தெய்வ நம்பிக்கை என்பது, மனதுக்கு உறுதியையும், உடலுக்கு வலுவையும், சாதிக்கும் ஆர்வத்தையும், நேர்மையான வழிமுறைகளையும் போதிக்கிறது. யானைக்குத் தும்பிக்கை உதவுவதுபோல, மனிதனுக்கு நம்பிக்கை உதவுகிறது. ’மனதில் நம்பிக்கை இருந்தால் பெரும் வாய்க்காலையும் தாண்டலாம்; நம்பிக்கை இல்லா விட்டால் கன்னி வாய்க்காலைக் கூடத் தாண்ட முடியாது!’ என்பது டெல்டா மாவட்டங்களில் வழங்கி வரும் பழமொழி. வாய்க்கால் 6,7 அடி அகலமுடையது; கன்னி வாய்க்காலோ இரண்டு, மூன்று அடி அகலமே கொண்டது.
நம்பிக்கை என்பது பயத்தைப் போக்கி, செயலை விரைந்து முடிக்கும் பலத்தை, உடலுக்கும் மனதுக்கும் ஒரு சேர அளிப்பது. இரண்டும் இணைந்து செயல்படுகையில் எச்செயலும் இலகுவாகும். வெறும் நம்பிக்கையுடன் இறை நம்பிக்கையும் இணையுமானால் இப்பூவுலகில் அனைத்தும் சாத்தியமே. நியாயமான குறிக்கோளுடன், அதனை அடைய அனைத்து முயற்சிகளையும் அயர்வின்றி மேற்கொள்பவர்கள், வெற்றிக் கனியை மகிழ்ந்து சுவைப்பார்கள்!
‘ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!’ என்றுதான் நம் முன்னோர்கள் முதலில் போதித்தார்கள். மனித மனம், போட்டி, பொறாமைகளால் எளிதில் மாறக் கூடியது. உயர்ந்த சிந்தனைகள் கொண்டவர்கள் கூட மன மாச்சரியங்களுக்கு ஆளாகி மாறிப் போவதை நம் அன்றாட வாழ்வில் கண்டு கொண்டுதானே இருக்கிறோம். அந்த மனித இயல்பைக் கடந்து வருவது எல்லோராலும் முடியாதது. பெரும்பான்மையினர் அந்தச் சுழலில் சிக்கித் தங்கள் முன்னேற்றத்தைக் கெடுத்துக் கொள்கிறார்கள்.
இது ஒரு புறமிருக்க, போட்டிகள் வளர ஆரம்பித்ததால் அரி என்றும் சிவன் என்றும் இரண்டாக்கி, அவரவர் குழுவே உயர்ந்ததென்று மார் தட்ட ஆரம்பித்தார்கள். நடுவில் வந்த பெரியோர்கள் ‘அரியும் சிவனும் ஒன்றே! அறியாதார் வாயில் மண்ணே!’ என்று போதித்துச் சென்றார்கள். இருப்பினும் முழு ஒற்றுமை எட்ட இன்னும் சில காலம் ஆகலாம் என்றே தோன்றுகிறது.
‘குல தெய்வ வழிபாடு கோடி நன்மை தரும்’ என்றாலும், இஷ்ட தெய்வ வழிபாடும் இணையான நன்மை பயக்கும் என்றார்கள். எமக்கு அங்காள பரமேஸ்வரி குல தெய்வம் என்றாலும், இஷ்டதெய்வமாக எழில் முருகன் இதயத்தில் அமர்ந்து விட்டார். அறுபடை வீடுகளிலும், இருபதுக்கும் மேற்பட்ட எழிலான இடங்களிலும் முதன்மை பெற்று அருள் பாலித்து வரும் செந்தில் நாதனின் சிறப்புக்களை விரித்தால் மிக நீளும்!
ஆறு தலைகள் கொண்ட முருகனுக்கு, அறுபடை வீடுகள் பொருத்தமானவைதானே! எளிதில் நினைவு கொள்ள இந்த ஃபார்முலா உதவும்! தி4சு1ப1 என்பதே அது! ஆர்டரில் சொல்ல வேண்டுமானால் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருவாவினன்குடி (பழனி), சுவாமிமலை, திருத்தணி மற்றும் பழமுதிர்சோலை என்று வருகிறது.
அறுபடை வீடுகளுக்கு அடுத்தபடியாக மருதமலை, எட்டுக்குடி, சிக்கல், எண்கண், வயலூர், காங்கேயம் ஆகிய திருத்தலங்கள் வரிசை கட்டுகின்றன. அதில் எட்டுக்குடி, சிக்கல், எண்கண் ஆகியவற்றின் மூலவர் சிலைகள் ஒரே சிற்பியால் செதுக்கப்பட்டதாகவும், அதனால் ஒன்றுபோல் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது!
அரசியல் கட்சிகள் கூட்டணி ஏற்படுத்திக்கொண்டு தேர்தல்களைச் சந்திப்பது தற்போதுதான் பெருகி வருகிறது. ஆனால் அக்காலத்திலேயே கோயில்களில் சைவத்தையும், வைணவத்தையும் ஒன்றிணைத்து ஒற்றுமை கண்டார்கள்! அது போலவே திருமாலையும், முருகனையும் ஒரே கோயிலில் பிரதிஷ்டை செய்தார்கள்!
திருமால் அவதாரமான ராமரின் பெரும்பக்தனான அனுமனையும், இளம் முருகனையும் ஒரே ஆலயத்தில் வைத்து வழிபட்டு, வேற்றுமையிலும் ஒற்றுமையைக் கண்டார்கள்!
சைவமும், வைணவமும் இணைந்த தலங்கள் இருபத்தி எட்டாம்.
மாலும், மருகனும் இணந்த தலங்கள் ஐந்தாம்.
முருகனும் அனுமனும் ஒன்று சேர உள்ள தலங்களும் ஐந்தாம்.
எவையெவை என்றுதானே யோசிக்கிறீர்கள்!
சிக்கல் சிங்கார வேலர் கோயிலின் விபரப் பலகையே இதோ! நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்ளுங்களேன்!
ஒற்றுமையுடன் வாழ்வோம்!
ஒன்றாய் உயர்வோம்!