ராம ரஹஸ்ய உபநிஷத் கூறும் ஶ்ரீ ராமரின் ரகசியம்!

6-4-2025 ராமநவமி தினம்!
lord rama hanuman
lord rama hanumanimg credit - dollsofindia.com, bhagavatam-katha.com
Published on

ராம ரஹஸ்ய உபநிஷத் அதர்வண வேதத்தில் உள்ள 31 உபநிஷதங்களில் ஒன்று.

ஶ்ரீ ராமரின் அவதார ரகசியத்தையும் பெருமையையும் எடுத்துக் கூறும் இந்த உபநிஷதம் 108 முக்கிய உபநிஷதங்களில் ஒன்றும் கூட!

ஒரு சமயம் முத்கலர், சாண்டிலர், பிங்கலர், பிக்ஷு, பிரகலாதர், சனகர் ஆகிய மஹரிஷிகள் ஹனுமானை அணுகினர்.

நான்கு வேதங்கள், பதினெட்டு புராணங்கள், பதினெட்டு ஸ்மிருதிகள், சாஸ்திரங்கள் ஆகிய அனைத்திலும் சொல்லப்பட்டதில் உயர்ந்தது எது என்று அவரைக் கேட்டனர்.

உடனே ஹனுமான், “கேளுங்கள். மஹரிஷிகளே! ராம என்பதே பரப்ரஹ்மம். அதுவே உயரிய தூய்மை. ராமரே அனைத்தின் உயரிய சாரம். ப்ரம்ம தாரகம்” என்று ஆரம்பித்து ராமரின் மகிமையையும் ராம நாமத்தின் ரகசியத்தையும் விரிவாகச் சொல்லலானார்.

“விநாயகர், சரஸ்வதி, துர்க்காதேவி, க்ஷேத்ரபாலகர்கள், சூரியன், சந்திரன், நாராயணர், நரசிம்மர், வாசுதேவர், வராஹர், லட்சுமணன், சத்ருக்னன், பரதன், விபீஷணன், சுக்ரீவன், அங்கதன் ஜாம்பவான் மற்றும் ப்ரணவம் ஆகியவையே ராமரின் அங்கங்கள். இந்த அங்கங்கள் இன்றி எந்தத் தடைகளையும் ராமர் நீக்க மாட்டார்” என்றார் ஹனுமான்.

பின்னர் ஹனுமான் ஓம் என்ற ப்ரணவத்தின் மகிமையை விரிவாக எடுத்துரைத்தார்.

ஒருமுறை ராமரிடம் விபீஷணன் எப்படி உங்களது அங்கங்களை வழிபடுவது என்று கேட்ட போது ராமர், “ராம என்ற எனது நாமமே அனைத்துப் பாவங்களையும் போக்க வல்லது. மாபாதகங்களையும் கூட இது போக்க வல்லது” என்று ஆரம்பித்து வழிபடும் விதத்தை விவரித்தார்.

சனக மஹரிஷி ஹனுமாரை தாரக நாமமான ராமரை வழிபடுவது எப்படி என்று கேட்க, அவர் ராம ராமாய நமஹ என்ற ஆறெழுத்து மந்திரத்தின் மகிமையை உரைக்கலானார்.

இது மட்டுமின்றி ராம நாமத்தின் வெவ்வேறு மந்திரங்களையும் ராம ரஹஸ்ய உபநிஷதம் தருகிறது. ஒன்று முதல் 24 அக்ஷரங்கள் வரை உள்ள ராம மந்திரங்கள் இவை.

இவற்றில் இரண்டு முதல் ஆறு எழுத்து வரை உள்ள மந்திரங்கள் மிகச் சக்தி வாய்ந்தவையாகும்.

ராம தியான மந்திரத்தின் முக்கியத்தைக் கூறி விட்டு உடலை ஆற்றலுடன் கூடியதாக ஆக்க வல்ல ரகசியம் ராம மந்திரமே என்பதால் ராம மந்திரத்தை உச்சரிப்பது பயன் தரும் என்றும் கூறும் இந்த உபநிஷதம் ராம என்பதே ராம மந்திரத்தின் பீஜம் (விதை) என்று கூறுகிறது.

சீதையே படைப்பிற்கான காரணம்; ஹனுமானே உள்ளார்ந்த பக்திக்கு உதாரணம்; ராமரும் சீதையுமே உலக இருப்பிற்கான ஆதி காரணமாகும் – இதுவே முக்கிய ரகசியமாகும்.

ராம ரஹஸ்ய உபநிஷதம் 14 வைணவ உபநிஷதங்களில் ஒன்றும் கூட.

மிகச் சிறிய உபநிஷதமாக இருந்தாலும் கூட இது ராம ரஹஸ்யத்தை விரிவாகக் கூறும் உபநிஷதம் என்பதால் அனைத்து பக்தர்களும் இதைப் படிக்க வேண்டியது அவசியம்.

ராம நவமி நன்னாளில் ராம நாமத்தை உச்சரித்து ராமரின் பாதம் பணிவோமாக!

இதையும் படியுங்கள்:
பாவங்களைக் கரைத்து புண்ணியங்களைப் பெருக்கும் ஸ்ரீராம நவமி வழிபாடு!
lord rama hanuman

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com