ஆடி மாதம் அம்மன் கோயில்களில் நடைபெறும் சில விசேஷ வழிபாடுகள்!

மயிலை முண்டகக்கண்ணி அம்மன்
மயிலை முண்டகக்கண்ணி அம்மன்
Published on

டி மாதம் என்றாலே அம்மன் கோயில்களில் விதவிதமான விசேஷங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் பிரசித்தி பெற்ற சில அம்மன் கோயில்களில் நடைபெறும் ஆடி மாத வழிபாடுகளை இந்தப் பதிவில் காண்போம்.

சென்னை, மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோயிலில் ஆடி வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொங்கல் வைப்பதும், பால்குடம் எடுப்பதும் வெகு விமர்சையாக நடைபெறும். பொங்கல் வைக்கப் பயன்படுத்தும் வரட்டியின் சாம்பல்தான் இக்கோயிலில் விபூதி பிரசாதமாகத் தரப்படுகிறது.

சென்னை, மயிலை கற்பகாம்பாளுக்கு ஆடிப்பூரத்தன்று மதியம் சந்தனக் காப்பும் வளையல் அலங்காரமும் மிகச் சிறப்பாக நடைபெறும்.

புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் ஆடி மாதம் நடைபெறுகின்ற முத்துப் பல்லக்கு திருவிழாதான் இக்கோயிலின் மிகப்பெரிய திருவிழாவாகும். முத்துப்பல்லக்கு உருவாவதே பெரிய கலை. தஞ்சாவூர் கீழவாசல் அழகர்சாமி தலைமையில் 20 பேர் கொண்ட குழுவினர் கடந்த 30 ஆண்டுகளாக இந்தப் பல்லக்கை உருவாக்கித் தருகின்றனர். இது உருவாக ஏழு தினங்கள் ஆகும். இதன் பிரம்மாண்டம்தான் புன்னைநல்லூர் மாரியம்மன் முத்துப்பல்லக்கினை நேரில் காண அனைவரையும் ஈர்க்கிறது. அம்மன் இந்த முத்துப் பல்லக்கில் ஏறி நான்கு ராஜ வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பாள்.

‘ஆதி பீட பரமேஸ்வரி’ எனப் போற்றப்படும் அன்னை காளிகாம்பாளை ஆடி வெள்ளி, செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசிக்க நம் கவலைகள், அச்சங்கள் யாவும் தீரும்.

ஆடி மாதம் சேலத்தில் நடைபெறும், ‘செருப்படி திருவிழா’ மிகவும் வித்தியாசமானது. சேலம் அன்னதானப்பட்டியில் பொங்கல் படையல் விழா சிறப்பாக நடைபெறும். அடுத்த நாள் தமிழ்நாட்டில் வேறு எந்த ஊரிலும் இல்லாத சிறப்பாக இந்த செருப்படி திருவிழா நடைபெறும். வேண்டுதல் செய்யும் பக்தர்கள் ஒரு தட்டில் ஒரு ஜோடி செருப்பு, ஒரு துடைப்பம், முறம், வேப்பிலை வைத்து பூசாரியிடம் தருவார்கள். பூசாரி அதை பக்தர்கள் தலையில் மூன்று முறை நீவி விடுவார். இதுவே செருப்படித் திருவிழாவாகும்.

தேங்காய் சுட்டு அம்மன் வழிபாடு
தேங்காய் சுட்டு அம்மன் வழிபாடு

ஆடி மாதம் கொங்கு மண்டலம் மற்றும் பிற மாவட்டங்களில் தேங்காயை தீயில் இட்டு சுட்டு அதனை சுவாமிக்கு படைத்து வழிபடுவது வழக்கம். தேங்காய்களில் மஞ்சள் பூசி தேங்காய்க்குள் ஒரு கண்ணில் மட்டும் துளையிட்டு அதன் வழியே எள், கடலை, வெல்லம், அவல் போன்ற பொருட்களை இட்டு அந்த தேங்காயை தீயில் சுட்டு இஷ்ட தெய்வத்துக்கு படையல் இட்டு வழிபாடு நடத்திய பின்பு அதனை பிரசாதமாக அனைவரும் உண்பார்கள்.

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் திரிபுரசுந்தரி அம்மனுக்கு ஆடி மாதத்தில் லலிதா சகஸ்ரநாம புஷ்பாஞ்சலி நடைபெறும். 108 ஸ்ரீ சக்கரங்கள் வடிவமைக்கப்பட்டு மாலையில் 51 வீணைகளில் லலிதா சஹஸ்ரநாமம் இசைக்கப்பட்டு லட்சம் மலர்கள் கொண்டு புஷ்பாஞ்சலி மிகச் சிறப்பாக நடைபெறும்.

நாகர்கோவிலில் உள்ள ஸ்ரீ நாகராஜா கோயிலில் ஆடி மாதம் முதல் மார்கழி வரை தரப்படும் மண் பிரசாதம் கருப்பு நிறத்திலும், தை முதல் ஆனி வரை தரப்படும் மண் பிரசாதம் வெள்ளை நிறத்திலும் காணப்படும்.

இதையும் படியுங்கள்:
ஆடி மாதமும் அர்த்தமுள்ள சாஸ்திர சம்பிரதாயங்களும்!
மயிலை முண்டகக்கண்ணி அம்மன்

ஆடிப்பூரத்தன்று திருவண்ணாமலை ஆலயத்தில் உண்ணாமுலை அம்மன் சன்னிதிக்கு முன்பு, ‘தீமிதி திருவிழா’ நடைபெறும். வேறு எந்த சிவாலயத்திலும் காண முடியாத அதிசய வைபவம் இது.

சென்னை, கோடம்பாக்கம் ஆண்டவர் நகர் முதல் தெருவில் உள்ள கருமாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு ஒரு லட்சத்து 8 ஆயிரம் வளையல்கள் கொண்டு அலங்கரித்து நலங்கு வைபவம் நடத்தி பக்தர்களுக்கு சீமந்த சாப்பாடு அளிக்கப்படுகின்றது.

தஞ்சையில் நிசும்பசூதனி உக்கிர காளியம்மன் கோயில் உள்ளது. ஆடி பதினெட்டாம் பெருக்கென்று தஞ்சை மாவட்ட கிறிஸ்தவர்கள் அங்கு ரொட்டி, ஆட்டுக்கறி படையலிட்டு வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலும், திருவானைக்காவல் கோயிலிலும் அம்பாளுக்கு ருது வைபவம் (பூப்புனித நீராட்டு) என்று புட்டு சமைத்து, புது துணி உடுத்தி அலங்காரம் செய்து வழிபாடு நடத்துவர்.

குலதெய்வ வழிபாடு பொதுவாக நடைபெற்றாலும் ஆடி மாதத்தில்தான் அதிக அளவில் நடைபெறும். குலதெய்வ வழிபாடு இறையருளை பெற்றுத் தருவதோடு, குடும்பங்களுக்கிடையே ஒற்றுமையை பலப்படுத்தவும், நல்லுணர்வை ஏற்படுத்தவும் கொண்டாடப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com