
நம் தமிழ் இலக்கியத்தில் முதுமொழிக்கென்றே பல நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. நமது முன்னோர் பழமொழிகள் வாயிலாகத் தெய்வங்களைப் பற்றிக் கூறி அதன் வழியாக வாழ்வியல் நெறிகளை எடுத்துரைத்துள்ளனர்.
1. பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதை:
அனைத்து தெய்வங்களுக்கும் முழுமுதற் பொருளாகவும், முழு முதல் கடவுளாகவும் விளங்குபவர் பிள்ளையார் ஆவார். மக்கள் அனைவரும் இந்த செயலைத் தொடர்வதற்கு முன்பு பிள்ளையாரை மண், மஞ்சள், பசுஞ்சாணம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொண்டு உருவாக்கி வணங்கி வழிபட்ட பின்பே மற்ற செயல்களை செய்யத் தொடங்குவார்கள்.
சில சமயம் நாம் ஏதேனும் ஒரு செயலை செய்ய அது வேறு ஒன்றில் போய் முடிந்து சிக்கலை உருவாக்கும். சுற்றி இருப்பவர் ஆளாளுக்கு ஆலோசனை வழங்கி குழப்புவர் நம் மனமும் ஊஞ்சலாடி இங்கு மங்கும் தாவும் குரங்கின் மனநிலைக்கு தள்ளப்படுவோம்.
இதனால் பல்வேறு துன்பங்கள் ஏற்படும் . இத்தகைய சூழலை 'பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதை தான்' என்ற பழமொழி சொல்கிறது. ஆனால், இப்பொருளைத் தான் இது விளக்குகிறது, என்றால் அதுவும் சரி அல்ல.
ஆன்மீக விளக்கம்:
கதா காலட்சேபம், உபன்யாசம், ஆன்மீக உரைகளின் போது உரையாற்றுவோர் 'விநாயகர் துதியில் துவங்கி ஆஞ்சநேயர் வழிபாட்டுடன் முடிப்பார்கள்'. ஏனெனில், இந்த இருவரும் நவக்கிரக தோஷங்களால் பீடிக்கப்படாதவர்கள். அவர்களின் அருள் இருந்தாலே எடுத்த காரியம் மங்கலகரமாய் முடியும் என்பதையே இச்சொற்றொடர் விளக்குகிறது.
2. சிவ பூஜையில் கரடி நுழைந்தது போல்:
மனம் மொழி உடலால் இறைவனை வழிபட வேண்டும். மொழியும் உடலும் வழிபடும் போது மனம் வேறு எங்கேயும் அலை பாய்ந்தால் அது சரியான வழிபாடாக அமையாது. அனைத்தும் ஒருங்கே ஒன்றுபட்டு இறைவனை வழிபடுவது உண்மையான செயல்பாடு ஆகும். இரைச்சல், சண்டைகள் உள்ளிட்டவை நடக்கும் போது மனதை ஒருமுகப்படுத்தி வழிபாடு செய்ய இயலாது. மனதில் குழப்பமே மிஞ்சும். அதிகமான இரைச்சல் மன அமைதியை குலைப்பதுடன் பதட்டமான சூழலில் ஏற்படுத்தும். இத்தகைய இரைச்சல்களை இறைவன் வணங்கும் போது தவிர்க்க வேண்டும் என்பதை இது அறிவுறுத்துகிறது.
ஆன்மீக விளக்கம்:
இங்கு கரடி என்பது விலங்கைக் குறிக்கின்ற சொல் கிடையாது. இது கரடி கத்துவது போன்ற அதிக ஒலி எழுப்பக்கூடிய இசைக் கருவியாகும். இக்கரடிப் பறையை ஒலித்தால் அமைதியான முறையில் சிவனை வழிபட முடியாது. மனம் பழங்காலக் கடிகார ஊசல் குண்டிகைப் போன்று அலைபாயும். மன நிம்மதிக்காக கோயிலுக்கு சென்று அமைதியாக வழிபாடு நடத்த வேண்டும் என்ற சுற்றுச்சூழல் சிந்தனையையும் வழிபடும் முறையையும் இப்பழமொழி வாயிலாக இதனை அறியலாம்.
3. கந்தனுக்குப் புத்தி கவட்டிக்குள்ளதான்:
முருகனாகிய கந்தன் மயில் மீது ஏறி விளையாடுவதில் அதிக விருப்பம் உள்ளவன். அதனாலையே முருகப்பெருமானை மயிலோன், மயில் வாகனன் என்று பெயரிட்டு அழைப்பார்கள். திருப்புகழில் இடம் பெற்றுள்ள மயில் விருத்தம் இதற்கு சான்றாக அமைந்துள்ளது. இத்தகைய முருகனின் விருப்பத்தை விளக்குவதாக அமைந்துள்ளது இந்த பழமொழி.
ஆன்மீக விளக்கம்:
கந்தன் பாலமுருகன் ஆவான். அப்பாலகன் மயில் மீது ஏறி இரு பக்கமும் கால்களை போட்டு உலகைச் சுற்றி வருவான். இதனை 'கவட்டிக்குள்' என்பது உணர்த்துகிறது. சைக்கிளில் ஏறும்போது இரு கால்களையும் வண்டியின் இருபக்கம் போட்டு ஏறி உட்கார்ந்து வண்டியை உருட்டுவோம். அது போன்று முருகன் மயில் மீதமர்ந்து விளையாடுவார் என்று முருகப்பெருமானின் விருப்பமான இந்த விளையாடலை இப்பழமொழியில் அறிவுறுத்துகிறது.
4. குருவிக்கு தக்கன ராமேஸ்வரம்:
இதைப் படித்தவுடன் நம் மனதில் எழுதும் சந்தேகம் குருவிக்கும், ராமேஸ்வரத்துக்கும் இடையே இருக்கும் சம்பந்தம் என்ன என்பது தான். ஆனால், பேச்சு வழக்கில் உண்மையான பழமொழி திரிந்து மருவி விட்டதுதான் காரணமாகும்.
ஆன்மீக விளக்கம்:
அதாவது 'குறிவைக்க தப்பாது ராமசரம்' என்பதே மறுவி பொருளையே தலைகீழாக மாற்றி விட்டது. ராமரின் அம்பு (சரம்) குறி வைத்து விட்டால் தப்பாமல் அதன் இலக்கை அடையும் என்பதே இதன் அர்த்தம். ராமர் எய்த அம்பு ஏழு மரங்களைத் துளையிட்டுச் சென்று இலக்கை அடைந்ததாக புராண நிகழ்வில் இதனைக் கூறுகிறது.