
இந்து தொன்மவியல் கதையான ராமாயணத்தின் நாயகனான ஶ்ரீ ராமரும் , இலங்கை போரில் அவருக்கு உற்ற நண்பனாக இருந்து பக்தி உதாரணமாக திகழும் ஹனுமான் அவர்களும் சந்தித்த இடம் பற்றி அறிவோம். சிறந்த அரசனுக்கும், மனிதனுக்கும் உதாரணமாக, செம்பியர் குலத்தைச் சேர்ந்த ஶ்ரீ ராமனை தான் குறிப்பிடுவார்கள். அயோத்தியின் ராஜாவான ராமர் எப்போதும் மக்களின் மனநிலை அறிந்து , மக்களின் விருப்பத்தின் பெயரில் தான் ஆட்சி நடத்தினார். நீதி நெறி தவறாது செங்கோல் வளையாத வகையில் அவரது ஆட்சி இருந்தது.
ராமர் அரியணை ஏற வேண்டிய தருவாயில் சிற்றன்னை கைகேயியினால் அரச பதவி ஏற்காமல் லட்சுமணன் மற்றும் சீதையுடன் கானகம் புகுந்து விடுவார். அதே நேரம் கிஷ்கிந்தா வனப் பகுதியில் அரசாட்சி இழந்த தனது நண்பன் சுக்ரீவனுடன் ஹனுமான் சுற்றித் திரிந்து கொண்டிருந்தார். ஶ்ரீ ராமர் ஒரு நாள் அந்தப் பகுதிக்கு வருவார் என்று அனுமானித்து பக்தியுடன் காத்துக் கொண்டிருந்தார் ஹனுமான். ஶ்ரீ ராமரை நேரில் பார்த்திருக்காமலே ஹனுமான் அவர் மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். ஆனால், ராமருக்கோ ஹனுமனைப் பற்றி எதுவும் தெரியாது.
ஹனுமான் வாயுதேவனின் புத்திரன். ஆதலால் நிறைய திவ்ய சக்திகளை பெற்றிருந்தார். அதே போல அதிக அறிவு பெற்றிருந்தாலும் தன் பலம் அறியாது அடக்கத்துடன் இருந்தார். ராமர், மஹா விஷ்ணுவின் அவதாரமாக இருந்தாலும், எந்த இடத்திலும் அவர் தனது கடவுள் சக்தியை காட்டியதில்லை. முழு மனிதனாக என்ன சக்தியை பெற முடியுமோ, அதை மட்டுமே பெற்றிருந்தார்.
ராமரின் வனவாசத்தின் போது ஒரு நாள் சீதை இராவணனால் கடத்தப்படுகிறாள். சீதையை தேடி ராமரும் லட்சுமணனும் ஒவ்வொரு கானகமாக அலையும் போது ஹனுமனை சந்தித்தார்கள். இரு மனிதர்கள் தங்கள் இருக்கும் திசை நோக்கி வருவதை கண்ட சுக்ரீவன், ஹனுமனை பிராமணர் வேடத்தில் சென்று அவர்களை விசாரிக்க சொல்கிறான். ஹனுமானும் அவ்வாறு பிராமணக் கோலத்தில் ராமரை விசாரித்தார். அப்போது அவர் அயோத்தி மன்னன் தசரதனின் மகன் என்று தெரிந்ததும் ஹனுமான் தன் வேடத்தை கலைத்தார். அதன் பின்னர் ராவணனை வெல்ல ராமருக்கு துணையாக ஹனுமான் இருந்தார். ராமருக்கு பின்னர் இன்றும் 'ராமநாமம்' ஜெபித்து சிரஞ்சீவியாக உலகில் வாழ்கிறார்.
ராமரும் அனுமனும் சந்திந்து கொண்ட இடம் ஹம்பியில் உள்ளது. அந்த இடத்தில் ஒரு பிரமாண்டமான அனுமன் கோயில் இப்போது கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோயிலின் பெயர் யந்த்ரோத்தரக் ஹனுமான் கோயில்.
யந்த்ரோதரகா என்றால் 'யந்திரத்தை ஏந்தியவர்' என்று பொருள். இந்த கோயிலை முதலில் கட்டியவர் முனிவரான வியாஸ் ராஜ். இந்த இடத்தில் வியாஸ் ராஜ், அனுமனை தினமும் வழிபட்டு, நிலக்கரியால் ஹனுமான் படத்தைச் வரைந்து பூஜித்துள்ளார்.
முனிவர் பூஜை செய்த பிறகு அந்த படம் தானாகவே மறைந்துவிடும். அவரது பக்தியைக் கண்டு மகிழ்ந்த ஹனுமான், வியாஸ் ராஜ் முன் தோன்றி, தனது சிலையை ஒரு யந்திரத்திற்குள் நிறுவுமாறு கூறியுள்ளார். யந்திரத்தின் நடுவில் அமர்ந்திருக்கும் ஹனுமான் சிலை அனைத்து சக்திகளுக்கும் மூலமாகக் கருதப்படுகிறது.
இந்தக் கோயில் ஹம்பியின் மலை உச்சியில் ஒரு குகைக்குள் கட்டப்பட்டுள்ளது. கோயிலை அடைய 570 படிக்கட்டுகள் ஏற வேண்டும். இந்த கோயிலுக்கு செல்ல பெங்களூர் வரை விமானத்தில் பயணிக்கலாம். அங்கிருந்து ஹம்பிக்கு ரயில், பேருந்து, டாக்ஸி மூலம் செல்லலாம்.