நமது வழிபாட்டு முறையில் இருக்கும் ஒரு வழக்கம் கோயில்களில் சிதறுக்காய் உடைப்பது ஆகும். எந்த ஒரு நல்ல காரியம் செய்வதற்கு முன்னரும் தடைகள் ஏதும் வராமல் இருக்க கோயிலில், குறிப்பாக பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்கும் பழக்கம் உள்ளது. தேங்காய் உடைப்பது என்பது பெண்களுக்கு துன்பத்தை கொடுக்கக்கூடிய செயலாக இருக்கும் என்பதால் பெண்கள் இதைச் செய்வதில்லை. குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்கள் தேங்காய் உடைப்பது நல்லதல்ல எனக் கூறப்படுகிறது.
‘சூரைத் தேங்காய் உடைத்தல்’ என்பது ஒரு நேர்த்திக்கடன் ஆகும். பொதுவாக, விநாயகருக்கு சூரைத் தேங்காய் உடைக்கும் வழக்கம் உள்ளது. தேங்காய் மீது சூடம் ஏற்றி தொழிற்கூடங்கள், கடைகள் போன்றவற்றைத் துவங்கும்போதும், அமாவாசை போன்ற தினங்களிலும் வணிக நிறுவனங்கள் முன்பு தேங்காய் உடைக்கப்படுகிறது. அதேபோல், புது மனை புகுதல், சுப நிகழ்ச்சி தொடக்கம் ஆகியவற்றின்போதும் சூரைத் தேங்காய் போடப்படுகிறது. பொதுவாக, எந்த நல்ல காரியம் தொடங்கும் முன்பும் முதலில் விநாயகரை நினைத்து தேங்காய் உடைப்பது வழக்கம்.
இந்த வழக்கம் எப்படி வந்தது என்பதைப் பார்க்கலாம். ஒரு சமயம் விநாயகர் மகோற்கடர் என்ற முனிவராக அவதாரம் எடுத்து காசிப முனிவரின் ஆசிரமத்தில் தங்கியிருந்தார். இவ்விரு முனிவர்களும் ஒரு யாகத்திற்காக புறப்பட்டபோது ஒரு அசுரன் அவர்களைத் தடுத்து நிறுத்தி, ‘திரும்பிச் சென்று விடுங்கள்’ எனக் கூற, அதனை மறுத்த விநாயகர் அசுரனை தன் வழியில் இருந்து விலகிச் செல்ல கட்டளையிட்டார். ஆனால், அதைக் கேட்காத அசுரனும் விநாயகரையும் மற்ற முனிவர்களையும் தாக்கத் தொடங்கினான். இதனால் விநாயகர் யாகங்களுக்காக கொண்டு சென்ற கலசங்களின் மேலிருந்த தேங்காயை அசுரன் மீது வீச, தேங்காய் சிதறுவது போல அசுரனும் பொடிப் பொடியாக சிதறினான். இதனால் தடைகள் அகன்று யாகத்திற்கு ஆனைமுகனும் மற்ற முனிவர்களும் புறப்பட்டனர்.
அன்று முதல் எந்த முக்கிய விஷயமாக இருந்தாலும், நினைத்த காரியம் வெற்றி பெறவும், புதிய செயலைத் தொடங்குவதாக இருந்தாலும், வெளியூருக்கு பயணிப்பதாக இருந்தாலும், சுப நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் சூரைத் தேங்காய் போடும் வழக்கம் உள்ளது. நாமும் எந்த காரியம் செய்யும் முன்பும் தடைகள் ஏதும் வரக்கூடாது என்பதற்காக விநாயகரை எண்ணி சிதறுக்காய் போட்டு வழிபடுவது வழக்கமாகி விட்டது.
அவர் காட்டிய வழியில் தேங்காயை அவருக்குக் கொடுத்து எடுத்த காரியம் நல்லபடியாக முடிய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறோம். இவ்வாறு செய்தால் திருஷ்டி கழியும் என்பது ஒரு நம்பிக்கையாகும். தேங்காயை ஓங்கி தரையில் அடித்து உடைக்கும்போது அது சில்லு சில்லாக சிதறி ஓடும். அது போல ஆனைமுகனின் அருளால் நம்மை பீடித்திருக்கும் தோஷங்களும் விக்னங்களும் இந்த காய் உடைந்து சிதறுவது போல் நம்மை விட்டு சிதறி ஓடும் என்பது நம்பிக்கை.
தேங்காய் உடைப்பதில் உள்ள தத்துவம் என்னவென்றால் தேங்காயின் மேல் கடுமையான ஓடும் அதனுள் மென்மையான வெள்ளை நிற பருப்பும், நீரும் உள்ளது. உருண்டையான வெளி ஓடு பிரபஞ்சத்தைப் போன்றுள்ளது. உள்ளே உள்ள வெண்ணிறமான பகுதி பரமாத்மாவை குறிக்கிறது. உள்ளிருக்கும் நீர் அதனால் விளையும் பரமானந்த அமுதத்தைப் போன்று இருக்கின்றது. ஜீவாத்மா மாயையினால் பரமாத்மாவை உணராமல் நிற்கின்றது. அதுபோல் வெள்ளைப் பகுதியையும் நீரையும் காண முடியாமல் ஓடு மறைக்கின்றது. இறைவன் சன்னிதியில் மாயையை அகற்றி இறைவனின் பேரருளை காட்டி பரமானந்த பேரமுதத்தை நுகரச்செய்யும் செயல்தான் சிதறு காய் போடுவதன் தத்துவமாகும்.