
வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் என்னும் ஊரில் அம்பாளின் சிரசுக்கு மட்டும் திருவிழா நடைப்பெறுகிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
ஜமத்கனி முனிவரின் மனைவி தான் ரேணுக்காதேவி. தினம்தோறும் பக்கத்தில் இருக்கும் குளத்துக்கு சென்று நீராடிவிட்டு அந்த குளத்து மண்ணில் பானை செய்து அதில் நீர் எடுத்து வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.
ஒருநாள் குளத்துக்கு செல்லும் போது அந்த குளத்தின் நீரில் கந்தர்வரின் முகம் தெரிகிறது. அந்த அழகை ரசிக்க ஆரம்பிக்கிறார். இதனால் அவருடைய மனதை ஒருமுகப்படுத்த முடியாமல் போய் விடுகிறது. இதனால் புதிதாக பானை செய்ய முடியாமல் தவிக்கிறார். போன மனைவியை காணவில்லையே என்று ஜமத்கனி முனிவர் தன் ஞானக்கண்ணில் பார்க்க நடந்த அனைத்தையும் அறிந்து கோபம் கொள்கிறார்.
தன்னுடைய நான்கு மகன்களை அழைத்து தாயின் தலையை வெட்டி எடுத்துவர சொல்கிறார். மூன்று மகன்கள் மறுத்து விடுகிறார்கள். ஆனால், நான்காவது மகன் பரசுராமன் மட்டும் தாயின் தலையை எடுத்து வருவதாகக் கூறிவிட்டு செல்கிறான்.
தன் மகனே தன்னை கொல்ல வருவதை தெரிந்துக் கொண்ட ரேணுக்காதேவி தப்பித்து சுடுகாட்டில் இருக்கும் வெட்டியான் வீட்டில் சென்று தஞ்சம் அடைகிறார். பரசுராமர் தன் தாயை கொல்ல செல்கிறார். அப்போது வெட்டியானின் மனைவி அதை தடுக்கிறார். பரசுராமன் வெட்டியானுடைய மனைவியையும், தன் தாயுடைய தலையையும் வெட்டி சாய்க்கிறார்.
தன் தாயுடைய தலையை எடுத்துக்கொண்டு ஜமத்கனி முனிவரிடம் சென்று நிற்கிறார் பரசுராமர். ‘உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்!' என்கிறார் ஜமத்கனி முனிவர். உடனே தன் தாயுடைய உயிரை திருப்பி தருமாறுக் கேட்கிறார் பரசுராமர். ஜமத்கனி முனிவரும் உடனே தண்ணீரை கொடுத்து, ‘இதை உன் தாயுடைய உடலில் தெளி. உடனே உயிர் வந்துவிடும்’ என்று கூறுகிறார். ஆனால், அவசரத்தில் வெட்டியான் மனைவி உடலில் தாயின் தலையையும், தாயின் உடாலில் வெட்டியான் மனைவி தலையையும் சேர்த்து வைத்து உயிர் கொடுத்து விடுகிறார் பரசுராமர்.
இந்த புராணக் கதையை விளக்குவதற்காக தான் கெங்கையம்மன் கோவிலில் சிரசு திருவிழா வெகுவிமர்சியாக நடைப்பெறுகிறது. ஒவ்வொரு வருடமும் சிரசு திருவிழா வைகாசி முதல் நாள் கொண்டாடப்படுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் இத்திருவிழாவைக் காணக் கூடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.