

சென்னை தொலைபேசி அலுவலகத்தில் வேலை பார்க்கும் நாங்கள் ஒன்பது பெண்கள் புட்டபர்த்தி செல்ல விரும்பி, ஒரு மஹாளய அமாவாசை தினத்தன்று மாலையில் அலுவலகம் முடிந்து ஒரு டாடா சுமோவில் கிளம்பினோம்.
மறுநாள் காலை ஆறு மணிக்கு பகவானின் தரிசனம் பார்த்துவிட்டு, மாலையே கிளம்பி அடுத்த நாள் காலை சென்னை வரும் உத்தேசம் எங்களுக்கு. எங்களுடன் ஒரே ஒரு ஆண்மகன், ஒரு தோழியின் கணவர் வந்தார்.
நல்ல அனுபவமுள்ள டிரைவர் வேண்டும் என்று கேட்டிருந்தும், கடைசி நிமிடத்தில் புட்டபர்த்தி ரூட்டே தெரியாத டிரைவர்தான் கிடைத்தார். டிரைவர் மதனபள்ளிக்கருகே வழி தவறி எங்கேயோ சென்றுவிட்டார். திடீரென கார் வேறு மக்கர் செய்து நின்றுவிட்டது. எங்கும் ஒரே கும்மிருட்டு! எங்கள் காரைத் தவிர வேறு ஈ காக்கா அந்த வழியில் காணப்படவில்லை.
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 'பகவான் பாபா' புத்தகத்தை வாங்க கீழே உள்ள Link-கை கிளிக் செய்யவும்!
"எதாவது மெகானிக் கடைக்குச் சென்றால்தான் வேலையாகும்" என்று முணுமுணுத்துக்கொண்டே டிரைவர் டார்ச்சின் உதவியோடு ரிப்பேர் பார்த்துக்கொண்டிருந்தார்.
அந்தக் குழுவில் பாதி பேர் (நான் உட்பட) இது வரை புட்டபர்த்தியே செல்லாதவர்கள். பாபாவைப் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வத்தைத் தவிர வேறு பயமோ பீதியோ கிஞ்சித்தும் இல்லை. பயணம் ஆரம்பித்திதிலிருந்து நாங்கள் சாயி காயத்ரி சொல்லி சாயி பஜன் விடாமல் பண்ணிக்கொண்டிருந்தோம். இப்போதும் பஜன் தொடர்ந்துக்கொண்டே இருந்தது.
காரை ஒரு வழியாக தற்காலிகமாக ரிப்பேர் செய்துவிட்டார் டிரைவர். ஆனால், மெதுவாகத்தான் செல்ல முடியும். கண்டிப்பாக காலை ஆறு மணிக்கு பகவானின் தரிசனத்திற்கு புட்டபர்த்திக்குச் செல்ல முடியாது, நேரமாகும் என்று சொல்லிவிட்டார்.
ஒரே நாள் விடுமுறை எடுத்துக்கொண்டு புட்டபர்த்திக்குக் கிளம்பிய எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இருந்தாலும் நம்பிக்கையை கைவிடாமல் தொடர்ந்து பாபாவைப் பிரார்த்தனை செய்து கொண்டேயிருந்தோம்.
அப்போது அந்த வழியே எங்கள் காரைப் போலவே மற்றொரு வெள்ளை நிற டாடா சுமோ வந்தது. டிரைவர் மட்டும்தான் இருந்தார் அந்தக் காரில். அவர் முகத்தைப் பார்க்க முடியவில்லை. புட்டபர்த்திக்குப் போகும் வழி தவறிவிட்டோம் என்றதும், "என்னைப் பின் தொடருங்கள்" என்று சொல்லிவிட்டு அந்த கார் பறக்க ஆரம்பித்தது. அதற்கு ஈடு கொடுத்து எங்கள் காரும் பறந்தது. ஓடுமா என்று நினைத்த கார் எப்படி அவ்வளவு வேகமாகச் சென்றது என்றே புரியாமல் பயணப்பட்டுக் கொண்டிருக்கும்போது ப்ரஷாந்தி நிலையமே வந்துவிட்டது.
"இந்த வழி தான்" என்று கை காட்டிவிட்டு அந்த கார் கண்ணிலிருந்து மறைந்துவிட்டது. வழி காட்டியது யார் என்பது தெரியாவிட்டாலும், விரைவாக கொண்டு சேர்த்ததற்கு பகவானுக்கு மானசீகமாக நன்றி சொல்லிவிட்டு நாங்கள் நினைத்தது போலவே நேரத்திற்கு சென்று பரவசமாக பகவானின் காலை தரிசனம் பார்த்தோம்.
சென்னைக்குத் திரும்பியதும் நாங்கள் போன ரூட்டைக் கேட்ட ஆந்திராவைச் சேர்ந்த மற்றொரு தோழி, "நீங்கள் போனது எல்லோரும் செல்லும் வழியில்லையே! நக்சலைட்டுகளும், தீவட்டி கொள்ளைக்காரர்களும் செல்லும் காட்டு வழியல்லவா?" என்று சொன்னதும் எங்களுக்குத் தூக்கிவாரிப் போட்டது.
இது மட்டுமல்ல. எங்களுக்குப் பின் தரிசனத்திற்கு சென்றவர்களிடம் உரையாற்றிய பகவான் பாபா, "பெண்கள் தரிசனத்திற்காக இனிமேல் இரவு வேளையில் தனியாக வரக்கூடாது" என்றும் கூறியனுப்பியதாகக் கேள்விப்பட்டதும், நட்ட நடுநிசியில் அந்த அத்வான வழியில் எங்களுக்கு வழி காட்ட வந்தது பகவான் பாபாவேதான் என்பது எங்களுக்கு வெட்ட வெளிச்சமாக, வழித்துணையாக வந்த பகவானின் கருணையை நினைத்து, நினைத்து நாங்கள் மெய் சிலிர்த்துப் போனோம்.
- ரேவதி பாலு