது. 'கோவிந்தா கோபாலா' என்று குரல் எழுப்பியபடியே பீமன் பால் பெற முயற்சி செய்கிறான். கோவிந்தா என்ற வார்த்தையை கேட்ட உடனே புருஷா மிருகத்திற்கு சிவலிங்கம் விஷ்ணுவாக தெரிய, அதன் தவம் கலைக்கப்படுகிறது. சிவ பூஜையில் புகுந்த பீமனை புருஷா மிருகம் பிடித்துக் கொள்ள ஒரு உத்திராட்சக் காயை அந்த இடத்தில் போட்டு விடுகிறான் பீமன். உடனே ஒரு சிவலிங்கம் உருவாகிவிடுகிறது. புருஷா மிருகம் ஆழ்ந்த சிவநெறிச் செல்வராகியதால் லிங்க பூஜையை ஆரம்பித்து விடுகிறது. சிறிது நேரம் கழித்து பீமன் மீண்டும் மீண்டும் கோவிந்தா கோபாலா என குரல் எழுப்பி பால் பெற முனையும் போது, புருஷா மிருகம் பற்றிக்கொள்ள அடுத்த காயை அங்கு போட்டான். இவ்வாறு பன்னிரு உத்திராட்சக்காய்களும் பன்னிரு சைவத்தலங்களை உருவாக்கி விடுகின்றன.
இவ்வாறு பீமன் ஓடியதை அறிவுறுத்தின்ற வகையில் குமரி மாவட்டத்தில் இன்றும் பக்தர்கள் பன்னிரு சிவாலயங்களுக்கும் ஓடி சென்று வழிபடுகின்றனர். இதற்காக மாசி ஏகாதசியின் ஒரு வாரத்திற்கு முன்பே மாலை அணிந்து விரதம் மேற்கொள்வார்கள். விரத நாட்களில் அவர்கள் பகல் நேரத்தில் கருக்கும் நுங்கும் இரவு நேரத்தில் துளசி இலையும் தண்ணீரும் உணவாக உட்கொள்கின்றனர். வேகவைத்த பதார்த்தங்கள் எதுவும் சாப்பிடுவதில்லை. ஓடும் போது கோவிந்தா கோபாலா என்ற பக்தர்கள் குரல் எழுப்புவார்கள். சிவராத்திரி அன்று சிவபெருமானை தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் 'கோவிந்தா கோபாலா' என்று குரல் எழுப்பிச் செல்வது சிவனும் விஷ்ணுவும் ஒன்று என்ற உண்மையை புலப்படுத்துகிறது. இவ்வாறு ஓடி முடித்தால் சிவன் விஷ்ணு ஆகிய இருவருடைய அருளையும் பெறலாம் என பக்தர்கள் நம்புகின்றனர்.