
உலகம் முழுவதும் ஏராளமான பெருமாள் கோயில்கள் இருந்தாலும், 108 திவ்ய தேச பெருமாள் கோயில்கள் தவிர, பல கோயில்களில் பெருமாள், வேறு எங்கும் காண இயலாத அரிய கோலங்களில் காட்சி தருகிறார். அது போன்ற பெருமாளை தரிசனம் செய்தால் மிகவும் புண்ணியம் கிடைக்கும். வாழ்நாளில் ஒரு முறையாவது இக்கோயில்களில் ஏதாவது ஒன்றையாவது தரிசிப்பதன் மூலம் பெருமாளின் அனுக்கிரகத்தைப் பெறலாம்.
1. திருமயம் பள்ளிகொண்ட பெருமாள் கோயில்: ஆசியாவிலேயே மிகப்பெரிய பள்ளிகொண்ட பெருமாள் கோயில் அமைந்துள்ள தலம் திருமயம். மலையை குடைந்து அமைக்கப்பட்டுள்ள சிவன் மற்றும் பெருமாள் கோயில்களை இங்கு மட்டுமே காண இயலும். மூலவர் பெருமாளுக்கு பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தைலக் காப்பு சாத்தப்படுகிறது. இது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது.
2. ஸ்ரீரங்கப்பட்டினம் ரங்கநாதர் கோயில்: கர்நாடகாவில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள ரங்கநாதர் ஆலயத்தில் ரங்கநாதருக்கு படுக்கையாக இல்லாமல் குடை பிடித்தபடி காட்சி தரும் ஆதிசேஷனை தரிசனம் செய்யலாம். இங்கு ஆதிசேஷன் ஏழு தலைகளுடன் காட்சி தருகிறார்.
3. கருங்குளம் பெருமாள் கோயில்: தூத்துக்குடி மாவட்டம், கருங்குளத்தில் உள்ள பெருமாள் கோயிலில் பெருமாளை மூன்றடி உயரம் கொண்ட சந்தனக்கட்டை வடிவில் வைத்து அபிஷேக, ஆராதனை செய்து வழிபடுகிறார்கள். இதன் இருபுறமும் சங்கு, சக்கரம் உள்ளது.
4. மாமல்லபுரம் தல சயனப்பெருமாள் கோயில்: மாமல்லபுரம் தல சயனப்பெருமாள் கோயிலில் பெருமாள் ஒரு கையை தலைக்கு வைத்துக்கொண்டு தரையில் சயனித்து இருக்கும் கோலத்திலும் சங்கு, சக்கரம் இல்லாமல் காட்சி தருகிறார்.
5. காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில்: காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயிலில் பெருமாள் ஜோதி வடிவமாக இருப்பதாக ஐதீகம். திருக்கார்த்திகை நாளன்று பெருமாளுக்கு பக்தர்கள் விளக்கேற்றி வழிபடுவது வழக்கம்.
6. திருச்சி வேத நாராயணன் கோயில்: திருச்சிக்கு அருகில் உள்ள வேத நாராயணன் கோயிலில் காட்சி தரும் பெருமாள் நான்கு வேதங்களையும், தலையணையாக வைத்து படுத்திருக்கிறார். அதனாலேயே இவருக்கு வேத நாராயணன் என்ற பெயர் ஏற்பட்டது.
7. சிங்கப்பெருமாள்கோவில்: சென்னைக்கு அருகில் உள்ள சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள மூலவர் நரசிம்மருக்கு மூன்று கண்கள் உள்ளன. சிவபெருமானை போலவே பெருமாளையும் இங்கு மூன்று கண்களுடன் தரிசிக்க முடியும்.
8. நெல்லையப்பர் கோயில்: திருநெல்வேலி மாவட்டம், நெல்லையப்பர் கோயிலில் உள்ள பெருமாளின் உத்ஸவ மூர்த்தியின் மார்பில் சிவலிங்க அடையாளம் உள்ளது.
9. திருநீர்மலை: சென்னை அடுத்த பல்லாவரத்தில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருநீர்மலை. இங்கு பெருமாள் பாம்புப் படுக்கையில் நான்கு கரங்களுடன் மாணிக்க சயனத்தில் அவர் அருள்கிறார். இங்கு பெருமாள் பாம்பு படுக்கையில் நான்கு கரங்களுடன் மாணிக்க சயனத்தில் அருள்கிறார். நின்ற கோலம், இருந்த கோலம், கிடந்த கோலம், நடந்த கோலம் என நான்கு விதமான நிலைகளில் பெருமாளை தரிசிக்க முடியும்.
10. சாரங்கபாணி பெருமாள் கோயில்: கும்பகோணத்தில் உள்ளது சாரங்கபாணி பெருமாள் திருக்கோயில். இங்கு பெருமாள் இருக்கும் சயனக் கோலத்தை உத்யோக சயனம் என்றும், திருமழிசை ஆழ்வாருக்காக சயனத்தில் இருந்து சற்று எழுந்து பேசுவது போன்ற பாவனையில் இந்த பெருமாள் காட்சி தருகிறார். இது வேறு எந்த தலத்திலும் இல்லாத சிறப்பு தரிசனமாகும்.
பெருமாளுக்கு மிகவும் உகந்த இந்த புரட்டாசி மாதத்தில் மேற்கூறிய ஏதாவது ஒரு கோயில் பெருமாளையாவது தரிசித்து வேண்டிய வரங்களைப் பெறுவோம்.