
ஸ்ரீ லட்சுமி குபேர பூஜை என்பது குடும்பத்தின் செல்வச் செழிப்பு மற்றும் நிலைத்த செல்வம் பெறுவதற்காக செய்யப்படும் ஒரு பூஜையாகும். இந்த பூஜை பொதுவாக தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகையன்றோ அல்லது ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மற்றும் வியாழக்கிழமை தினங்களில் செய்யப்படுகிறது. இந்த பூஜையில் செல்வத்தின் அதிபதியான ஸ்ரீ மகாலட்சுமியும், செல்வத்தின் அதிபதியான குபேரரையும் இணைத்து வழிபடும் ஒரு பூஜையாகும்.
செல்வம் பெருக்கும் ஸ்ரீ லட்சுமி குபேர பூஜையை தீபாவளி நாளில் செய்தால் இல்லத்தில் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும் என்பது ஐதீகம். இத்தினத்தில் குபேரன் படத்திற்கு பொட்டிட்டு, பூ அலங்காரம் செய்ய வேண்டும். முழுமுதற் கடவுள் விநாயகரை கும்பிட்டு பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.
பிறகு ஸ்ரீ மகாலட்சுமி ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்து, தொடர்ந்து குபேர ஸ்துதியைச் சொல்லி வணங்க வேண்டும். ‘குபேராய நமஹ, தனபதியே நமஹ’ என்று சொல்லி பிரார்த்திக்க வேண்டும். இந்த லட்சுமி குபேர பூஜையோடு, குபேர பகவானுக்கு நாணய வழிபாடு செய்வதும் மிக மிக விசேஷம் ஆகும்.
குபேர பகவானுக்கு உகந்த எண் 5 என்பதால் ஒரு தட்டில் நம் கை நிறைய 5 ரூபாய் நாணயங்களைப் போட்டு, அதைத் தட்டிலிருந்து நம் இரு கைகளாலும் அள்ளி எடுப்பதும் மீண்டும் தட்டில் போடுவதுமாக இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால் நாணயங்களில் இருந்து ஒலி எழுப்பும். அப்போது, ‘அழகாபுரி அரசே போற்றி’ என்று துவங்கும் குபேர பகவானின் 108 போற்றிகளையும் சொல்லி முடிக்கும் வரை தட்டில் உள்ள நாணயங்களை இரு கைகளால் அள்ளி எடுப்பதும், மீண்டும் தட்டிலேயே போடுவதுமாக இருக்க வேண்டும்.
தீபாவளியன்று செய்யப்படும் இந்த நாணய வழிபாடு நிலையான செல்வத்தை நமக்கு அருளும் என்பது நம்பிக்கை. நாணய பூஜை செய்து முடித்ததும் பால் மற்றும் சர்க்கரை கலந்த சிவப்பு அவல் நைவேத்தியம் செய்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.
கோயில்களில் குபேர பகவான் அரிதாகவே தனிச் சன்னிதிகளில் எழுந்தருளியிருப்பார். வண்டலூரிலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள ரத்னமங்கலத்தில் லட்சுமி குபேரனுக்கு தனிக் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் தீபாவளி வழிபாடு வெகு விசேஷமாக நடைபெறுகிறது.