
சக்தி தலங்களில் ஒன்று காஞ்சி காமாட்சி அம்மன் கோவில். ஆதிசங்கரால் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடம். வேறு எந்த தலத்திலும் இல்லாத விசேஷமாக லட்சுமி, சரஸ்வதி பார்வதி ஆகியோரின் ஒரே உருவமாக காமாட்சி திகழ்கிறாள். அதாவது காமாட்சி அன்னை பிலாஹாசம், பிம்பம் மற்றும் சூட்சமம் ஆக மூன்று ஸ்வரூபமாக இங்கு இருக்கிறாள்.
அவள் வீற்றிருக்கும் இடம் காயத்ரி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மண்டபத்தில் பல ரிஷிகள் தவம் செய்து காமாட்சியின் ஆசிகளைப் பெற்றுள்ளனர். இந்த மண்டப பகுதியிலிருந்து பார்த்தால், அன்னை முன்பு ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பதைப் பார்க்க முடியும்.
காமாட்சிக்குச் சிறப்பு பூஜைகள் நடைபெறும் போது இந்த ஸ்ரீசக்கரத்துக்குதான் குங்கும அர்ச்சனை நடைபெறும். இந்த சக்கரம் ஆதிசங்கரரால் சிலாரூபமாக பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இந்த தலத்தில் வித்யா உபாசனை நடத்தப்படுகிறது. ஆதிசக்தி வாய்ந்த இந்த ஸ்ரீசக்கரத்தைப் சுற்றி 64 கோடி தேவதைகள் வீற்றிருக்கிறார்கள்.
இந்த சக்கரம் 9 ஆவரணகளைக் கொண்டது. ஒவ்வொரு ஆவரணத்துக்குள்ளும் முத்ரா தேவதை, ஆவரண தேவதைகள், மோகினி தேவதைகள், சக்தி தேவதைகள் மற்றும் அரிமா, லகிமா, மகிமா, ஈப்சித்வ, வசித்த, பிராகாம்ம, புத்தி, இச்சா, பிராப்தி என்ற 9 சித்தி தேவதைகள் உள்ளனர்.
பௌர்ணமியன்று இந்த 9 நவாவரணத்துக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இது முடிந்த பிறகு காமாட்சி அன்னைக்கு ஆராதனைகள் நடைபெறும். இதுதான் நவாவரண பூஜையாகும். நவாவரண பூஜை பலனை சாதாரண மக்களும் பெற வேண்டும் என்றுதான் ஆதி சங்கரர் ஸ்ரீ சக்கரத்தை பிரதிஷ்டை செய்துள்ளார். பௌர்ணமி தினத்தில் இந்த பூஜையை தரிசித்தால் கோடானு கோடி பலன்கள் நம்மை நாடி வரும். ஸ்ரீசக்கரத்தைப் சுற்றியுள்ள கலசங்களில் அஷ்ட லக்ஷ்மிகள் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார். ஸ்ரீசக்கரத்திலிருந்து பெறப்படும் குங்குமப் பிரசாதத்திற்கு எல்லையற்ற சக்தி உண்டு.