
அன்றாட வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய ஆன்மீக நெறிமுறைகள்:
இன்றைய காலத்தில் பலவிதமான வாழ்க்கை முறைகள் காரணமாகவும், புலம் பெயர்ந்த வாழ்க்கை முறையின் காரணமாகவும் சில அர்த்தம் பொதிந்த ஆன்மீக நெறிமுறைகள் நம்மிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. பலருக்கு இதைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் இருந்தாலும், அதைப்பற்றி அதிகம் தெரியாமல் இருக்கிறார்கள்.
ஆன்மீக நெறிமுறைகள் பற்றி தெரிந்து கொள்ளவே இந்த பதிவு.
இரவில் விளக்கு வைத்த பிறகு பெண்கள் தலை வாருவது, பேன் பார்ப்பது, குப்பைகளை பெருக்கி வெளியில் கொட்டுவது கூடாது.
செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நகம் வெட்டுவது கூடாது. மற்ற நாட்களில் வெட்டினாலும் வீட்டுக்குள் போடாமல் பேப்பரில் போட்டு குப்பையில் தான் போட வேண்டும்.
அதே போல் தான் தலையை வாரும்போதும் தலைமுடி கீழே விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். விழும் முடிகளை வீட்டிற்குள் ஃபான் காற்றில் பறந்து கொண்டு இருக்காமல் சுருட்டி குப்பையில் போட வேண்டும்.
பெண்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமை நாட்களிலும், ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது.
எண்ணெய் தேய்த்து குளிக்கும் சமயங்களில் பச்சைத்தண்ணீரில் குளிக்காமல் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது உடல் வலியை போக்கி ஆரோக்கியமாக இருக்க உதவும்.
திருஷ்டி பரிகாரத்திற்கு தேங்காய், பூசணிக்காயை உடைக்கும் வழக்கம் உண்டு. இதனை பெண்கள் செய்யாமல் ஆண்கள் செய்வதே நல்லது.
விரத நாட்களில் விரதத்தை கடைபிடிக்கும் சமயங்களில் ஆட்டம் பாட்டம் என கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இறை சிந்தனையுடன் இருப்பது பிரார்த்தனையை பலன் பெறச் செய்யும்.
காலையில் தூங்கி எழுந்ததும் கோவில் கோபுரங்கள், சுடர் விட்டு எரியும் விளக்குகள், உள்ளங்கை, சூரியன் என பார்ப்பது நல்லது.
தூங்கி எழுந்ததும் முதலில் கொல்லைப்புற கதவை திறந்து விட்டு பின்பு வாசல் கதவை திறக்க வேண்டும். பிளாட்டில் வசிப்பதாக இருந்தாலும் கொல்லைப்புறம் அமைந்துள்ள பால்கனி கதவை திறந்து விட்டு பிறகு வாசல்கதவை திறந்து விடுவது அவலட்சுமியை வெளியேற்றி மகாலட்சுமி வரவேற்பதாகும்.
என்ன அவசரமாக இருந்தாலும் காலையில் அடுப்பை பற்ற வைத்ததும் முதலில் பாலை காய்ச்சி பழக வேண்டும்.
தினமும் சாம்பார், ரசத்திற்கு பருப்பு சேர்க்காதவர்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமையாவது பருப்பை போட்டு சாம்பார், ரசம் என வைப்பது நல்லது.
மனைவி கருவுற்றிருக்கும் சமயம் புதுமனை புகுதல், பழைய வீட்டை இடித்து கட்டுதல், பிரேதத்தை சுமந்து செல்லுதல் போன்ற காரியங்களில் ஈடுபடக்கூடாது.
சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள் விளக்கு ஏற்றுவதாக இருந்தால் கோவிலுக்கு சென்று ஏற்ற வேண்டும். வீட்டில் ஏற்றக்கூடாது. அதேபோல் எலுமிச்சை விளக்கும் ஏற்றுவதாக இருந்தால் கோவிலுக்குச் சென்று ஏற்றுவது தான் சரி.
கோவிலில் ஆண்கள் விளக்கேற்றலாம். ஆனால் வீட்டில் ஆண்கள் விளக்கு ஏற்றவோ, விளக்கை அணைக்கவோ கூடாது.