
மனித வாழ்வில் சிலர், ‘பொழுதே போகவில்லை’ என்பாா்கள். இன்னும் சிலர், ‘ஏன்டா பொழுது விடிகிறது’ என்பாா்கள். வேறு சிலரோ, ‘நேரமே போதவில்லை’ என்பாா்கள். சிலர் ஏனோதானோவென எழுந்து அவசர அவசரமாய் குளியல் போட்டு இரண்டு நிமிடம் பூஜை அறையில் நின்றுகொண்டே பகவானை வேண்டுவதும் உண்டு. சிலர் எப்போதும் பூஜை புனஸ்காரம், ஆன்மிகம், விரதம், சகுனம் இப்படிப் பொழுதை நகர்த்துபவர்களும் உண்டு. எது எப்படியோ, சாஸ்திர சம்பிரதாயங்களின்படி நாம் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய சில நெறிமுறைகள் உள்ளன. அதில் முடிந்தவரை சிலவற்றை நாம் கடைபிடிக்கத்தான் வேண்டும். அவை குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
* காலை எழுந்தவுடன் இரு கரங்களையும் தேய்த்து, கைகளைப் பாா்த்து, கண்களில் ஒற்றிக்கொண்டு, ‘இன்றைய பொழுது நல்லதாக அமையட்டும். அனைவரும் நன்றாக இருக்கவேண்டும்’ என பகவானிடம் வேண்டிக்கொள்ளலாமே!
* தூங்கி எழுந்ததும் கோயில் கோபுரம், கண்ணாடி, புஷ்பங்கள், துளசிசெடி, மனைவி, குழந்தைகளின் முகம், பசு இவற்றைப் பாா்ப்பது நல்லது.
* பூஜை அறையை எப்போதும் சுத்தமாக வைத்திருந்தாலே நல்லது. அதேபோல், பூஜை அறை வீட்டில் தனியாக இருப்பது விசேஷம்.
* கூடுமானவரை துஷ்ட தெய்வங்களின் படங்கள், விக்ரஹங்களை வீடுகளில் வைப்பதைத் தவிா்க்கலாம். அதேபோல், இறந்துபோன தாய், தந்தையர் படங்களை வீட்டில் மாட்ட வேண்டாம்.
* வீட்டில் ஏற்றும் தீபத்தை வடக்கு, கிழக்கு, மேற்கு முகமாக ஏற்றுதல் விசேஷம்! தீபம் ஏற்றுவதில் தெற்கு முகம் தவிா்க்கலாம். பிரதி வெள்ளி, செவ்வாய் ஈரத்துணி கொண்டு பூஜை அறையை சுத்தம் செய்வது சிறப்பு. அமாவாசை மற்றும் சிராத்த தினங்களில் வாசலில் கோலம் போடவேண்டாம்.
* தினசரி காக்கைக்கு உணவு வைக்காமல் சாப்பிடவேண்டாம். பழைய சாதங்களை காக்கைகளுக்கு சாப்பிட வைக்காதீா்கள். அது பாவம். ஈரத்துணியோடு பூஜை அறையில் இறைவனை வழிபட வேண்டாம்.
* வீட்டின் எல்லா நிலைகளிலும் விபூதி, மஞ்சள், குங்குமம், சந்தனம் வைக்கவும். அது வீட்டிற்கு வரும் எதிா்மறை ஆற்றலை விலக்கும். சுமங்கலிகளுக்கு வெற்றிலைப் பாக்கு, மஞ்சள், குங்குமம் கொடுக்கும்போது உறிக்காத மட்டைத் தேங்காயும் சோ்த்துக் கொடுக்கவும். இதனால் பரிபூரண பலன் கிட்டும்.
* திங்கள், வெள்ளி, சனி நாட்களில் இறந்துபோன வீடுகளில் துக்கம் விசாாிக்கப் போக வேண்டாம். இறந்து போன பூத உடலைப் பாா்க்க அது தேவையில்லை.
* கற்பூர ஹாரத்தி எடுத்த சுடர் தானாகவே சமாதானமாகி அணையட்டும். நாமாக அதை நிறுத்த வேண்டாம்.
* இரவு நேரங்களில் தூங்கப்போகும் முன்பு ஒரு பித்தளை டம்ளரில் பூஜை அறையில் சுத்த ஜலம் வைப்பதோடு, அதை முடி வைக்கவும்.
* ஈரத்தலையோடு ஒற்றை வேட்டியை மட்டும் கட்டிக்கொண்டு பூஜை செய்வது உசிதமல்ல.
* நெற்றியில் திலகம் வைக்காமல் இறைவனை சுமங்கலிகள் வழிபடக் கூடாது. பிரதி வெள்ளிக்கிழமைகளில் குத்துவிளக்கு பூஜை செய்வது நல்ல பலன் கொடுக்கும்.
* எண்ணெய்யைத் தலையில் வைத்துக்கொண்டு வாசல் பக்கம் போக்கூடாது. அதேபோல், பூஜை அறையில் நின்றவாறே பூஜை செய்ய வேண்டாம்.
இப்படிப் பல்வேறு ஆன்மிக நெறிமுறைகளைக் கடைபிடிப்பதோடு, மனதை ஒருநிலைப்படுத்தி, பூஜை அறையில் நமக்குத் தெரிந்த பகவானின் நாமாவளிகளை சொல்லி வந்தாலே போதும் மகாலட்சுமி தேவி நம் வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்வாள்.