

பன்னிரண்டு ராசி மண்டலத்தில் சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசி வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். இதில் சூரியன் ராசி மண்டலத்தில் மகர ராசிக்குள் நுழையும் நாளை மகர சங்கராந்தி என்று அழைக்கிறார்கள். இந்நாள் தை முதல் நாள் கொண்டாடப்படுகிறது. மகர என்பது ராசியையும் சங்கராந்தி என்பது ‘நகர ஆரம்பிப்பது’ என்பதையும் குறிக்கும்.
இந்த ராசியில் சூரியன் தனது தென் திசைப் பயணத்தை முடித்து விட்டு, வட திசை பயணத்தைத் தொடங்குகிறார். ஜோதிடத்தில் இதை, ‘உத்தராயண புண்ணிய காலம்’ என்று அழைக்கின்றனர். பாண்டவர்களின் பிதாமகரான பீஷ்மர் மகாபாரத யுத்த காலத்தில் காயமடைந்தபோது தனது இன்னுயிரை விடுவதற்காக இந்தப் புண்ணிய காலம் வருவதற்காகக் காத்திருந்தார். தேவர்களுக்கு பகல் பொழுதான இந்த காலத்தில் இறக்கின்ற உயிர்கள் மோட்ச கதியை அடைகின்றன. எனவே, இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்லது என்கிறார்கள்.
இது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பொங்கல், உத்தராயணம் போன்ற வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படும் ஒரு அறுவடைத் திருவிழா. இது குளிர்காலம் முடிந்து வசந்த காலம் வருவதைக் குறிக்கிறது. இது சூரியனின் வடதிசை பயணத்தின் தொடக்கத்தையும், இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் கொண்டாடப்படுகிறது. வடநாட்டில் இந்த நன்னாளில் புண்ணிய தீர்த்தங்களில் ‘மகா ஸ்நானம்’ செய்வதும் வழக்கம். இன்று திரிவேணி சங்கமத்தில், பிரயாகையில் 'மகர சங்கராந்தியை ஒட்டி மகாமேளா நடைபெறுவது உண்டு.
பொதுவாக, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14 அல்லது 15ம் தேதி வரும் மகர சங்கராந்தி அன்று எள் உருண்டை, வெல்லம் போன்ற இனிப்புகளைப் பரிமாறிக்கொள்வது, புனித நதிகளில் நீராடுவது, பட்டம் விடுவது, குடும்பத்துடன் கொண்டாடுவது போன்ற பழக்கங்கள் உள்ளன.
திருச்சியிலிருந்து துறையூர் செல்லும் பாதையில் 20 கி.மீ. தொலைவில் மண்ணச்சநல்லூர்க்கு அருகில் திருவெள்ளறை உள்ளது. இங்குள்ள புண்டரீகாட்ச பெருமாள் கோயில், திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 4வது திவ்ய தேசம் ஆகும். கோட்டை போல் அமைக்கப்பட்டுள்ள 50 அடி உயரத்தில் வெண்மையான பாறையால் ஆன ஒரு குன்றின் மீது இத்தலம் அமைந்துள்ளதால் வெள்ளறை என்ற பெயர் பெற்று திருவெள்ளறை ஆனது. முன் கோபுரம் பூர்த்தியாகாத நிலையில் உள்ளது. இத்தல பெருமாளை தரிசிக்க 18 படிகளைக் கடக்க வேண்டும். (இது கீதையின் 18 அத்தியாயங்களைக் குறிப்பதாக ஐதீகம்). கோபுர வாயிலில் இருக்கும் 4 படிகள் நான்கு வேதங்களைக் குறிக்கின்றன. பலி பீடத்தை வணங்கி 5 படிகளைக் கடக்க வேண்டும். (இவை பஞ்சபூதங்களைக் குறிக்கின்றன.)
எந்தக் கோயிலிலும் இல்லாத வகையில் இங்கு உத்தராயண வாசல் (வடக்கு வாசல்), தட்சிணாய வாசல் (தெற்கு வாசல்) என இரு வாசல்கள் உண்டு. பெருமாளை தரிசிக்க இரண்டு வழிகள் உள்ளன. ஒரு வழி திறந்திருக்கும்போது மற்றொன்று மூடி இருக்கும். இவை தட்சிணாயன வழி (ஆடி முதல் மார்கழி வரை) என்றும் உத்தராயண வழி (தை முதல் ஆனி வரை) என்று பெயர் பெறும். பெருமாள் சன்னிதிக்கு இரு வாசல்கள் படியேறிச் செல்லும் வகையில் உள்ளன. மகர சங்கராந்தி அன்று திறக்கப்படும் உத்தராயணம் வழியாக சென்று பெருமாளை வணங்கி வருவதை புண்ணியமாகக் கருதுகிறார்கள் பக்தர்கள்.
மகர சங்கராந்தி தொடங்கும் உத்தராயணம் காலம் குபேரனுக்கு உரியதாகும், எனவே, உத்தராயணத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தினால் நல்லது என்கிறார்கள். ஜோதிட ரீதியாக, மகர சங்கராந்தி இந்து பாரம்பரியத்தில் மிகவும் சக்தி வாய்ந்த நாட்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த நாளில், சூரியன் தனது உத்தராயண பயணத்தைத் தொடங்குகிறார், இது நேர்மறை ஆற்றலையும் ஆன்மிக வளர்ச்சியையும் கொண்டு வருவதாக நம்பப்படுகிறது. மகரம் ஒழுக்கம், நிலைத்தன்மை மற்றும் பொறுப்பைக் குறிக்கிறது. சூரியன் இந்த ராசியில் நுழையும்போது, அது ஊக்குவிக்கிறது. தெளிவு, முன்னேற்றம் அளிக்கிறது. மொத்தத்தில் மகர சங்கராந்தி மகிழ்ச்சியின் தொடக்கம் என்றே நம்பப்பட்டு வருகிறது.