அறுசுவை உணவுகளில் கார உணவுக்கு என்று உணவுப் பிரியர்கள் அதிகம் உண்டு. காரத்திற்கு அடிப்படையாக இருக்கும் பச்சை மிளகாயில் பல வகைகள் இருப்பது தெரியும். சாத்தூர் மிளகாய், ராமநாதபுரம் முண்டு, குடமிளகாய், ஊசி மிளகாய் வரிசையில் ஒன்றுதான் நெய் மிளகாய் எனப்படும் வாசமும் காரமும் அதிகம் கொண்ட மிளகாய் ரகம். இவற்றைப் பயன்படுத்தும்போது லேசாக நெய் மணம் வீசுவதால், இதற்கு நெய் மிளகாய் என்று பெயர் வந்திருக்கலாம்.
மேலும், இது பம்பரம் போல் காட்சித் தருவதால் பம்பர மிளகாய் என்கிற பெயரும் இதற்கு உண்டு. இந்த மிளகாய் ஏற்காடு, ஊட்டி, கொடைக்கானல், குன்னூர், மூணாறு போன்ற மலைப்பிரதேசங்களில் விளைகிறது.
இது கேப்சிகம் சைனென்ஸ் (Capsicum chinense) என்ற இனத்தில் இருந்து உருவாக்கப்பட்ட டிரினிடாட் மோருகா ஸ்கார்பியன் (Trinidad Moruga Scorpian) என்னும் ரகமாகும். இந்த நெய் மிளகாயின் பூர்வீகம் அமெரிக்காவுக்கு அருகில் உள்ள டிரினிடாட் மற்றும் டொபாகோ தீவுகளின் மொருகா என்னும் மாவட்டத்தில்தான் முதன் முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அதனாலேயே இதற்கு டிரினிடாட் மொருகா ஸ்கார்பியன் எனப் பெயர் சூட்டப்பட்டது. அதன் பிறகு இதன் காரத்தன்மை மற்றும் நெய் மணத்திற்காக உலகம் முழுவதும் பரவியது.
மிளகாய்க்கு காரத்தன்மையைக் கொடுப்பது கேப்சாய்சின் (Capsaicin) என்னும் வேதிப்பொருளாகும். எந்தத் திசுக்களில் பட்டாலும் எரிச்சல் உணர்வை உருவாக்குகிறது. மிளகாயில் காரமான பகுதி என்பது அதன் விதைகளில்தான் அதிகம் இருக்கிறது.
அந்த வகையில் நெய் மிளகாய் காரத்தன்மையில் உலகளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. கார அளவுகள் ஆண்டுக்காண்டு அதிகரித்து வரும் நிலையில் 2012ம் ஆண்டில் நெய் மிளகாய் உலகிலேயே அதிகமான காரம் கொண்ட மிளகாய் என்கிற பட்டத்தைப் பெற்றது.
பொதுவாக, மிளகாயை உணவில் சேர்ப்பதால் பல்வேறு உடல் நல பாதிப்புகளுக்கு நிவாரணம் கிடைக்கிறது. முக்கியமாக. கீல்வாதம் பாதிப்பிற்கு நிவாரணியாக விளங்கும். மேலும், உடலில் ஏற்பட்டுள்ள வலியை குறைக்கவும் உதவுகிறது.
உடலில் உள்ள கொழுப்பு மற்றும் ட்ரைக்ளிசரைடு அளவுகளை குறைப்பதோடு மட்டுமல்லாமல், ஆபத்தான இரத்த உறைதலை உண்டாக்கும் இரத்தக் கட்டிகளை குறைக்க உதவுகிறது. மிளகாயில் அதிக அளவு காப்சைசின் உள்ள காரணத்தினால்தான் மேற்கூறிய உடல் நல பயனைப் பெற முடிகிறது.
மேலும், மிளகாயில் அதிக அளவில் உள்ள கயேன் என்ற பொருள், வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரப்பதற்கு பெரிய உதவியாக விளங்குகிறது. அதனால் செரிமானத்திற்கு மட்டுமல்லாமல், சீழ் வடியும் புண்ணால் ஏற்படும் வயிற்று வலியையும் குறைக்கும். உடல் பருமன் பிரச்னை நீரிழிவு பாதிப்பிற்கு மிளகாய் நல்ல பயனைத் தருகிறது.
குறிப்பாக, மிளகாயில் இருந்து வெளிப்படும் வெப்பம், கலோரிகள் உட்கொள்ளும் அளவை அதிகரித்து, கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. இதன் காரணமாகவே நெய் மிளகாய் அதிக காரத்தன்மை கொண்டுள்ளதால் புற்றுநோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது எனலாம்.