
பொதுவாக அஷ்டமி திதியிலும், நவமி திதியிலும் எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்ய மாட்டார்கள்.
"நவமி திதி அன்றும் அஷ்டமி திதி அன்றும் எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்ய முன்வர மக்கள் பயப்படுகிறார்கள். எங்கள் இருவரையும் ஒதுக்கி வைத்துள்ளார்கள். இது எங்களுக்கு மிக்க வருத்தத்தை அளிக்கிறது" என்று மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டார்கள் அந்த இரண்டு திதிக்கான புருஷர்களும்.
"சற்றே பொறுத்திருங்கள்! உங்கள் இருவரையும் இனி காலம் முழுவதும் போற்றிக் கொண்டாடும் நாள் வரும். அது வரை நீங்கள் காத்திருக்க வேண்டும்" என்றார் விஷ்ணு பகவான்.
இதன்படியே அஷ்டமி அன்று எம்பெருமான் கிருஷ்ணர் அவதாரத்தையும், நவமி திதி அன்று ராமர் அவதாரத்தையும் எடுத்தார். இதன் அடிப்படியில் தான் நாம் எல்லோரும் கோகுலாஷ்டமியை ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்தநாளாகவும், ஸ்ரீ ராமநவமியை ஸ்ரீ ராமர் பிறந்தநாளாகவும் கொண்டாடி வருகிறோம்.
தசாவதாரங்களில் ஸ்ரீ ராம அவதாரம் ஏழாவது அவதாரம். இவரின் திருஅவதாரம் சித்திரை மாசம், நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் நிகழ்ந்தது. ஒரு மனிதனாக இந்த பூமியில் அவதரித்து, மனிதர்கள் அனுபவிக்கும் எல்லா இன்ப துன்பங்களையும் தானும் அனுபவித்து வாழ்ந்து காட்டினார் ஸ்ரீ ராமர். இப்பேர்ப்பட்ட ஸ்ரீ ராமரின் நாமத்தை உச்சரிப்பதன் பலன் அளப்பரியது. இந்த ராம நாமத்தை நம் மகான்கள் போற்றி மக்களை 'நாம ஜெபம்' மட்டுமல்லாமல், 'லிகித ஜெபமாகவும்' செய்ய ஊக்குவித்தார்கள். 'ஸ்ரீ ராம ஜெயம்' என்றும் 'ராம ராம' என்றும் எல்லோரும் பக்தியுடன் எழுதுகிறார்கள். ஸ்ரீ ராமநவமியன்றும் ராம நாமத்தை எழுதுவது நமக்கு மிகுந்த நன்மையையளிக்கும்.
உலகிலேயே மிக எளிய மந்திரமாகவும் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரமாகவும் 'ராம' மந்திரம் விளங்குகிறது. 'ரா' என்றால் அக்னி பீஜம். பீஜம் என்றால் மந்திரம் என்று பொருள். இது அகங்காரத்தை அழிக்கக் கூடியது. 'மா' என்றால் அமிர்த பீஜம். இந்த மந்திரம் நம் மனதில் அன்பை விதைக்கிறது. 'நான்' என்ற அகங்காரத்தை நம் மனதிலிருந்து நீக்கி அன்பை நிரப்புவது தான் 'ராமா' என்னும் மந்திரத்தின் அற்புத சக்தி.
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமுமின்றி தீருமே
இம்மையே இராம என்ற இரண்டெழுத்தினால்
என்று ராம நாமத்தின் சிறப்பை கம்பர் பெருமான் கம்ப இராமாயணத்தில் அழகாகக் கூறுகிறார். இப்பேர்ப்பட்ட பெருமையையுடைய ஸ்ரீ ராம நாமம் ஒலிக்கும் இடங்களிளெல்லாம் ஸ்ரீ ஹனுமன் கூப்பிய கரங்களுடனும், கசிந்த கண்களுடனும் பக்திப் பரவசமாய் வீற்றிருப்பாராம். ஸ்ரீராமனால் சிறந்த பக்தன் என்று போற்றப்பட்ட ஆஞ்சனேயருக்கு வீரம், மனோ பலம், வாக்கு வன்மை என அனைத்துமே ராம நாமத்தின் மகிமையால் கிடைத்தது.
இத்தகைய பெருமை வாய்ந்த ஸ்ரீ ராமர் அவதார தினம் இந்த வருடம் ஏப்ரல் 6ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது. ஸ்ரீ ராம நாமத்தை நாமஸ்மரணை செய்தும், வீட்டில் பூஜை செய்து, நீர் மோரும், பானகமும் நைவேத்யமாக அளித்தும், ஸ்ரீ ராமரின் பஜனைப் பாடல்களை பக்தியோடு பாடியும், ஸ்ரீ ராமர் கோவிலுக்குச் சென்று வழிபட்டும் நாமும் ஸ்ரீ ராம அவதார தினத்தை கோலாகலமாகக் கொண்டாடுவோம்.