

துவாரகாபுரியை ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஆட்சி செய்து வந்த காலத்தில் தன்னைவிட சிறந்த அழகி இல்லை என்று கண்ணபிரானின் மனைவிகளில் ஒருவரான சத்தியபாமாவிற்கும், தன்னைவிட சிறந்த பலவான் யாருமில்லை என்று வாகனமான கருடனுக்கும், தன்னைவிட சிறந்தவர்கள் யாரும் இல்லை என தொண்டரான சக்கரத்தாழ்வாருக்கும் கர்வம் உண்டானது.
கர்வத்தை அடக்க நினைத்த கண்ணபிரான் தன்னுடைய அருளால் துவாரகாபுரிக்கு அனுமனை அழைத்து வந்தார். ராம நாமத்தை கூறியவாறு துவாராகாபுரி அரண்மனை தோட்டத்தில் அனுமன் நுழைந்து காய்கனிகளை பறித்து உண்ணத் தொடங்கியதை தோட்டக்காரர்கள் ஸ்ரீ கிருஷ்ணரிடம் முறையிட்டார்கள்.
எதுவும் அறியாதவர்போல கருடாழ்வாரை அழைத்து, "அரண்மனை தோட்டத்திற்கு நமது படைகளுடன் சென்று தோட்டத்தில் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும் வானரத்தை விரட்டிவா "என ஆணை பிறப்பித்தார்.
எனது வீரத்தின் முன் படை பூஜ்யம் என உரைத்துவிட்டு கோபத்துடன் கருடன் அனுமனை நோக்கி" யார் நீ? வெளியே போ! என மிரட்டினார். இந்த ராம பக்தன் ஸ்ரீ ராமரை தவிர யாருக்கும் அடிபணிய மாட்டேன். என்னால் வர முடியாது என அனுமன் சொல்வதைக் கேட்டு, அனுமதிக்காமல் அவமதிக்க நினைத்த கருடன், அனுமனை பலவந்தமாக தாக்க முற்பட தன்னுடைய வாலால் கருடனை எடுத்து கடலில் வீசி எறிந்தார். நனைந்த உடலுடன் துவாரகாபுரியை அடைந்து கண்ணபிரானிடம் குறையை முறையிட்டார் கருடன்.
பிறகு சக்கரத்தாழ்வாரை நினைத்தார் கண்ணபிரான். சக்கரத்தாழ்வார் வரும் முன்பாகக் கருடனிடம் ஸ்ரீராமபிரான் அழைக்கிறார் என்று சொன்னால் அந்த வானரம் இங்கு வந்து விடும் என்று கூறி அனுப்பினார்.
சுதர்சன சக்கரம் வந்ததும் "சுதர்சனமே! நீ அரண்மனை வாசலில் காவல் இரு! யார் வந்தாலும்: விடாதே!" என்று கட்டளையிட்டார். பிறகு சத்யபாமாவை அழைத்து "என் பக்தன் அனுமன் வருகிறான். நான் ராமனாக மாறிவிடுகிறேன். நீ சீதையாக மாறிவா!" என்று கூறினார்.
அனுமானிடம் சென்று கருடன், "தங்களின் ஸ்ரீ ராமபிரான் அழைக்கிறார் என்று கூறியதும், "நீங்கள் முன்னால் போங்க. உங்களின் பின்னால் வருகிறேன்" என கூறிவிட்டுக் கருடன் அரண்மனையை அடையும் முன்பே வந்து சேர்ந்தார் அனுமான்.
சக்கரத்தாழ்வார் அனுமனைத் தடுத்தார். விஸ்வரூபம் எடுத்தார் சுதர்சனம், அவரைவிடப் பெரிய வடிவம் எடுத்து சுதர்சன ஆழ்வாரை ஒரே வாயில் போட்டுக் கொண்டார் அனுமான்.
ஸ்ரீ ராமர் வடிவில் இருந்த கண்ணபிரானை வணங்கி அனுமான் அருகில் அமர்ந்து இருந்த சத்யபாமாவைப் பார்த்து "ஐயனே! உங்கள் அன்புக்குரிய சீதாதேவியார் எங்கே? இப்படி ஒரு பணிப் பெண்ணை அருகில் அமர்த்தி உள்ளீர்களே! என்று கேட்டார்.
சத்தியபாமாவின் அகந்தை அகன்று வெட்கம் பிறந்தது. "உன்னைச் சோதனை செய்யத்தான் இப்படிச் செய்தேன் அனுமான்" என்று கண்ணபிரான் கூறிவிட்டு, சத்தியபாமாவின் காதில் ருக்மணி தேவியை அலங்காரம் செய்து வரும்படி அனுப்பினார்.
சில சிமிடங்களில் ருக்மணி தேவியார் வந்ததும் அனுமான் கண்ணீர் வடித்து, சீதா-ராமதரிசனம் கிடைத்தது என்று ஆனந்தத்தில் ஆடிப் பாடினார்.
"சரி அனுமானே! அரண்மனை வாசலில் உன்னை யாரும் தடுக்க வில்லையா?" என்று கண்ணபிரான் கேட்க,
"ஐயனே! ஒரு சக்கரம் தடுத்தது; என் ராமனை தரிசனம் செய்யும் துடிப்பில் என் வாயில் போட்டுக் கொண்டேன். இதோ" என்று கூறி வாயிலிருந்து சக்கரத்தை வெளியே எடுத்தார் அனுமான், அனுமானின் வாயிலிருந்து வெளிப்பட்ட சக்கரத்தாழ்வார் அகந்தை ஒடுங்கியது.
அதே நேரத்தில் கருடாழ்வாரும் அகந்தை கரைய வந்து நின்றார். ஆகவே மூவரின் அகந்தையையும் ஸ்ரீராம பக்த அனுமானின் மூலமாக அகற்றினான் ஸ்ரீகண்ணபிரான்.