பாண்டவர்கள் வனவாசம் முடிந்து திரும்பினாலும் அவர்களுக்கு தேசத்தை திருப்பித் தர மாட்டோம் என்றான் துரியோதனன். இதையடுத்து, பாண்டவர்களின் சார்பில் தூதராகச் சென்று துரியோதனனை சந்திக்க முடிவு செய்தார் ஸ்ரீ கிருஷ்ணர். இதையறிந்த பீஷ்மர், துரோணர் மற்றும் துரியோதனன் உள்ளிட்டோர் தங்களது மாளிகையில் ஸ்ரீ கிருஷ்ணனை தங்க வைத்து உபகரிக்க விரும்பினர். எனவே தங்களது மாளிகைகளை அழகுபடுத்தினர். ஊரெங்கும் தோரணங்களைக் கட்டி
ஸ்ரீ கிருஷ்ணரை வரவேற்க ஏற்பாடுகளைச் செய்தனர்.
ஹஸ்தினாபுரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. இதுகுறித்த எந்தத் தகவலும் விதுரருக்குத் தெரியாது. யார் இந்த விதுரர்? வியாசரின் மைந்தர். திருதராஷ்டிரரின் சகோதரன். ஞானம் படைத்தவர். தர்ம தேவதையின் அம்சமானவர். எல்லாவற்றுக்கும் மேலாக ஸ்ரீ கிருஷ்ணரிடம் பெரும் மதிப்பும் பக்தியும் கொண்டவர். ஆனால், அரசாங்க விஷயத்தை பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு விதுரர் ஒன்றும் முக்கியத்துவம் வாய்ந்தவர் அல்ல என்று துரியோதனன் கருதினான் போலும். எனவேதான், ஸ்ரீ கிருஷ்ணரின் வருகையை பற்றி அவரிடம் எதுவும் தெரிவிக்கவில்லை.
ஹஸ்தினாபுரத்திற்கு வந்து சேர்ந்தார் ஸ்ரீ கிருஷ்ணர். அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றார் பீஷ்மர். மிகுந்த அலங்காரத்துடன் திகழ்ந்த அம்மாளிகையைக் கண்ட கிருஷ்ணர், ‘இது யார் மாளிகை?’ என்று கேட்டார். ‘எனது மாளிகைதான். தங்களது வருகையை ஒட்டி அலங்கரித்துள்ளேன்’ என்றார் பீஷ்மர். இதைக்கேட்ட ஸ்ரீ கிருஷ்ணர் எதுவும் பேசாமல் அங்கிருந்து மெல்ல நகர்ந்தார்.
வரவேற்க வந்தவர்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். அடுத்து ஒரு மாளிகையைக் கண்டார். அது பீஷ்மரது மாளிகையை விட பிரம்மாண்டமாக இருந்தது. ‘இந்த மாளிகை யாருடையது?’ என மீண்டும் வினா எழுப்பினர் ஸ்ரீ கிருஷ்ணர். உடனே துரோணர், ‘இது என்னுடையது கிருஷ்ணா. இங்கே எல்லா வசதிகளும் உள்ளன. தாங்கள் தங்குவதற்காக ஏற்பாடு செய்துள்ளேன்’ என்றார். அதனுள்ளும் செல்லாமல் நடையை தொடர்ந்தார் ஸ்ரீ கிருஷ்ணர். அடுத்து தென்பட்டது துச்சாதனனின் மாளிகை. ‘எனது மாளிகையை தங்களுக்காகவே உல்லாசபுரியாக மாற்றி உள்ளேன்’ என்றான் துச்சாதனன். அவன் சொன்னதை ஸ்ரீ கிருஷ்ணர் தனது காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை. மாளிகைகளின் ஆடம்பரமும், ‘என்னுடையது, என் மாளிகை’ என்ற அவர்களது வார்த்தைகளில் தொனித்த கர்வமும் ஸ்ரீ கிருஷ்ணருக்கு அறவே பிடிக்கவில்லை. அங்கிருந்து அகன்றவர், தான் செல்லும் வழியில் சிறிய குடிசை ஒன்றைக் கண்டார்.
‘அட, இந்தக் குடிசை அழகாக இருக்கிறதே. இதன் உரிமையாளர் யார்?’ என்று கேட்டார். அதற்குள் அரவம் கேட்டு வெளியில் வந்த விதுரர், ஸ்ரீ கிருஷ்ணரைக் கண்டதும் முகம் மலர்ந்தார். ‘இது உனது வீடு கிருஷ்ணா. உனது அருளால் அடியேன் இங்கு வசிக்கிறேன். இந்த இல்லத்தில் உன் திருப்பாதங்கள் பட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். தயவு செய்து உள்ளே வர வேண்டும்’ என்று கூறி, ஸ்ரீ கிருஷ்ணனின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார். கிருஷ்ணருக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. மிகுந்த உற்சாகத்துடன் அந்தக் குடிசைக்குள் நுழைந்தார்.
பிறகு, ‘என்ன விதுரா, உங்களது வீடு தேடி வந்திருக்கிறேன். எனக்குப் பசிக்கிறது. சாப்பிட எதுவும் தர மாட்டீர்களா?’ என்று உரிமையுடன் கேட்டார் ஸ்ரீ கிருஷ்ணர். ‘காலையில் கஞ்சி மட்டுமே குடிப்பது அடியேன் வழக்கம். இன்றைக்கும் அவல் கஞ்சி உள்ளது. ஆனால், அதை எப்படித் தங்களுக்கு…’ என்று தயங்கினார். ஆனால், கிருஷ்ணர் குதூகலம் அடைந்தார். ‘அடடா, அவல் கஞ்சியா? எனக்கு ரொம்பவே பிடிக்கும். கொடு விதுரா’ என்று முகம் நிறைய உற்சாகமானார் ஆவலுடன்.
உடனே விதுரர், ஒரு குவளையில் கஞ்சியை ஊற்றிக் கொண்டு வந்து கொடுக்க, அதை ரசித்துக் குடித்தார் கிருஷ்ணன். இதைக் கண்டதும் விதுரரின் கண்களில் நீர் பெருக்கெடுத்தது. ‘என்ன விதுரரே? ஏன் உங்கள் விழிகளில் நீர் பெருக்கெடுக்கிறது?’ என்று பரிவுடன் கேட்டார் கிருஷ்ணர்.
பாலும் தேனும் கலந்து சுவையான விருந்து படைக்க பீஷ்மர், துரோணர் திருதராஷ்டிரர் முதலானோர் காத்திருக்கிறார்கள். ஆனால், நீயோ இந்த ஏழையின் குடிசையில் கஞ்சி குடிப்பதில் களிப்புறுகிறாயே’ என்றார் விதுரர். அவரைப் பார்த்து புன்னகைத்த ஸ்ரீகிருஷ்ணன், ‘அவர்கள் ஆடம்பர பிரியர்கள். தங்களது அந்தஸ்தை வெளிப்படுத்துவதில் மட்டும் குறியாக இருக்கின்றனர். அவர்களது பேச்சில், ‘நான், எனது’ என்ற அகந்தையே வெளிப்பட்டது. ஆனால், நீங்கள் மட்டுமே, ‘இது உனது இல்லம்’ என்று கூறி என்னைப் பெருமைப்படுத்தினீர்கள். கஞ்சி என்றில்லை. தாங்கள் அன்புடன் சிறிய உத்தரணியில் தீர்த்தம் தந்தாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன்’ என்று கூறி விதுரரை ஆசீர்வதித்துச் சென்றார் ஸ்ரீ கிருஷ்ணர்.