
‘ஆடி மாதம் அம்மியும் பறக்கும்‘ என்ற பழமொழி இன்றும் பேச்சு வழக்கில் இருந்து வருகிறது. ஆடியில் அம்மி பறக்குமா? பொதுவாக, ஆடி மாதம் வீசும் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். அதனால்தான் இந்தப் பழமொழி உருவானதாகப் பலரும் கருத்து சொல்வார்கள். ஆனால், இந்தப் பழமொழிக்கான விளக்கம் வேறு. அதைப் பார்ப்போம்.
‘ஆடி மாதத்தில் அம்மை நோயும் பறக்கும்' என்பதுதான் இந்தப் பழமொழியின் சரியான அர்த்தம். அம்மை நோய் வரவேண்டிய இடத்தில் அம்மியைக் கொண்டு வந்து விட்டார்கள். ஆடி மாதம் வீசும் காற்றின் வேகம் பலமாக இருக்கும் என்பது உண்மைதான். அதற்காக அந்தக் காற்றில் அம்மிக் கல் பறந்து விடுமா என்ன? உண்மையில் சிறு கல் கூட பறக்காது. ஆழ்ந்து சிந்தித்தால் இந்தப் பழமொழியின் அர்த்தம் விளங்கிவிடும்.
கோடைக்காலமான பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்தக் கடுமையான வெப்பத்தினாலும், சுகாதாரமற்ற முறையில் உணவுகளை எடுத்துக்கொள்வதாலும் அம்மை நோய் ஏற்படுகிறது. இந்த நோய் ஒருவருக்கு சிரமங்களைத் தருவதோடு, ஆறாத வடுக்களையும் ஏற்படுத்தி விடுகிறது. அதோடு, கவனக்குறைவாக இருந்தால் மற்றவர்களுக்கும் தொற்றிக் கொள்ளும்.
இந்த நோயைப் போக்கும் சக்தி ஆடி மாதம் வீசும் காற்றுக்கு உண்டு. அதாவது, இந்த மாதத்தில்தான் கோடையின் தாக்கம் முழுமையாக முடிந்து, தென்றல் காற்றும், வாடைக் காற்றும் வீசும், சாரல் மழையும் பெய்யும். இந்த மழை மற்றும் அதனால் எழும் குளிர்ந்த காற்றும் அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் மோதுவதால் அவரது உடல் வெப்பம் வெளியேறுகிறது. அதன் காரணமாக அம்மை நோயின் தாக்கமும் படிப்படியாகக் குணமாகும்.
தட்சிணாயணம் துவங்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சும சக்திகள் வெளிப்படும். பிராண வாயு அதிகமாகக் கிடைப்பதும் ஆடியில்தான். ஜீவ ஆதார சக்தி அதிகம் உள்ள மாதமாகவும் இது கருதப்படுகிறது. ஆடிக் காற்றில் அம்மை நோயும் வேகமாக நீங்கும் என்ற சொல்லே, ‘ஆடிக் காற்றில் அம்மை நோயும் பறக்கும்’ என்று சொல்லி வைத்தார்கள். ஆனால், காலப்போக்கில் அது மருவி, ‘அம்மை நோய் பறக்கும்’ என்பது, ‘அம்மியும் பறக்கும்’ என்று மாறிவிட்டது. அவ்வளவுதான்.
அம்மனுக்கும் கரகாட்டத்திற்கும் என்ன சம்பந்தம்?
ஆடி மாதத்தில் கிராமப்புற கோயில் விழாக்களில் கரகாட்டம் முக்கிய இடம் வகிக்கிறது. ஆடி மாத அம்மன் திருக்கோயில் திருவிழாக்களில் கரகாட்டத்தை நாம் கண்டு ரசிக்கலாம்.
இந்த கரகாட்டத்திற்கும் அம்மனுக்கும் நிறைய தொடர்பு உண்டு. விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்து வந்த தமிழர்கள், தங்களது விவசாயம் செழிக்க பருவம் தவறாமல் மழை பெய்ய வேண்டும் என்று விரும்பினார்கள். அதையொட்டி மழை தெய்வமாகிய மாரி (மழை) அம்மனையும், ஆற்று நீர் கடவுளான கங்கை மற்றும் காவிரி அம்மனையும் மழை வேண்டி வழிபட்டனர்.
இந்த தெய்வங்களை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக தண்ணீர் நிரப்பப்பட்ட குடத்தை தலையில் ஏந்தி ஆடவும், பாடவும் செய்தனர். இந்த வழிபாடுதான் பின்னாளில் திருவிழாக்களில் கரகாட்டம் ஆடும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டது என்கிறார்கள்.
'ஆடிப்பட்டம் தேடி விதை' ஏன்?
ஆடி மாதத்தை ‘சக்தி மாதம்’ என்று பண்டைய நூல்களில் குறிப்பிட்டுள்ளன. எனவே, இந்த மாதத்தில் விதை விதைப்பதை முன்னோர்கள் மேற்கொண்டனர். ‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்ற பழமொழி உருவானதற்கும் இதுவே காரணம். உத்தராயண காலத்தில் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்களை விட, தட்சிணாயண காலத்தில் (ஆடி) சூரியனின் ஒளிக் கதிர்கள் விவசாயத்திற்கு உகந்ததாக இருக்கும்.
சுற்றுப்புறத்தை தூய்மையாக்கி, தெய்வங்களை (அம்மன்) வழிபட்டு உள்ளுணர்வை மேம்படுத்திக் கொள்ளவும் ஆடி மாதம் பயன்படுகிறது. வேப்பிலையை அம்மனுக்கு சாத்தி வணங்குவதும், கூழ் ஊற்றும் விழா நடத்துவதும் ஆடி மாதத்தில் நடக்கின்றன.
இதற்குக் காரணம், ஆடி மாதத்தில் கிடைக்கும் வேப்பிலைக் கொழுந்துகளுக்கு அபார மருத்துவ, தெய்வீக குணம் உண்டு. ஆடி மாதத்தில் பொதுவாகவே காற்று அதிகமாக வீசும். அந்தக் காலத்தில் எளிதில் ஜீரணிக்கக்கூடிய வகையிலான உணவுகள் (கூழ்) சாப்பிடுவது நல்லது. இதனால் ஆரோக்கியம் மேம்படும் என்பதை உணர்த்தவே அம்மன் கோயில்களில் ஆடி மாதத்தில் கூழ் ஊற்றப்படுகிறது.