மகான் ஸ்ரீ வாதிராஜரின் உயிரைக் காத்த ஸ்ரீ ஹயக்ரீவர்!

Sri Hayagrivar
Sri Hayagrivar

கான் ஸ்ரீ மத்வாசாரியார் சோடே மடத்தை ஸ்தாபித்தவர். ஒருசமயம் அந்த மடத்தின் பீடாதிபதியான ஸ்ரீவாகீசதீர்த்தர் தீர்த்த யாத்திரை சென்றபோது இராமாச்சாரியார் சரஸ்வதி தம்பதியினர் அவரை வணங்கி திருமணம் ஆகி பல வருடங்களாகியும் குழந்தைப் பேறு இல்லை என்ற தங்கள் மனக்குறையினைத் தெரிவித்தார்கள். ஸ்ரீ வாகீச தீர்த்தர் அவர்களிடம், "உங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கும். அந்தக் குழந்தை பிறந்தவுடன் எங்கள் ஸ்ரீ மடத்திற்குத் தந்துவிட வேண்டும். தங்களுக்குச் சம்மதமா?" என்று கேட்க, அத்தம்பதியினர் கலங்கி பேசாமல் நின்றனர். மகான் வாகீச தீர்த்தர் அவர்களின் மன ஓட்டத்தைப் புரிந்து கொண்டவராய், “சரி, பிறக்கும் குழந்தை வீட்டுக்குள்ளேயே பிறந்தால் அந்தக் குழந்தை உங்களிடமே இருக்கலாம். குழந்தை வீட்டுக்கு வெளியே பிறந்தால் அந்தக் குழந்தை ஸ்ரீ மடத்துக்குத் தந்து விட வேண்டும்" என்றார்.

வாகீச தீர்த்தர் கொடுத்த மந்திராட்சதையைப் பெற்றுக் கொண்டு வீடு திரும்பினர். விரைவில் சரஸ்வதி கருவுற்றார். கி.பி.1480ம் ஆண்டில் குழந்தை வீட்டிற்கு வெளியே பிறக்க, இராமாச்சாரியார் குழந்தையை ஸ்ரீ வாகீச தீர்த்தரிடம் ஒப்படைத்தார்.
ஸ்ரீ மடத்துக்காக ஒப்படைக்கப்பட்ட குழந்தைக்கு ஸ்ரீ வாகீச தீர்த்தர் ஸ்வாமியின் அபிஷேகப் பாலை ஊட்டி வளர்த்தார். அந்தக் குழந்தையே பிற்காலத்தில் ஸ்ரீ வாதிராஜ தீர்த்தர் என்றழைக்கப்பட்ட மகான். ஸ்ரீ வாதிராஜ தீர்த்தர் சோடே மடத்தின் பீடாதிபதியாக இருந்தார். ஹயக்ரீவரின் பூரண அருளைப் பெற்ற மகான் ஸ்ரீ வாதிராஜர் ஹயக்ரீவர் மீது பல கீர்த்தனைகளை இயற்றியுள்ளார்.

ஸ்ரீ வாதிராஜர் சோடே மடத்தின் பீடாதிபதியாய் இருந்தபோது ஒரு சம்பவம் நடைபெற்றது. மடத்தை ஒட்டியிருந்த தனியாருக்குச் சொந்தமான ஒரு வயலில் பயிரிடப்பட்டிருந்த கடலைப் பயிரின் ஒரு பகுதி சேதப்படுத்தப்பட்டிருந்தது. ஒரு நாள் அந்த நிலத்தின் உரிமையாளர் இரவு நேரங்களில் வெள்ளைக்குதிரை ஒன்று வந்து பயிரை சேதப்படுத்துவதைக் கண்டு அதைத் துரத்த, அந்த வெள்ளைக்குதிரையானது மடத்திற்குள் சென்று மறைந்து விடுகிறது.

