
பொதுவாக, சுவாமிக்கு படைக்கும் நைவேத்திய உணவு வகைகள் அந்தந்த கோயிலுக்கு உரிய வழக்கமான ஒழுங்குமுறைப்படி தயார் செய்யப்பட்டு பின்பு தெய்வங்களுக்குப் படைக்கப்படுகின்றன. இந்தப் பிரசாதங்கள் தெய்வங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்பு பக்தர்களுக்கு இன்றளவும் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகின்றன. திருப்பதி லட்டு, திருப்புல்லாணி பாயசம், மதுரை அழகர் கோவில் சம்பா தோசை போன்றவை பிரசித்தி பெற்ற பிரசாதங்களாக இருக்கின்றன. அந்த வகையில் பழனி பஞ்சாமிர்தம் பக்தர்களிடம் பெற்றுள்ள முக்கியத்துவத்திற்கான காரணங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
விளைச்சல் தரக்கூடிய நிலத்தை குறிப்பிடும் சொல்லான ‘பழனம்’ என்ற பழைய சொல்லிலிருந்து ‘பழம்’ என்ற சொல் வந்தது. ஆகவே, நன்கு விளைச்சல் தரக்கூடிய பகுதியில் அமைந்துள்ள இடமாக பழனி இருக்கிறது. முருகப்பெருமானை அவருடைய தாய், தந்தையர்களான சிவனும், பார்வதியும் 'ஞானப்பழம் நீ' என்று அழைத்ததால்' பழம் நீ என வழங்கப்பெற்று பிறகு, 'பழனி' என மருவியதாகவும் கூறுகிறார்கள்.
முருகனின் மூன்றாவது படை வீடாக இருக்கும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலில் இருக்கும் பழனி ஆண்டவர் திருமேனி போகர் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டு, ஆண்டிக் கோலத்தில் தண்டாயுதபாணியாய் காட்சியளிக்கிறார். மூலவர் மீது அபிஷேகம் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் நவபாஷாண சிலை என்பதால் எல்லா நோய்களையும் குணப்படுத்தக்கூடியதாக உள்ளது.
அதேபோல், பழனியில் பச்சை மலை வாழைப்பழம், தேன், கற்கண்டு, நாட்டு சர்க்கரை, பேரிச்சம் பழம் போன்ற 5 வகையான பொருட்களை சேர்த்து உருவாக்கி கொடுக்கப்படும் பஞ்சாமிர்தத்திற்கும் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கின்றன. ஐந்து வகையான பொருட்களால் உருவாக்கப்படுவதால் இதற்கு பஞ்சாமிர்தம் என பெயர் வந்தது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியதாக இந்த 5 மூலப் பொருட்களும் இருக்கின்றன. நெய், ஏலக்காய் போன்றவை சுவைக்காகவும், மேலும் விருப்பாச்சி வாழைப்பழங்கள் சிறிய அளவிலும் சேர்க்கப்படுகின்றன. பழனி மலையில் உள்ள ஒரு கிராமத்தின் பெயரான விருப்பாச்சி என்ற பெயரில் அழைக்கப்படும் விருப்பாச்சி வாழைப்பழத்தில் நீர்ச்சத்து மிகவும் குறைவாக இருந்து பஞ்சாமிர்தத்திற்கு சுவையை சேர்க்கின்றன.
கொட்டையில்லாத பேரிச்சம்பழம், எந்தவித செயற்கை பொருட்களும் சேர்க்காமல் இயற்கை முறையில் தயாரிக்கப்படும் பழனி பஞ்சாமிர்தத்தை தயாரிக்கும்போது ஒரு சொட்டு தண்ணீர் கூட சேர்க்கப்படுவதில்லை என்பதுதான் ஆச்சரியமான விஷயமாக இருக்கிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் பல மாதங்கள் கூட கெட்டுப்போகாமல் இருப்பதோடு, இதனை உட்கொண்டால் பக்தர்களின் நோய் தீர்க்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
பஞ்சாமிர்தம் முதலில் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு தண்டாயுதபாணியின் சிலைக்கு அதிலிருந்து ஒரு பகுதி எடுத்து அபிஷேகம் செய்யப்படுகிறது. பின்பு அவை பெரிய பகுதியுடன் கலக்கப்பட்டு பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், பகுதிகளிலும் நோய் கிருமிகள் தொற்றுநோய் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அந்த வகையில் நோய் கிருமிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ளவும், நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கவுமே இந்த பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறதாம். பஞ்சாமிர்தத்தை தினமும் 2 ஸ்பூன் சாப்பிடுவதால் இதில் உள்ள பிரக்டோஸ் அன்றைய தினத்திற்குத் தேவையான மகிழ்ச்சி உணர்வை தூண்டக்கூடிய செரோடோன் என்ற ஹார்மோனை சுரக்கச் செய்வதாக மருத்துவ ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
இவ்வளவு சிறப்புகள் பெற்ற திரு ஆவினன்குடி என்று அழைக்கப்படும் பழனி பஞ்சாமிர்தம் உலகப் புகழ் பெற்றதாக விளங்குவதோடு, புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லையே.