

திருவாரூர் மாவட்டம், பூந்தோட்டத்தில் இருந்து கிழக்கே 3 கி.மீ. தொலைவில் திருவாரூர் - மயிலாடுதுறை வழித்தடத்தில் திருமாகாளம் மகாகாளநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்தியாவிலேயே சோம யாகம் நடத்த சிறந்த கோயில் என்று புகழ் பெற்றது. புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் இங்குள்ள மாகாள வாவி என்ற தீர்த்தத்தில் நீராடி, குழந்தை வடிவில் உள்ள விநாயகரையும் முருகனையும் வழிபட்டால் விரைவில் மக்கட்பேறு பெறலாம் என்பதும் காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கை.
அதிலும் தை பொங்கலன்று இதைச் செய்வது விசேஷம். எனவே, தை முதல் நாளில் குழந்தை பேறு வேண்டி இங்குள்ள அம்ச தீர்த்தத்தில் நீராடி மகாகாளநாதரையும் அக்கோயிலில் குழந்தை வடிவில் உள்ள விநாயகரையும், முருகனையும் வழிபட்டு, குழந்தை பேறு வேண்டி இங்கு வருவோர் ஏராளம்.
திருநெல்வேலியிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் பெருமாள் கோயில் .தை முதல் நாளில் இங்கு கள்ளபிரானுக்கு 108 போர்வைகளை அணிவித்து பூஜிப்பர். பிறகு அவர் கோயில் கொடி மரத்தைச் சுற்றி வருவார். அதன் பிறகு ஒவ்வொரு போர்வையாக எடுத்து அலங்காரத்தைக் கலைப்பார்கள். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் உள்ள அனைத்து பெருமாள்களும் இந்நாளில் கள்ளபிரான் வடிவில் காட்சி தருவதாக ஐதீகம்.
வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு விழா நடைபெறும். ஆனால், மைசூர் அருகிலுள்ள ஸ்ரீரங்கப்பட்டணத்தில் உள்ள ரங்கநாத பெருமாள் கோயிலில். பொங்கலன்று பெருமாள் மாலையில் சொர்க்க வாசல் கடக்கிறார். சூரியன் உத்தராயண புண்ணிய கால பயணத்தை துவக்கும் நாள் என்பதால் இப்படி. வருடத்தில் இன்று ஒரு நாள் மட்டும் மூலவர் ரங்கநாதர் வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் காட்சி தருவார். மறுநாள் தேரில் பவனி வருகிறார்.
நரசிம்மர் 16 திருக்கரங்களுடன் இரணியனை சம்ஹாரம் செய்த நிலையில் உக்கிரமாக அருள்பாலிக்கும் ஒரே கோயில் கடலூர் மாவட்டம், சிங்கிலிகுடி நரசிம்மர் கோயில்தான். இங்கு யோக நரசிம்மர், பால நரசிம்மர், 16 கை நரசிம்மர் என மூன்று நரசிம்மர்கள் ஒரே கருவறையில் அருள்பாலிப்பது அபூர்வமானது. இங்கு மாட்டு பொங்கலன்று தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகின்றது.
செங்கல்பட்டில் இருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது பொன்பதர்கூடம் சதுர்புஜ ஸ்ரீராமர் திருக்கோயில். இங்கு ராமர் திருமலைப் போல் நான்கு கரங்களுடன் மார்பில் மகாலட்சுமியுடன் அருள்பாலிக்கிறார். தர்மதிஷ்டர் எனும் முனிவருக்கு ஏற்பட்ட சரும நோயை இவர் தீர்த்து வைத்தார் என்பதால் சரும நோய் உள்ளவர்கள் இவருக்கு வேண்டிக் கொண்டு பலன் பெறுகிறார்கள். நோய் குணமானதும் இந்த ராமருக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம், துளசி மாலை சாத்தி கல்கண்டு நிவேதித்து நன்றி செலுத்துகிறார்கள். இந்த ராமர் தைப்பொங்கல் அன்று பரி வேட்டைக்கு செல்கிறார். சூரிய குலத்தில் ஸ்ரீராமர் தோன்றியதன் நினைவாக இத்தலத்தில் இந்நிகழ்வு நடைபெறுகிறது.
கோயம்புத்தூரிலிருந்து சிறுவாணி செல்லும் வழியில் உள்ளது சுண்டக்காமுத்தூர் செல்லாண்டு அம்மன் கோயில். இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் அந்த வருடம் என்ன பயிரிட வேண்டும் என்று தனித்தனி சீட்டுகளில் எழுதி அம்மன் முன் போட்டு அதில் ஒன்றை எடுத்துப் பார்த்து அதையே பயிரிடுகிறார்கள். இப்படிச் செய்வதால் விளைச்சல் அமோகமாக இருக்கும் என்று நம்புகிறார்கள். அப்படி விளைந்த தானியத்தை பொங்கல் பண்டிகை அன்று அம்மனுக்கு காணிக்கையாக செலுத்துகிறார்கள்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகில் சேவுகம்பட்டி எனும் ஊரில் 300 ஆண்டுகள் பழைமையான சோலை அழகர் பெருமாள் கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் மறுநாள் நடக்கும் திருவிழாவில் பக்தர்கள் பெருமாளுக்கு நேர்த்திக்கடனாக லட்சம் வாழைப்பழங்களை வைத்து வழிபடுகிறார்கள். வழிபாடு முடிந்ததும் அந்த வாழைப்பழங்களை சூறை விட்டு விடுவார்கள். பக்தர்கள் அதைப் பிடித்து சாப்பிடுவார்கள். அப்படிச் செய்தால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை.