
இறை நம்பிக்கை தனி மனிதனுடைய உணர்வுகளைப் பொறுத்தது. பொதுவாக, இறைவனுக்கு நடத்தப்படும் பூஜைகள் வீடுகளில் குடும்பத்தாருடன் இணைந்து செய்வார்கள். கோயில்களில் பக்தர்கள் ஒன்று கூடி, கோயிலின் அர்ச்சகர் செய்யும் பூஜையில் கலந்து கொள்வார்கள். ஆனால், விநாயகர் சதுர்த்தி, வீடுகள் மற்றும் கோயில்கள் தவிர, நாடு முழுவதும், பல இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து, கலை நிகழ்ச்சிகள் நடத்தி அனுசரிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி, பல மாநிலங்களிலும் நடைபெறும் நாடு தழுவிய நிகழ்ச்சி என்று சொல்லலாம். இந்த வளர்ச்சிக்குக் காரணமானவர்கள் யார்?
இந்து புராணங்களின்படி, பார்வதி தேவி, விநாயகரைப் படைத்து அவருக்கு உயிர் கொடுத்தார். விநாயகர், பார்வதி தேவியின் காவலனாக இருக்கும்போது, சிவபெருமான் உள்ளே நுழைய அனுமதி மறுத்தார். சீற்றம் கொண்ட சிவபெருமான், தன்னைத் தடுத்த விநாயகரின் தலையைத் துண்டித்தார். துக்கத்தில் ஆழ்ந்த பார்வதி தேவியை சாந்தப்படுத்த, விநாயகரை உயிர்பித்த சிவபெருமான், அவருடைய தலையை ஆனை முகமாக மாற்றினார். மேலும், விநாயகருக்கு தெய்வங்களின் முதன்மையானவர் என்ற கௌரவத்தையும் அளித்தார். எந்த பூஜை என்றாலும், எந்த விசேஷம் என்றாலும் முதலில் செய்வது பிள்ளையார் பூஜை. அவரை முதலில் வணங்கி எதைச் செய்தாலும், தடைகள் ஏதேனும் ஏற்பட்டால், அதனை அகற்றுவார் பிள்ளையார் என்பது நம்பிக்கை. இதனால், பிள்ளையாரை விக்னேஸ்வரன் என்றும் விக்ன விநாயகர் என்றும் அழைக்கிறோம்.
விநாயகரை தடைகளை நீக்குபவர், கலை, அறிவியலை ஊக்குவிப்பவர், புத்தி சாதுரியத்தை அளிப்பவர், ஞானத்தின் தெய்வம் என்று பல வகையாலும் போற்றப்படுபவர். விநாயக சதுர்த்தி, அவரது பிறந்த நாள். இந்த நாள் ஆவணி மாதம், வளர்பிறை (சுக்ல பட்சம்) நான்காவது நாள் (சதுர்த்தி) அன்று அனுசரிக்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி திருவிழா பொதுவாக பத்து நாட்கள் நீடிக்கும். அந்த நாட்களில் அலங்கரித்த பந்தல்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து, எல்லா நாட்களிலும் பூஜை செய்து, பிரசாதம் விநியோகித்து, இரவில் கலை நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டாடுவார்கள். பத்தாவது நாள் பூஜைக்குப் பிறகு விநாயகர் சிலை ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு நீர் நிலைகளில் கலக்கப்படும்.
மராட்டிய சாம்ராஜ்யத்தை ஆண்ட சத்ரபதி சிவாஜி, பேஷ்வா வம்சத்தைச் சேர்ந்தவர். விநாயகரே அவர்களின் குல தெய்வம். தனது மக்களின் நாட்டுப் பற்றினை வளர்க்க முற்பட்ட சத்ரபதி சிவாஜி, தெய்வ பக்தி, தேச பக்தி ஆகியவற்றை ஒன்றிணைத்து விநாயக சதுர்த்தியை மக்கள் எல்லோரும் ஒருங்கிணைந்து கொண்டாடும் பண்டிகையாக மாற்றினார்.
