
செல்வம் என்றால் யாருக்குத்தான் விருப்பம் இல்லாமல் இருக்கும்? எவ்வளவு பணம் நம்மிடமிருந்தாலும், ‘இன்னும் வேண்டும்’ என்று கேட்கத் தோன்றும். செல்வங்கள், நகைகள், பணம், வைர வைடூரியங்கள், ரத்தினங்கள் என்று எல்லாவற்றின் மீதும் பேராசை கொள்ளும் மனிதன், அதை யாரிடம் கேட்பது? என்னும் ஆன்மிக ரகசியத்தை அறியாமல் இருக்கிறான்.
செல்வாதி செல்வங்களை அள்ளித் தரும் பத்மாவதி தாயாரின் கருணை, நம் மீது பட்டால் குப்பையில் இருப்பவரும் கோபுரத்தில் ஏறிவிடலாம். செல்வங்கள் பெருக பத்மாவதி தாயார் மந்திரங்களை பற்றிய தகவல்களைத்தான் இந்தப் பதிவில் தெரிந்துகொள்வோம்.
செல்வங்களுக்கெல்லாம் அதிபதியாக இருக்கும், பத்மாவதி தாயார் வேங்கடாசலபதியின் துணைவியாக விளங்குகிறாள். அள்ள அள்ளக் குறையாத அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அள்ளிக் கொடுக்கும் பத்மாவதி தாயாரை வெள்ளிக்கிழமைகளில் வழிபடுவது சிறப்பு! வெள்ளிக்கிழமையில் இரவு நேரத்தில் குளித்து முடித்து பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட வேண்டும். சுத்தமான இடத்தில், சுத்தமான துணிகளை உடுத்திக் கொண்டு, பத்மாவதி தாயாரின் படத்தை மலர்களைக் கொண்டு அலங்கரித்துக் கொள்ளுங்கள்.
பின்னர் ஒரு பித்தளை தட்டில் அகல் விளக்கு ஒன்றை வைத்து அதில் சுத்தமான பசு நெய் ஊற்றுங்கள். அதில் தாமரை தண்டு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். தாமரை தண்டு திரி இல்லாவிட்டால், உங்களிடம் இருக்கும் பஞ்சு திரியை முன்னமே பன்னீரால் நனைத்து நன்கு காய வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பத்மாவதி தாயார் மகாலட்சுமியின் அம்சம். எனவே, நறுமணமிக்க தீப ஒளியானது அவளின் சிறந்த அருளை பெற்றுக் கொடுக்கக்கூடியது. இந்தத் திரியை பயன்படுத்தி தீபம் ஏற்றி வைத்து பின்வரும் இந்த மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும்.
பத்மாவதி தாயாரை மனதில் நினைத்து பிரார்த்தனை செய்து கொண்டு சொல்ல வேண்டிய மந்திரம், ‘ஓம் ஹரீம் பத்மாவதியை வஷட்’ என்பதாகும். மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் எனக்கு நிறைய காசு வேண்டும், எனக்கு நிறைய நகைகள் வேண்டும், எனக்கு நிறைய செல்வங்கள் வேண்டும் என்று ஏதாவது ஒரு ஆசை இருந்துகொண்டே இருக்கும். இந்த ஆசைகளை நிறைவேற்றக் கூடியவள் பத்மாவதி தாயார்!
இந்திரன் போல சுகபோகமாக வாழ வேண்டும் என்ற ஆசை பேராசையாக இருந்தாலும், மனிதனின் நியாயமான ஆசைகளுடன் இணைக்கப்படுகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த மந்திரத்தை 21 முறை வெள்ளிக்கிழமையில் தாமரை தண்டு திரியினால் தீபம் ஏற்றி, பத்மாவதி தாயாரை வேண்டி சொன்னால், சீக்கிரமே செல்வம் சேரும் என்பது நம்பிக்கை.
பத்மாவதி தாயாரின் சக்தி வாய்ந்த மந்திரம்:
‘ஓம் நமோ பத்மாவதி பத்மநேத்ர
வஜ்ர வஜ்ராங்குச ப்ரத்யக்ஷம் பவதி!’
பத்மாவதி தாயார் கருணை மிகுந்த தாயாகக் கருதப்படுகிறார். பக்தர்கள் தவறுகளுக்கு மன்னிப்புக் கோரும்போது, தாயார் பரிவுடன் பரிகாரம் செய்வதாக நம்பப்படுகிறது. செல்வ வளம் வேண்டுபவர்கள், தாயாரை வேண்டிக்கொள்ளும்போது, பொருளாதார மேன்மை பெறுவதாக நம்பப்படுகிறது. இதனால், ‘செல்வ தாயார்’ என்றும் அழைக்கப்படுகிறார். பத்மாவதி தாயாருக்கு, தனியாக திருச்சானூரில் கோயில் உள்ளது. இது திருப்பதி அருகிலேயே உள்ளது. இந்தத் திருத்தலத்தில் சென்று தாயாரை தரிசித்தால், செல்வங்கள், மனநிறைவு, அமைதி, பரிபூரண வாழ்க்கை கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.