ஒரு நாள் நிலத்துச் சொந்தக்காரர் பீடாதிபதி ஸ்ரீவாதிராஜரை சந்தித்து விவரத்தைத் தெரிவிக்க, ஸ்ரீவாதிராஜரோ, ‘மடத்திற்கு சொந்தமாக குதிரை ஏதுமில்லை’ என்ற விவரத்தைத் தெரிவித்தார். மறுநாள் நிலத்தின் சொந்தக்காரர் மறைந்திருந்து கவனித்தபோது அதே வெள்ளைக்குதிரை கடலைத் தோட்டத்திற்கு வந்து கடலைப் பயிரை சேதப்படுத்தியது. மீண்டும் அவர் ஸ்ரீமடத்திற்குச் சென்று இரவு தான் பார்த்த அந்த வெள்ளைக்குதிரை மீண்டும் மடத்திற்குள் சென்று விட்டது என்றார். ஸ்ரீ வாதிராஜர் நிலத்துச் சொந்தக்காரரிடம் சேதமான பயிருக்கு இழப்பீடு தருவதாய்க் கூற, பயிரின் மதிப்பினைக் கணக்கிட நிலத்திற்குச் சென்றவர் உடனே ஓடோடி வந்தார். “ஸ்வாமி, எந்தெந்த இடங்களில் பயிர் சேதமானதோ அங்கே தங்கத்தில் கடலைப்பயிர்கள் காணப்படுகின்றன” என்று கூறினார். வெள்ளைக்குதிரை வடிவத்தில் வந்தது ஸ்ரீ ஹயக்ரீவரே என்பதை அறிந்து கொள்கிறார் ஸ்ரீ வாதிராஜர். நிலத்தின் சொந்தக்காரரோ, பின்னர் அந்த நிலத்தை மடத்திற்கே கொடுத்து விடுகிறார்.

இதையும் படியுங்கள்:
கோயிலுக்கு அழகு சேர்க்கும் மண்டபங்கள் தெரியுமா?
Sri Hayagrivar

அன்று முதல் அந்த நிலத்தில் விளையும் கடலையை வெல்லம், தேங்காய்த்துருவல், நெய் சேர்த்து ஒரு பிரசாதமாகத் தயாரித்து அதை ஹயக்ரீவருக்குப் படைக்கத் தொடங்கினார். ஹயக்ரீவருக்காக தயாரிக்கப்பட்ட நைவேத்திய பிரசாதத்தை ஒரு தட்டில் வைத்து தனது இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு தன் தலைமீது வைத்துக் கொள்ளுவார். பின்புறமாய் வெள்ளைக்குதிரை வடிவில் வரும் ஹயக்ரீவர் தனது முன்னங்கால்கள் இரண்டையும் வாதிராஜரின் தோள்களின் மீது வைத்துக் கொண்டு பிரசாதத்தை சாப்பிட்டு சிறிது பிரசாதத்தை மீதம் வைத்து விட்டுச் செல்லுவார். ஸ்ரீ வாதிராஜர் அந்த பிரசாதத்தை தினமும் உண்டு வாழ்ந்து வந்தார். இந்த விஷயத்தை அறிந்த சிலர் ஸ்ரீ வாதிராஜரின் மீது பொறமை கொண்டு அவரைக் கொல்ல ஒரு நாள் பிரசாதத்தில் விஷத்தைக் கலக்கிறார்கள்.

எதிர்பாராதவிதமாக அன்றைய தினம் குதிரை வடிவில் வந்த ஸ்ரீஹயக்ரீவர் ஸ்ரீ வாதிராஜருக்கு பிரசாதத்தை மீதம் வைக்காமல் தானே முழுவதையும் சாப்பிட்டு மயங்கி விழுந்தார். விஷயத்தைப் புரிந்து கொண்ட ஸ்ரீ வாதிராஜர், ‘வாதிராஜ குள்ளா’ என்ற ஒருவகை கத்தரிக்காயை வேகவைத்து குதிரைக்குத் தர, விஷம் முறிந்து குதிரை மின்னல் வேகத்தில் ஓடி மறைந்தது. மகான் ஸ்ரீ வாதிராஜர் ஹயக்ரீவருக்கு தொண்டுகள் பல செய்து கி.பி.1600ல் சோடே மடத்தில் பிருந்தாவனப் பிரவேசம் செய்தார்.

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் திருவோண நட்சத்திரத்தில் வரும் ஸ்ரீ ஹயக்ரீவ ஜயந்தி திருநாள் அன்று பண்டி எனும் பிரசாதத்தை ஹயக்ரீவருக்கு நைவேத்தியம் செய்வது வழக்கமாக உள்ளது. நீங்களும் உங்கள் இல்லங்களில் ஹயக்ரீவ பண்டி பிரசாதத்தை தயாரித்து ஸ்ரீ ஹயக்ரீவருக்கு படைத்து அவருடைய திருவருளைப் பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com