ஆன்மிகம் கலந்த தேசியம் மகாத்மா காந்தியின் கொள்கை. அதன்படி, ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக மக்களைத் திரட்ட, ‘சுதந்திரம் எனது பிறப்புரிமை’ என்ற கோஷத்தை முன் வைத்த சுதந்திரப் போராட்ட வீரர் பாலகங்காதர திலகர் எடுத்த இடைவிடா முயற்சியால், கணேஷ் சதுர்த்தி குடும்பப் பண்டிகை என்ற நிலையிலிருந்து பொது கொண்டாட்டமாக உருவெடுத்தது.
இந்தியாவை ஆண்டு வந்த பிரிட்டன் அரசு சுதந்திரப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக, 1870ம் ஆண்டு, 20 நபர்களுக்கு மேல் இருக்கும் கூட்டங்களைத் தடை செய்தது. ஆனால், வெள்ளிக்கிழமை மசூதியில் நடக்கும் பிரார்த்தனைக்கு கூட்டம் அதிகம் கூடும் என்பதால் இந்தத் தடைக்கு இந்திய முஸ்லிம்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். ஆகவே, மத சம்பந்தமான கூட்டங்களுக்குத் தடை கிடையாது என்று அரசு அறிவித்தது.
1893ம் ஆண்டு, மகாராஷ்ட்ரா புனே நகரில், இந்து சமயத்தின் பல உட்பிரிவுகளை. பிரிட்டன் அரசுக்கு எதிராக ஒன்றிணைக்கும் முயற்சியாக பாலகங்காதர திலகர் கணேச சதுர்த்தி கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார். இதைப் பற்றி, அவர் நடத்தி வந்த கேசரி என்ற மராட்டி மொழி பத்திரிகையில் எழுதி மக்களைத் திரட்டினார். எல்லா இடங்களிலும் விநாயகரின் பெரிய சிலைகளை நிறுவி, அதில் அந்தப் பகுதி மக்களை ஈடுபடுத்தி, இந்த நிகழ்ச்சியை அறிவுபூர்வமான மற்றும் கலைகளை வளர்க்கும் நிகழ்ச்சியாக மாற்றினார் திலகர். இந்த கொண்டாட்டங்களில் ஆடல், பாடல், நாடகம் ஆகியவை இடம் பெற்றன. ஆன்மிகப் போர்வையில், தலைவர்கள், தொண்டர்களுடன் கலந்து அரசியல் உணர்வுகளைப் பரிமாறிக்கொள்ள இந்த நிகழ்ச்சிகள் உதவின. பூனே நகரில் ஆரம்பித்த இந்த சதுர்த்தி விழா, மகாராஷ்ட்ரா எங்கும் பரவி, தற்போது நாடு முழுவதும் நடை பெறும் விழாவாக உருவாகியுள்ளது.
சதுர்த்தி விழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்தப் பத்து நாட்களும் பிள்ளையார் நம்மோடு இருந்து, நம் வேண்டுதலுக்கு செவி சாய்த்துப் பின் விடை பெறுகிறார். பத்தாவது நாள் அனந்த சதுர்தசி. அன்று விநாயகர் பூஜை முடித்துப் பின் விநாயகர் சிலையை நீர் நிலைகளில் கரைப்பதுடன் சதுர்த்தி பூர்த்தி அடைகிறது. இதனை, ‘விசர்ஜன்’ என்பார்கள்.
விநாயகர் சிலையை நீர் நிலையில் கரைப்பது நம்முடைய வாழ்க்கைச் சக்கரத்தைப் பிரதிபலிக்கிறது. உயிர் நீத்தவனின் புதைக்கப்பட்ட உடல் மண்ணுடன் கலக்கிறது அல்லது எரியூட்டப்பட்டால், அவனது சாம்பல் நீர் நிலைகளில் கரைக்கப்படுகிறது. மறுபிறப்பின்போது அவனுக்கு வேறு உடல் வந்து சேருகிறது. இதைப்போலவே பூஜை முடிந்தவுடன், நீர் நிலைகளில் கரைக்கப்படுகின்ற, பிள்ளையார் பொம்மையின், மூலப் பொருளான களிமண் கரைந்து நீர் நிலையின் அடியில் தங்குகிறது. அடுத்த முறை, இந்தக் களிமண் கொத்தி எடுக்கப்பட்டு பிள்ளையார் சிலை செய்ய உபயோகிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் மாசு படாத வகையில் விநாயக சதுர்த்தி கொண்டாடி மகிழ்வோம்.