
பூமிக்குள் விளையும் பொருட்களை, ‘அகந்த மூலம்’ என்றும், மரத்தின் உச்சியில் விளையும் பொருட்களை, ‘கந்த மூலம்’ என்றும் சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. அகந்த மூலமானது மனிதனுக்கு தாம்ச குணத்தையும், கந்த மூலம் சத்வ குணத்தையும் உருவாக்கும். காலம் காலமாகவே நம்முடைய வழிபாடுகளில் தேங்காய்க்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. தேங்காயை உடைத்து, அதன் குடுமியை அகற்றி விட்டு, உள்ளிருக்கும் வெண்மையான பருப்பை இறைவனுக்கு நிவேதனம் செய்து, தீபாராதனை செய்யும்பொழுதுதான் நம்முடைய பூஜை முழுமை பெற்றதாக உணர்கிறோம்.
முட்டுத் தேங்காய் வழிபாடு என்பது, வீட்டில் அல்லது கோயில்களில் நடைபெறும் பூஜைகளில், ஒருவர் தனக்கு வேண்டிய காரியம் நிறைவேற வேண்டும் என்ற விருப்பத்துடன் தேங்காயை உடைத்து வழிபடும் ஒரு வழிமுறையாகும். இதில் ஒருவர் தங்களது ஆரோக்கியம், வெற்றி, வியாபாரம், கல்வி, திருமணம் போன்ற பல தேவைகளுக்காக வெவ்வேறு வகையான முட்டுக்களை உடைத்து வழிபடுகின்றனர். காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறிய பிறகு கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நெய் தீபம் ஏற்றி நைவேத்தியம் படைத்து வழிபடுவது வழக்கமாகும்.
கேரளாவில், குறிப்பாக வடக்கு கேரளாவின் திருவிழாக்களில், அம்மன் தெய்வத்தை சாந்தப்படுத்த தேங்காய்களை உடைக்கும் ஒரு வழிபாடு உள்ளது. இது, ‘முட்டுத் தேங்காய் வழிபாடு’ அல்லது ‘தேங்காய் உடைக்கும் சடங்கு’ என்று அழைக்கப்படுகிறது. மேலும், இது பூரக்களி போன்ற திருவிழாக்களின் ஒரு பகுதியாகும். இந்தச் சடங்கு தாய் தெய்வத்தை மகிழ்விப்பதற்காக செய்யப்படுகிறது.
ஒரு பெரிய கல் பலகையின் மீது தேங்காய் உடைக்கப்படும். அந்த உடைத்த தேங்காய்த் துண்டுகளை பெறுவதற்கு ஒருவருக்கொருவர் போட்டி போட்டு கொள்வார்கள். இந்தச் சடங்கு பூரக்களி போன்ற திருவிழாக்களின்பொழுது செய்யப்படுவதுடன், கண்ணூர் பகுதியில் உள்ள ஸ்ரீ நீலியாதகத்துட்டு பெரிங்கோத் கோயிலிலும் (Sree Neeliyathakathuttu Peringoth temple) இந்தச் சடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
தேங்காய் வழிபாடு: ஸ்ரீ வடிவுடைய அம்மனுக்கு கேரள நம்பூதிரிகளால் முட்டுத் தேங்காய் வழிபாடு செய்யப்படுகிறது. தீராத பிரச்னைகளுக்கு எல்லாம் ஒரே தீர்வாக நம்பூதிரிகள் பூஜை செய்யும்பொழுது ஒரு தேங்காயை வாங்கி வந்து நம்பூதிரிகளிடம் கொடுக்க வேண்டும். வேண்டுதல் பூஜைக்கு முதல் நாளே தேங்காயை வாங்கி வந்து நம் வீட்டு பூஜை அறையில் வைத்து நம் பிரச்னைகள் தீருவதற்கு வேண்டிக்கொள்ள வேண்டும்.
அடுத்த நாள் கோயிலுக்கு எடுத்துச் சென்று அவர் அபிஷேகம், பூஜை செய்த பிறகு நம்பூதிரிகளிடம் நட்சத்திரம் மற்றும் நம்முடைய குறைகளையும், பிரார்த்தனைகளையும் கூற, அவர் அந்தத் தேங்காயை அம்பாளிடம் சமர்ப்பித்து தேங்காயை உடைப்பார்கள். ஒரே உடைப்பில் தேங்காய் இரண்டு துண்டாக உடைந்து விட நம் பிரார்த்தனைகள் நிறைவேறும், பிரச்னைகள் தீரும் என்ற நம்பிக்கை உள்ளது. சரியாக உடையவில்லை என்றாலும் கவலைப்பட வேண்டாம். மூன்று அல்லது ஐந்து வாரங்கள் வேண்டிக்கொண்டு இதனைச் செய்ய, நம்பூதிரிகள் நமக்காக வேண்டிக் கொண்டு நம் பிரார்த்தனையை நிறைவேற்ற உதவுவார்கள்.