சங்கு, சக்கரத்தோடு காட்சி தரும் ஸ்ரீராமர்: திருப்பிரையாரப்பன் கோயில் ரகசியம்!

Thriprayar Sri Rama Temple
Thriprayar Sri Rama Temple
Published on

பொதுவாக, பகவான் மகாவிஷ்ணு, பெருமாள் மற்றும் குருவாயூரப்பன் போன்ற இறை மூர்த்தங்கள் கைகளில் சங்கு சக்கரத்துடன் காட்சியளிப்பது வழக்கம். ஆனால், ஸ்ரீராமர் தம் திருக்கைகளில் சங்கு, சக்கரத்துடன் காட்சியளிக்கும் திருக்கோயில் கேரளாவில் உள்ள திருச்சூரில், திருப்பிரையார் என்னும் ஊரில் அமைந்துள்ளது.

இந்தக் கோயிலின் மூலவர் ஸ்ரீராமபிரான் திருப்பிரையாரப்பன் என்று அழைக்கப்படுகிறார். புராணத்தின்படி இந்த ஆலயத்தில் உள்ள ஸ்ரீராமபிரானை துவாபர யுகத்தின்போது ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா வழிபட்டதாகச் சொல்லப்படுகிறது. துவாபர யுகத்தின் முடிவில் துவாரகை கடலில் மூழ்கியது. அப்போது ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா வழிபட்ட ராமபிரான் சிலையும் கடலில் மூழ்கியது. பின்பு கேரளாவின் செட்டுவா கடலில் இருந்து மீனவர்களால் மீட்கப்பட்டு அங்கிருந்த ஆட்சியாளரிடம் இச்சிலை ஒப்படைக்கப்பட்டது. பின்பு திருப்பிரையாரில் ஸ்ரீராமரின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு ஆலயம் எழுப்பப்பட்டது என்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
ஸ்ரீ கிருஷ்ணரின் புல்லாங்குழல் குடும்பத்தின் அதிர்ஷ்டத்தை ஊதி விடுமா? ஆன்மிகம் சொல்லும் ரகசியம்!
Thriprayar Sri Rama Temple

இந்தக் கோயிலில் ஸ்ரீராமபிரான் நான்கு கரங்களுடன் சங்கு, சக்கரம், வில் மற்றும் அட்சமாலையுடன் காட்சியளிக்கிறார். இங்கு ஸ்ரீராமர் கோயிலுக்கு அருகில் சிவன், தட்சிணாமூர்த்தி, விநாயகர், ஸ்ரீகிருஷ்ணர், சாஸ்தா போன்ற தெய்வங்களுக்கும் சிறு சன்னிதிகள் உள்ளன.

கேரளாவில் நாலம்பலம் என்று அழைக்கப்படும் பிரபலமான நான்கு கோயில்கள் உள்ளன. தசரத சக்கரவர்த்தியின் நான்கு மகன்களான ராமர், லட்சுமணன், பரதன், மற்றும் சத்ருக்கனுக்காக கேரளத்தில் அமைக்கப்பட்டுள்ள நான்கு கோயில்களில் இது முதன்மையான ஆலயம் ஆகும். இந்த ஆலயத்தில் கொடி மரம் இல்லை. எனவே திருவிழாக்களின்போது இங்கு கொடியேற்றம் கிடையாது.

இதையும் படியுங்கள்:
ஒரே அடியில் தேங்காய் உடைந்தால் அதிர்ஷ்டமா? முட்டுத் தேங்காய் வழிபாட்டின் சூட்சுமம்!
Thriprayar Sri Rama Temple

இங்கு வெடி வழிபாடு மிக முக்கியமான சடங்காகக் கருதப்படுகிறது. அசோகவனத்தில் சீதையை கண்ட பிறகு, ‘கண்டேன் சீதையை’ என்ற தகவலை ஸ்ரீராமரிடம் சொல்லும்போது ஆஞ்சனேயர் வெடி வெடித்து அந்த செய்தியை மிகவும் மகிழ்ச்சியோடு சொன்னார் என்கிறது புராணம். அதை ஒட்டி இந்தக் கோயிலில் பக்தர்கள் தங்களது வழிபாடுகளையும் வேண்டுதல்களையும் வெடி வெடித்து அதன் மூலமாக நிறைவேற்றுகிறார்கள்.

இந்தக் கோயில் மர வேலைப்பாடுகளால் அழகுற திகழ்கிறது. ஏராளமான பழங்கால சுவர் ஓவியங்களையும் கொண்டுள்ளது. ராமாயணத்தின் பல காட்சிகள் சிற்பங்களாக வட்ட வடிவ கருவறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மார்ச், ஏப்ரல் மற்றும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வரும் பூரம் மற்றும் ஏகாதசி உள்ளிட்ட திருவிழாக்கள் இங்கு மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. திருவிழாவின்போது 21 யானைகளுடன் ஐயப்பன் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com