ஆயுர்வேத மருத்துவத்தின் கடவுள் ஸ்ரீதன்வந்திரி பகவான்!

அக்டோபர் 29, தன்வந்திரி பகவான் அவதார தினம்
Ayurvedic Medicine God Sri Dhanwandri Bhagwan
Ayurvedic Medicine God Sri Dhanwandri Bhagwan
Published on

மிழ் மருத்துவத்தின்படி தன்வந்திரி தேவர்களின் மருத்துவர் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தின் கடவுள் என்றும் குறிப்பிடப்படுகிறது. இவர் பதினெண் சித்தர்களுள் ஒருவர். தனு என்ற வார்த்தைக்கு அம்பு, உடலைத் தைத்தல் என்கிற பொருள் உண்டு.  எனவே, தன்வந்திரி என்கிற வார்த்தைக்கு அறுவை சிகிச்சை முறையில் சிறந்தவர் என்றும் கொள்ளலாம். பிரம்மன் நான்கு வேதங்களையும் படைத்து அதன் சாரமாகிய ஆயுர்வேதத்தையும் படைத்தான். இந்த ஆயுர்வேதம் நன்றாகத் தழைத்தோங்கி பலரையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக முதலில் சூரியக் கடவுளுக்கு உபதேசித்தார். சூரியக் கடவுளிடம் இருந்து ஆயுர்வேதத்தைக் கற்றுத் தேர்ந்த பதினாறு மாணவர்களில் மிகவும் முக்கியமானவர் தன்வந்திரி என்று சொல்லப்படுகிறது. அதேசமயத்தில் சூரியனே தன்வந்திரி என்றும் சொல்லப்படுவது உண்டு. சுக்த கிரந்தங்களில் தன்வந்திரி என்னும் திருநாமம் சூரியக் கடவுளையே குறிப்பிடுகிறது. தன்வந்திரியை வைத்தியத்தின் அரசன், சிறந்த மருத்துவர் என்று குறிப்பிடுகிறது பத்ம புராணம்.

புராணங்களின் கூற்றுப்படி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அண்டமே பிரம்மிக்கும் வண்ணம் ஜோதி ஒன்று தோன்றியது. அந்த ஜோதியில் பிறந்த மகாபுருஷர்தான் தன்வந்திரி. கற்பனைக்கும் எட்டாத சௌந்தர்யத்துடன் தனது நான்கு திருக்கரங்களில் சங்கு, சக்கரம், அட்டைப்பூச்சி, அமிர்த கலசம் ஆகியவற்றை ஏந்தி நின்றார்.

தேவர்கள் அசுரர்களுடன் போராடி தங்கள் வலிமையை முற்றிலும் இழந்தார்கள்.  எனவே, அவர்களுக்காக பாற்கடல் கடையப்பட்டது. அப்போது கடலிலிருந்து அவதாரம் செய்த தன்வந்திரியின் திருக்கரத்தில் உள்ள அமிர்த கலசத்திலிருந்து வழங்கிய அமிர்தத்தை தேவர்கள் உண்டதால் அவர்கள் தங்கள் வலிமையை திரும்பப் பெற்றார்கள் என்று கூறப்படுகிறது.

தன்வந்திரி பகவானுக்கு நிறைய விஷ்ணு கோயில்களில் சன்னிதி அமைக்கப்பெற்றிருக்கிறது. இவற்றுள் முக்கியமானவையும் பழையானவையும் கேரளாவில் உள்ள 'தோட்டுவ தன்வந்திரி கோயில்', தமிழ்நாட்டில் ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீரங்கநாதர் கோயிலில் அமைந்துள்ள தன்வந்திரி சன்னிதி, உடுப்பி ஆலயத்தில் உள்ள சன்னிதி மற்றும் ஸ்ரீ வைத்தீஸ்வரன் கோயிலில் இவர் ஜீவசமாதி அடைந்ததால் அங்கே அமைக்கப்பட்டுள்ள சன்னிதி ஆகியவை ஆகும்.

