செவ்வாய்க்கிழமைகளில் திருப்பதியாக மாறும் சிறுவாபுரி முருகர் கோயில்!

Siruvapuri Murugar
Siruvapuri Murugar

திருவள்ளூர் மாவட்டத்தில் சிறுவாபுரி என்னும் ஊரில் அருள்பாலித்து வரும் பாலசுப்பிரமணியர் ஆலயத்தில் செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் பக்தர்களின் கூட்டம் ஏன் அதிகமாக உள்ளது என்பதை விவரிக்கிறது இந்தப் பதிவு.

தமிழ்க்கடவுள் முருகர் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். ஆறுபடை ஆண்டவராக காட்சியளிக்கும் முருகருக்கு, தமிழ்நாடு முழுவதும் எண்ணற்ற கோயில்கள் உள்ளன. அதில் மிகவும் சிறப்பு வாய்ந்த திருத்தலமாக இருக்கும் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சன்னதி, செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் திருப்பதி போல் காட்சியளிப்பது, காண்போரை பிரம்மிப்பில் ஆழ்த்துகிறது. வைகாசி விசாகம், தைப்பூசம், பங்குனி உத்திரம் மற்றும் மாதந்தோறும் வருகின்ற கார்த்திகை விரதம் போன்ற முருகருக்கு விஷேசமான தினங்களுக்குக் கூட இங்கு கூட்டம் குறைவாகத் தான் காணப்படுகிறது. ஆனால், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மட்டும் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிவதைப் போல் இங்கும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்படுகிறது.

பொதுவாக முருகருக்கு உகந்த நாள் செவ்வாய்க்கிழமை. இருப்பினும், சிறுவாபுரியில் மட்டும் இவ்வளவு கூட்டம் வாரந்தோறும் கூடுவதன் ரகசியம் என்னவென்று புரியாதவர்கள் பலரும் தெரிந்து கொள்ள ஆவலாக இருப்பார்கள் அல்லவா! அதாவது, ஆறு வாரங்கள் தொடர்ந்து செவ்வாய்க்கிழமையில் சிறுவாபுரி பாலசுப்பிரமணியரை தரிசனம் செய்து, ஆறாவது செவ்வாய்க்கிழமையில் தங்களால் முடிந்த பிரசாதத்தைச் செய்துகொண்டு கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொடுத்தால் நினைத்த நற்காரியங்கள் அனைத்தும் நடக்கும் என்பது ஐதீகம். ஆகையால் தான் இத்திருத்தலத்தில் செவ்வாய்க்கிழமையில் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது.

கோயிலுக்கு வரும் பக்தர்களின் நலனுக்காக ஆங்காங்கே தனிநபர் பயன்படுத்தும் நடமாடும் இலவச கழிப்பறைகள் வைக்கப்பட்டுள்ளன. கோயிலுக்கு பின்புறம் உள்ள குளம் தற்போது தூர்வாரப்பட்டு வருகிறது. செவ்வாய்க்கிழமையில் இந்தக் குளத்தின் கரையைக் சுற்றித் தான் சாமி தரிசனத்திற்கான வரிசை தொடங்குகிறது. மேலும் கூட்ட நெரிசலைக் தவிர்க்க பொது தரிசனம் மற்றும் நபர் ஒன்றுக்கு ரூ.50, ரூ.100 செலுத்தும் சிறப்பு தரிசனமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ஒருவர் சாமி தரிசனத்தை முடிக்க 3 முதல் 4 மணி நேரம் ஆகும். சில சமயங்களில் இந்த நேரம் இன்னும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்:
செவ்வாய் தோஷம் நீக்கும் ஸ்ரீ கல்யாண முருகர்!
Siruvapuri Murugar

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் அதிகாலை 3 மணி முதலே இந்தக் கோயிலுக்கு வருகை புரிகின்றனர். சென்னையில் இருந்து வந்தால் செங்குன்றத்தை அடுத்த புதுவாயல் என்னும் ஊருக்கு இடது பறத்தில் 3கிமீ தொலைவில் அமைந்துள்ளது சிறுவாபுரி முருகர் கோயில். மேலும் செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் இருசக்கர வாகனங்களைத் தவிர்த்து கார்கள் உள்ளே அனுமதிக்கப்படாததால், 2 கிலோ மீட்டருக்கு முன்பே சாலையோரங்களில் நிறுத்தி விட்டு ஆட்டோ மற்றும் பேருந்துகளில் கோயிலைச் சென்றடைகின்றனர் பக்தர்கள்.

ஓராண்டிற்கு முன்பு தான் இத்திருக்கோயில் குடமுழுக்கு வெகு விமரிசையாக நடைபெற்றதால், புத்தம் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. கோயிலுக்கு இடப்புறம் நாகாத்தம்மன் ஆலயமும், சன்னதிக்கு உள்ளே மூலவர் பாலசுப்பிரமணியர் காட்சி தருகிறார். மேலும் வெங்கட்ராயர், நாகர், முனீஸ்வரர், சண்டிகேஸ்வரர், கால பைரவர் மற்றும் நவகிரகங்கள் போன்ற உப ஆலயங்களும் சன்னதிக்குள் உள்ளன.

பெயர்க்காரணம்:

ஸ்ரீராமர் தனது மகன்களான லவன் மற்றும் குசனுடன் போரிட்ட புண்ணிய தலமும் சிறுவாபுரி தான் என்பது இத்திருத்தலத்தின் மற்றுமொரு சிறப்பாகும். சிறுவர்களான இவர்கள் இருவரும் தனது தந்தையை போரில் தோற்கடித்த இடமாதலால், இத்தலத்திற்கு சிறுவர் + அம்பு + எடு = சிறுவரம்பெடு (சின்னம்பெடு), சிறுவர்புரி, சிறுவாபுரி என்றும் பெயர் வந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com