
ஈழவர் சமுதாயத்தின் விடிவெள்ளியாகத் தோன்றியவர் ஸ்ரீ நாராயண குரு. இவர் ஓர் ஆன்மீக சமூகப் புரட்சியாளர். இவருக்கு முன் தோன்றிய ஐயா வைகுண்டர் ஈழவர்களைத் தனக்குக் கீழ் இருக்கும் சாதியினருடன் பாகுபாடு இன்றி பழக வேண்டும் என்றார். ஆனால் ஸ்ரீ நாராயண குரு தனக்கு மேலே இருக்கும் உயர் சாதியினரின் சமஸ்கிருத மொழியைப் படித்து வேதம் கற்க வேண்டும் என்றார். 'நாட்டுப்புற வழிபாடுகளை நிறுத்தி விட வேண்டும், உயிர்ப்பலி கூடாது, கோயில்களில் சாமியாடக் கூடாது....' என்று சொல்லி கேரளா முதல் தமிழ்நாட்டில் ஸ்ரீவில்லிபுத்தூர் வரை வந்து அக்கோயில்களை இடித்துத் தள்ளினார். இவரது ஆன்மிக நெறி சமஸ்கிருதம் சார்ந்திருந்தது.
ஈழவ சிவன்
1888 இல் அருவிப்புரத்தின் ஆற்றங்கரையிலிருந்து ஒரு கல்லை எடுத்து வந்து இது ஈழவ சிவன் என்று பெயரிட்டு கோவில் கட்டி அனைவரையும் வணங்கச் செய்தார். காலப்போக்கில் சிவன் என்பது கூட உருவ வழிபாடு அதுவும் நமக்கு வேண்டாம் என்று கருதி, ஒளி வழிபாட்டுக்கும் கண்ணாடித் தியானத்துக்கும் மாறினார்.
உயர் சாதியினரைப் போல வேதம் படிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இவரது ஆன்மீக சிந்தனை உயர் சாதி மக்களுக்கு அதிர்ச்சி ஊட்டினாலும் தாழ்த்தப்பட்டவர்கள் மத்தியில் ஓர் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் இத்தகைய சிவன் கோவில்களை கட்டி தர்ம பரிபாலன சபையை நிறுவி சாதி ஒழிப்பு முறையை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டனர்.
சம்ஸ்கிருதப் பயிற்சி
குருதேவன் எனப்பட்ட ஸ்ரீ நாராயண குரு கேரளாவின் தாழ்த்தப்பட்ட 18 பிரிவுகலில் ஒன்றான ஈழவர் (நாடார்) சாதியில் பிறந்தவர். இவருடைய தந்தையாருக்கு சமஸ்கிருதம் தெரிந்திருந்தால் அவர் இராமாயணம் மகாபாரத கதைகளை ஊர் மக்களுக்கு சொல்லும் ஆசானாக விளங்கினார். இவருடைய மாமா கிருஷ்ணன் ஆயுர்வேத மருத்துவர் என்பதால் அவருக்கும் நல்ல சமஸ்கிருத ஞானம் இருந்தது. எனவே நாராயணன் என்ற 'நாணு ஆசான்' சிறுவயதிலேயே சமஸ்கிருதமும் மலையாளமும் கற்றார். இருமொழிகளும் கலந்த மணிப்பிரவாள நடையில் ஸ்தோத்திரப் பாடல்களை இயற்றினார். வர்க்கலை என்ற ஊரில் சமஸ்கிருதப் பள்ளி அமைத்து சாதி பாகுபாடின்றி எல்லோருக்கும் சமஸ்கிருதம் கற்றுக் கொடுத்தார்.
அத்வைத நெறி
இறைவனும் மனிதனும் வெவ்வேறல்ல என்ற அத்வைத கருத்தை விளக்கி தரிசனமாலா ஆத்ம உபதேச சாதகம் என்ற நூல்களை இயற்றினார்.அத்வைத கருத்தைப் பரப்ப 1913 இல் ஆளுவாய் என்ற இடத்தில் அத்வைத ஆசிரமம் அமைத்தார். ஸ்ரீ நாராயண குரு தர்ம பரிபாலன சபையுடன் கேரளாவில் அத்வைத ஞானசபையும் உருவாகி அனைத்து மக்களும் கடவுள் கண் முன் சமம் என்ற கருத்தைப் பரப்பியது. இங்கு மட்டுமின்றி ஸ்ரீலங்காவிலும் நாராயண குருவின் போதனைகள் பரவின.
அனைத்துச் சாதிப் பூசாரிகள்
ஏழை மற்றும் அனாதை குழந்தைகளுக்கு ஆதரவளித்தார். தாங்கள் கட்டிய சிவன் கோவில்களில் அனைத்துச் சாதியினரும் இவரது ஸ்தோத்திரங்களை சொல்லி பூஜைகள் செய்தனர்.
இதனால் இன்றைக்கும் கேரளாவில் ஐயப்பன் கோவில், பகவதி கோயில் எனப் பல கோவில்களில் சமஸ்கிருதம் படித்த பிராமணர் அல்லாத பிற சாதியினர் கோயில் தந்திரிகளாக இருக்கின்றனர்.