இவர் ஆயுர்வேத மருத்துவக்கலையில் மிகுந்த திறமைசாலியாக இருந்தார்.  இவருடைய திறமையைப் பற்றி ஒரு கதை புராணத்தில் சொல்லப்படுகிறது. ஒருசமயம் தன்வந்திரியும் அவருடைய சீடர்களும் கயிலாயத்துக்குச் சென்று கொண்டிருந்தனர். வழியில் அவர்களை தட்சன் என்னும் நாகம் வழிமறித்து அவர்கள் மீது விஷத்தைப் பொழிந்தது. அந்த நாகத்தை தனது ஆயுர்வேத மருந்தால் தன்வந்திரி தடுத்துவிட, உடனே வாசுகி என்கிற நாகம் தன்னுடைய படையுடன் வந்து அவர்களுடன் யுத்தம் செய்தது. வாசுகி விஷக்காற்றை ஊதி தன்வந்திரியின் சீடர்களை மயக்கமுறச் செய்தது. அந்த இடத்திலேயே தன்வந்திரி ஆயுர்வேத மருந்து தயாரித்துக் கொடுத்து அவர்களை மயக்கம் தெளிவித்தார். திரும்பவும் வாசுகியின் சகோதரியான மானசா தேவி வந்து மீண்டும் சீடர்களை மயக்கமடைய செய்ய, தன்வந்திரியும் திரும்ப தனது மருத்துவ மஹிமையினால் அவர்களை உயிர் பிழைக்க வைத்தார். அவருடைய திறமையை பார்த்து அதிசயித்துப்போன மானசா தேவி அவரை தாமே கயிலாயத்துக்கு அழைத்துச் சென்றார். இந்த சம்பவத்திற்குப் பின் தேவலோகத்தில் அனைவரும் தன்வந்திரியை தங்களுடைய ஆஸ்தான மருத்துவராக ஏற்றுக்கொள்ள தன்வந்திரியின் புகழ் அனைத்து உலகங்களிலும் பரவி அவர் ஆயுர்வேத மருத்துவத்தின் கடவுள் என்று அழைக்கப்பட்டார்.

இதையும் படியுங்கள்:
புற்றுநோய்க்கு தீர்வாகும் நெய் மிளகாயின் அதிசய குணங்கள்!
Ayurvedic Medicine God Sri Dhanwandri Bhagwan

இவர் எழுதியுள்ள புகழ்பெற்ற நூல்கள் வைத்திய சிந்தாமணி, நாலுகண்ட ஜாலம், தைலம், கருக்கிடை, நிகண்டு ஆகியவை ஆகும். மனிதர்களுக்கு நோய்நொடிகள் அவரவர் கர்மவினைப்படி வந்துதான் தீரும். இதிலிருந்து நம்மை தன்வந்திரி வழிபாடு ஒன்றே காப்பாற்ற வல்லது. இவரை வழிபட்டால் நோய்நொடிகள் நீங்குவதோடு, நல்ல ஆரோக்கியமும்  உண்டாகும்.

ஸ்ரீ தன்வந்திரியின் அவதார தினம் ஐப்பசி மாத தேய்பிறை திரயோதசி திதியாகும்.  அதாவது தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்னதாக வரும். தீபாவளியையொட்டி அவருடைய அவதார தினம் வருவதால் தீபாவளியன்று ஸ்ரீ லட்சுமி குபேர பூஜை செய்வதோடு, ஸ்ரீ தன்வந்திரியையும் வழிபடுவது சில இடங்களில் வழக்கம். இந்த வருடம் ஸ்ரீ தன்வந்திரியின் அவதார தினம் 29.10.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று வருகிறது. அன்று அவருக்கு உரிய ஸ்லோகமான,

‘ஓம் நமோ பகவதே வாசுதேவாய
தன்வந்தரேயே அம்ருதகலச ஹஸ்தாய
சர்வாமய நாசாய த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீமகாவிஷ்ணவே நம:’

என்பதைச் சொல்லி அவரை துதித்து நல்ல ஆரோக்கியத்தையும் நோய்நொடியில்லா வாழ்வையும் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com