
பொன்னேரி அருகே உள்ளது சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கிருத்திகை மற்றும் சஷ்டி தினங்களில் இங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
வரலாறு :
சிறுவாபுரியில் வாழ்ந்த முருக பக்தை முருகம்மையார் கற்பின் மீது சந்தேகம் கொண்ட கணவர், அவரது கையை துண்டித்தார். அப்போதும் அவர் முருகன் சிந்தனையில் இருந்ததை அறிந்த முருகப்பெருமான், அம்மையாருக்கு காட்சி கொடுத்து அருள்புரிந்தார். இதனால் அவரது கை ஒன்று சேர்ந்ததாக வரலாறு கூறுகிறது. மேலும் முருகப் பெருமான் வள்ளியை திருமணம் செய்வதற்கு செல்லும் வழியில் சிறுவாபுரியில் இளைப்பாறிச் சென்றார் என்றும், இந்த ஆலயத்தில்தான் இந்திரன் மற்றும் தேவர்களுக்கு வீடுபேறு கிடைக்க வேலவன் அருள் புரிந்தார் என்றும் தலபுராணம் கூறுகிறது.
மூலவர் : ஐந்து நிலை ராஜகோபுரம் உடைய இக்கோவிலில் மூலவர் பாலசுப்பிரமணியர் ஆவர்.
உற்சவர் : முருகனின் உற்சவ மூர்த்தி வள்ளி மணாளர், ஸ்ரீவள்ளி முருகன் திருமணக்கோலத்தில் காட்சி தருகிறார்.
தல விருட்சம் : மகிழ மரம்
கட்டிய ஆண்டு : அருணகிரிநாதர் திருப்புகழ் பாடிய இக்கோவில் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்ததாகும்.
தனி சன்னதிகள் :
அபீத குஜலாம்பாள், சூரியனார், சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள், அருணகிரிநாதர், அண்ணாமலையார், மயூரநாதர் போன்றவர்களுக்கு கோவிலில் தனி சன்னதிகள் உள்ளன.
திருவிழா :
தைப்பூசம், பங்குனி உத்திரம், நவராத்திரி, திருகார்த்திகை போன்ற முக்கிய நாட்களில் திருவிழா நடத்தப்படுகிறது.
சிறப்பு :
இங்கு வரும் பக்தர்கள் கடுமையாக விரதம் இருந்து பசியுடன் முருகப்பெருமான தரிசிக்க வேண்டியதில்லை. நேரில் வரவும் வேண்டியதில்லை. திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்பது போல், சிறுவாபுரி முருகப்பெருமானை நினைத்தாலே வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சிறுவாபுரி முருகனை வழிபடும் போது சொல்ல வேண்டிய மந்திரம் :
சிறுவாபுரி முருகனை வழிபட்டால் எப்போதும் நம்முடன் இருந்து, தொடங்கிய காரியங்களில் வெற்றி தருவார். அந்த வகையில், முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமையான இன்று ‘ஓம் முருகா குரு முருகா அருள் முருகா ஆனந்த முருகா சிவசக்தி பாலகனே சண்முகனே சடாச்சரனே என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க. ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க’ என்ற மந்திரத்தை 27 முறை கூறி, முருகனை வணங்கினால் நன்மை உண்டாகும் என்பது முன்னோர்களின் நம்பிக்கை.
பலன்கள் :
நிலம், வீடு, மனை என பூமி சார்ந்த எந்த விஷயமாக இருந்தாலும் இங்கு வந்து முருகப்பெருமானை மனமுருகி வணங்கி சென்றால் உடனே அவர்களுக்கு வீடு அமைவது நிதர்சனமான உண்மை. நிலம், வீடு சம்பந்தமான பிரச்சனைகள் தீர சிறுவாபுரி முருகனை ஞாயிற்று கிழமைகளில் வந்து வழிபாடு செய்ய வேண்டும். அதேபோல் திருமண தடை, திருமணம் நடக்க, காதல் கைகூட, வேலையில் பிரச்சனை, புதிய வேலை கிடைக்க செவ்வாய் கிழமைகளில் சிறுவாபுரி வந்து முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். தொடர்ந்து ஆறு செவ்வாய்கிழமைகளில் வந்து முருகப்பெருமனை வழிபட்டால் கேட்டது கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
ஜாதகத்தில் செவ்வாய் – சனி இணைவுள்ளவர்கள் இங்கு வந்து கொண்டைக்கடலை வைத்து நெய்வேத்தியம் செய்தால் நற்பலன்கள் பலவற்றை அனுபவிக்கலாம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
கோவில் நடை திறக்கும் நேரம் :
காலை 7 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை
மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை
செவ்வாய் கிழமைகளில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
அமைவிடம் :
சென்னையிலிருந்து சுமார் 30-40 கி.மீ. தொலைவில் சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில் இந்த கோவில் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டிலுள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்ல பூந்தமல்லி மற்றும் ரெட்ஹில்ஸ் போன்ற பகுதியில் இருந்து நேரடி பஸ் வசதி உள்ளது.