
சிவ - பார்வதி திருமணம் கயிலாயத்தில் நடந்தபோது, தென் திசை உயர்ந்து, வட திசை தாழ்ந்தது. இதை சமன் செய்ய அகத்தியரை தென் திசை செல்ல சிவன் உத்தரவிட்டார். சிவனின் கட்டளையை ஏற்ற அகத்தியர், பல தலங்களில் தங்கி சிவ பூஜை செய்து சென்றார். ஓரிடத்தில் சிவன் அகத்தியருக்கு திருமணக் காட்சி தந்தார். இந்தக் காட்சி எந்நாளும் உலக மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என அகத்தியர் வேண்ட, ‘எனக்கு (லிங்கத்திற்கு) தேன் அபிஷேகம் செய்யும் காலத்தில் இத்தல லிங்கத்தில் பார்வதியும் என்னோடு இணைந்து தோன்றுவாள்’ எனக் கூறி மறைந்தார்.
பல ரிஷிகள் இங்கு வந்து தங்கி ஈசனை வழிபட்டதால் இத்தலம் ‘ரிஷிவந்தியம்' என வழங்கப்பட்டது. காட்டை வெட்டும்போது மண்வெட்டியில் வெட்டுப்பட்ட சுயம்பு லிங்கம்தான் ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர். இன்றும் கூட வெட்டுப்பட்ட கீறலை சுயம்பு லிங்கத்தில் பார்க்கலாம்.
இந்தக் கோயில் துவாபர யுகத்தில் தோன்றியதென்று கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இத்தல அர்த்தநாரீஸ்வரர் தம்மை வந்து வழிபட்ட ஸ்ரீராமருக்கு ஞானத்தையும், அகத்தியருக்கு திருமணக் கோலத்தையும், பூஜை செய்த ரிஷிகளுக்கு நற்பலன்களையும், குகநமச்சிவாயருக்கு உணவளித்தும் அருள்புரிந்துள்ளார். அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் இத்தல ஈசனை வந்து வழிபட்டுள்ளனர்.
குருநமச்சிவாயரின் சீடரான குகநமச்சிவாயர் திருவண்ணாமலையிலிருந்து பல தலங்களை தரிசித்து விட்டு இத்தலம் வழியாக சிதம்பரம் செல்லும்போது பசி அதிகமானது. அவர் இங்குள்ள முத்தாம்பிகை அம்மனிடம் சென்று, ‘தாயிருக்க பிள்ளை சோறு’ என்ற செய்யுளை பாடினார். உடனே அம்மன் அவர் முன் தோன்றி, ‘நான் இங்கு ஈசனுடன் அர்த்தபாகம் பெற்றிருக்கிறேன். எனவே, இருவரையும் சேர்த்து பாடுவாயாக’ என்று கூற, குகநமச்சிவாயரும் அதன்படியே, ‘மின்னும்படி வந்த சோறு கொண்டு வா’ என்ற பாடலைப் பாடினார். இந்தப் பாடலைக் கேட்டதும் முத்தாம்பிகையம்மன் பொற்கிண்ணத்தில் சோறு கொண்டு வந்து குகநமச்சிவாயரின் பசியாற்றினாள் என்பது தல வரலாறு.
இக்கோயில் லிங்கத்திற்கு தேனபிஷேகம் செய்யும்போது, லிங்கத்தில் இடை நெளிந்த, கையில் கிளியுடன் அம்மன் காட்சி தரும் அதிசயத்தை ரிஷிவந்தியம் முத்தாம்பிகா சமேத அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் தரிசிக்க முடியும்.
தேவர்களின் தலைவனான இந்திரன் முன் ஈசன் தோன்றி, தனக்கும் பார்வதிக்கும் சேர்த்து அபிஷேகம் செய்யும்படியாகப் பணித்தார். அத்துடன் தினமும் நடைபெறும் தேனபிஷேக பூஜையில் அர்த்தநாரீஸ்வரராகக் காட்சி கொடுப்பதாகக் கூறி மறைந்தார். தேன் தானும் கெடாது, தன்னுடன் சேர்க்கும் பொருளையும் கெட விடாது. இதன்படி இன்றும் கூட தினசரி நடைபெறும் தேனபிஷேக பூஜையில் சுயம்பு லிங்கத்தில் அர்த்தநாரி ஈஸ்வரனாக ஒளி வடிவில் காட்சி தருகிறார் சிவபெருமான். மற்ற அபிஷேகம் நடைபெறும்போது லிங்க வடிவம் மட்டுமே காட்சி தரும்.