
மனிதனின் வாழ்க்கைக்கு பெரும் ஆதாரமே நம்பிக்கை தான். ஆனால், சில சந்தர்ப்பங்களில் நம்பிக்கை என்னும் ஆணிவேர் ஆட்டம் காணும் போது வாழ்க்கையில் விரக்தி தோன்றும். இழந்த நம்பிக்கையை மீட்டெடுக்க உதவும் எட்டு வழிமுறைகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. பிரியமானவர்களின் உதவியை நாடுவது
நம்பிக்கை இழக்கும் போது நாம் தனியாக இல்லை என்கிற உணர்வு வரவேண்டும். நம்பிக்கைக்கும், பிரியத்திற்கும் உரிய மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்து அவர்களிடம் உணர்வுகளையும், எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளலாம். அது ஒரு புதிய கண்ணோட்டத்திற்கு வழி வகுக்கும். அக்கறை உள்ள அன்பான மனிதர்கள் உங்களுக்கு நிச்சயம் உதவுவார்கள். இழந்த நம்பிக்கையை மீட்டெடுக்க உதவும் முதல் படி இதுதான்.
2. இதுவும் கடந்து போகும்
வாழ்க்கையில் கஷ்டங்களும் சோதனைகளும் வரும்போது மீள முடியாத சிக்கல் போல தோன்றலாம். ஆனால், அவற்றிலிருந்து மீண்டு திரும்பி பார்க்கும் போது துன்பம் நிரந்தரமானது அல்ல என்பது புரியும். வாழ்க்கையில் எது நேர்ந்தாலும் இதுவும் கடந்து போகும் என்கிற மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இது நம்பிக்கையை வளர்க்க உதவும் மாமந்திரமாகும்.
3. எதிர்மறையை முறியடித்து நேர்மறையை நிலை நிறுத்துதல்
கடினமான காலகட்டங்களில் பயமும் எதிர்மறையான எண்ணங்களும் சூழ்ந்து கொள்ளும். தொடர்ந்து எதிர்மறையான எண்ணங்களை நினைத்துக் கொண்டே இருந்தால் அதை அதிகமாக ஈர்க்கத் தொடங்குவோம். அதனால் அவற்றை விலக்கி விட்டு நேர்மறை எண்ணங்களை மட்டும் மனதில் செலுத்தினால் மூளை அவற்றை நம்பத் தொடங்கும். நல்ல விஷயங்கள் விரைவில் நடந்தேறும்.
4. சிறிய முன்னேற்றங்கள்
எல்லாவற்றையும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் மாற்றி விட முடியாது. எனவே, சிறிய முன்னேற்றங்களை கூடக் கொண்டாட வேண்டும். அது பெரிய அளவில் பலன் தரும். சின்ன சின்ன செயல்கள் தான் ஒரு பின்னாளில் பெரிய அரிய சாதனையாக மாறும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
5. மனதின் வலிமையை உணர்தல்
துன்பங்கள் வரும்போது மனதளவில் பலகீனமாகவும், உடலளவில் சோர்ந்தும் போகிறோம். ஆனால் இது தவறு. சோதனையான காலகட்டங்களில் தான் நமது உண்மையான பலத்தைக் கொண்டு நம்மை நிரூபிக்க முடியும். இதுவரை எதிர்பட்ட சவால்களை எல்லாம் மன பலத்துடன் தான் எதிர்கொண்டோம் என்று நினைத்தால் மனதின் வலிமையை புரிந்து கொள்வீர்கள்.
6. ரிலாக்ஸ் செய்துகொள்தல்;
ஓயாமல் நாள் முழுவதும் உழைத்துக் கொண்டிருப்பது புத்திசாலித்தனம் அல்ல. வேலையை மட்டும் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் தன்னுடைய உடலையும், மனதையும் கவனிக்க முடியாமல் போய்விடும். அவை இரண்டும் ஒரு கட்டத்தில் சோர்ந்து போய் மேற்கொண்டு செயல்பட முடியாமல் போய்விடும். எனவே உடலுக்கும் மனதுக்கும் தேவையான ஓய்வைத் தரவேண்டும். பிடித்த விஷயங்களில் ரிலாக்ஸ் செய்து கொள்வது மிகவும் அவசியம். இது உடல் மற்றும் மன நல்வாழ்விற்கு உதவியாக இருக்கும்.
7. தோல்வியும் ஒரு பாடம்
தோல்வி எப்போதும் ஒரு மதிப்பு மிக்க பாடத்தைக் கற்பிக்கிறது என்பதை உணர வேண்டும். அது நம்மை கற்றுக் கொள்ளவும் வளரவும் புடம் போடவும் உதவும். தோல்வியை வெறுக்காமல் இன்முகத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
8. நம்பிக்கை எனும் ஒளி
இருண்டு கிடக்கும் ஒரு அறைக்குள் ஒரு சிறிய மெழுகுவர்த்தியை அல்லது அகல் விளக்கை ஏற்றி வைத்தால் அந்த அறையில் இருக்கும் இருட்டை விரட்டி வெளிச்சத்தைத் தரும். அது போல துயர் மிகுந்த காலங்களில் சிறு நம்பிக்கை கூட பெரிய அளவில் பலன் தரும். சிறு அளவு நம்பிக்கை மனிதனின் மனதிற்கு பெரும் சக்தியாகும். நம்பிக்கை என்கிற அரிய பொக்கிஷத்தை எப்போதும் பத்திரமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அது எந்தாளும் ஒருவரை வழி நடத்தும்.