‘கல் அடிப்பட்டாலும் கண் அடிப்படக்கூடாது’ என்று சொல்வார்கள். அடுத்தவர்கள் கெட்ட எண்ணத்துடன் பார்க்கும் பார்வைக்கு ஒரு சக்தி உண்டு என்று சொல்வதுண்டு. அது நமக்கு உடல் நலக்கேட்டை கூட உருவாக்ககூடிய வல்லமை கொண்டது. இதுபோன்ற கண் திருஷ்டியிலிருந்து நம்மை காத்துக்கொள்வது எப்படி என்பதை இந்தப் பதிவில் காணலாம்.
பெண்கள் கண்களில் மை இட்டுக்கொள்வது அழகுக்காக மட்டுமில்லை, தன்னை தீய பார்வையிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும்தான். குழந்தைகளுக்கும் எளிதாக கண் திருஷ்டி பட்டுவிடும். அதனால்தான் குழந்தைகளுக்கு கண்ணத்தில் திருஷ்டி பொட்டு என்று மையால் வைப்பார்கள்.
நெற்றியில் குங்குமம், மஞ்சள், சந்தனம் போன்றவற்றை வைத்துக்கொள்வதால் கண் திருஷ்டி ஏற்படாது. கழுத்தில் ருத்திராட்சம், ஸ்படிகம் ஆகியவற்றை போடும்போதும் கண் திருஷ்டி வராது. சிலர் கைகளிலும், கால்களிலும் கருப்பு, சிவப்பு நிற கயிறு கட்டியிருப்பார்கள். அதற்குக் காரணம் தீய கண் பார்வை பட்டுவிடக்கூடாது என்பதற்காகவேயாகும்.
கண் திருஷ்டி பரிகாரத்தில் கல் உப்பு என்பது மிகவும் முக்கியமாகும். இரண்டு கைகளிலும் கல் உப்பை எடுத்துக்கொண்டு அதை வலதுப் பக்கமும் இடதுப்பக்கமுமாக நன்றாக சுற்றி விட்டு தண்ணீரில் போட்டு விடுவது வழக்கம். உப்பு கரைந்ததும் தண்ணீரை எடுத்து ஊற்றிவிட வேண்டும். இன்னொன்று குளிக்கும் தண்ணீரில் 3 பிடி கல் உப்பை போட்டு அதை வைத்து குளித்தாலும் திருஷ்டி போகும் என்பது நம்பிக்கை.
பழங்காலத்து வழக்கமாக திருஷ்டி கழிக்க கல் உப்பு, கடுகு, வரமிளகாய், நம் வீட்டு வாசலிலிருந்து எடுக்கக்கூடிய மண் ஆகியவற்றை வீட்டில் உள்ளவர்களை உட்கார வைத்து நன்றாக சுற்றிவிட்டு நெருப்பில் போட்டு எரித்து விட்டால் கண் திருஷ்டி நீங்கும். கண் திருஷ்டி அதிகமாக இருந்தால் கடுகு படபட வென்று வெடிக்கும். வரமிளகாய் காந்தும் வாசனை வராது, உப்பு வெடிக்கும் சத்தம் வராது. இப்படியெல்லாம் இருந்தால் அதிக கண் திருஷ்டி பட்டுவிட்டதாகக் கூறுவார்கள். இதை வெள்ளிக்கிழமை அன்று செய்வது சிறந்ததாகும்.
வீட்டிற்குள் நுழையும் பகுதியால் விநாயகர் படம் வைக்கலாம், கண்ணாடி வைக்கலாம். வீட்டிற்கு வெளியே திருஷ்டி பூசணிக்காய், திருஷ்டி பொம்மை போன்றவற்றை வைக்கலாம்.
வீட்டிற்குள் நுழையும் இடத்தில் உருளியில் தண்ணீர் நிரப்பி, பூக்களை பரப்பி வைக்க வேண்டும். அதன் அருகில் ஒரு பாத்திரத்தில் கல் உப்பை நிரப்பி எலுமிச்சையை இரண்டாக வெட்டி ஒரு பக்கத்தில் குங்குமமும், இன்னொரு பக்கத்தில் மஞ்சளும் தடவி அதை கல் உப்பு மீது வைப்பது சிறந்தது. ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீர் நிரப்பி எலுமிச்சைப்பழம் போட்டு வைப்பது. இதெல்லாம் வீட்டில் நுழைந்ததும் பார்வைக்கு படுவது போல வீட்டின் வாசலில் வைக்க வேண்டும்.
வீட்டில் தொடர்ந்து பிரச்னை வந்துக்கொண்டிருக்கிறது, விபத்து நடந்துக்கொண்டேயிருக்கிறது என்று நினைப்பவர்கள் வெண்கடுகு மற்றும் கல் உப்பை இரவு வீடு முழுக்க தூவி விட்டு அடுத்த நாள் காலை சுத்தமாக அதை எடுத்துவிடவும். இப்படியே தொடர்ந்து மூன்று நாட்கள் செய்துவர எல்லா தீய கண் திருஷ்டியும் அழிந்துவிடும்.
கடைகள் மற்றும் வியாபார தலங்களில் பிள்ளையார் சிலை வைப்பது நல்லது, வெள்ளிக்கிழமை பூசணிக்காய் சுற்றி உடைக்கலாம். கடல் தண்ணீர் கிடைத்தால் அதை வாங்கி சேகரித்துக்கொண்டு கடை வாசலில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து தெளித்து விடுவது கண் திருஷ்டிக்கு மிகவும் நல்லது. இவற்றையெல்லாம் செய்து வருவது கண் திருஷ்டியை போக்க சிறந்த வழிகளாகும்.