

'புட்டபர்த்தி சாய்பாபா' என்ற பெயரைச் சொன்னாலே என் மனதில் எண்ணற்ற நினைவுகள் அலைமோதுகின்றன. தினமும் காலையில் எழுந்ததும் நான் சொல்லும் ஒரே மந்திரம் “சாய் ராம் என்று சொல்லிடுவோமே! சங்கடங்கள் யாவும் தீர்த்திடுவோமே!” அதுவே என் தினத்தின் தொடக்கம். என் மன அமைதியின் காரணம். என் வாழ்க்கையில் சாய்பாபா மீது கொண்ட நம்பிக்கையை உறுதியாக்கிய இரண்டு அனுபவங்கள் என்றும் என் நினைவில் பதிந்தவையாக உள்ளன.
அனுபவம் ஒன்று:
2013ஆம் ஆண்டு அன்று என் மகளின் திருமணத்திற்காக கோவையின் டவுன் ஹாலுக்கு என் அண்ணனுடன் அவரது ஆட்டோவில் மளிகைப் பொருட்கள் வாங்கச் சென்றோம். சுமார் 15,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை வாங்கி, ஆட்டோவை ஸ்டார்ட் செய்ய முயன்றபோது அது இயங்கவில்லை. Self-start பிரச்னை இருந்ததால், கயிறு இழுத்தும் பலமுறை முயன்றும் பயனில்லை. நெரிசலான மார்க்கெட்டில் வாகனங்கள் ஹார்ன் அடித்து எங்களை நகரச் சொல்லிக்கொண்டிருந்தன. என்ன செய்வது எனத் தெரியாமல் நான் இரு கைகளையும் கூப்பி, மனதார “Sairam, please help me” என்று பிரார்த்தனை செய்தேன்.
அந்த நேரத்தில் எங்கிருந்தோ ஒருவர், ஆட்டோ ஓட்டுநர் போல உடை அணிந்து வந்து என் அண்ணனின் தோளைத் தட்டி, “டிரைவர் சீட்டில் அமருங்கள்” என்றார். அவர் கயிற்றை ஒரே முறை இழுத்தவுடன் ஆட்டோ ஸ்டார்ட் ஆனது! நன்றி சொல்லப் பார்த்தபோது அவர் காணவில்லை. வீடு வரும் வரை எந்த இடையூறும் இல்லை.
வழியிலே பேசிக் கொண்டிருக்கும்போது, “அந்த ஆட்டோக்காரர் யார்?” என்று கேட்டேன். அண்ணன் சொன்னார், “நான் இதுவரை அவரைப் பார்த்ததே இல்லை.” அப்போதுதான் நாங்கள் உணர்ந்தோம், அவர் வேறு யாரும் அல்ல, சாய்பாபாவே!
அனுபவம் இரண்டு:
மகன் பள்ளி விடுமுறையில் புட்டபர்த்தி சாய்பாபா கோயிலில் சேவை செய்வது வழக்கம். ஒருமுறை செல்லும்போது நான் அவரிடம், “மஞ்சள் ஆடையில் இருக்கும் சாய்பாபா புகைப்படம் வாங்கி வா” என்று கேட்டேன். ஆனால், கடைகளில் கிடைக்கவில்லை என்று வருந்தினார். பஸ் புறப்படும் நேரத்தில், அவருடன் பணியாற்றிய ஒருவர் ஓடி வந்து ஒரு பையைப் பரிசளித்தார். பயணத்தில் பையைத் திறந்து பார்த்தபோது அதில் இருந்தது, ஒரு A4 அளவிலான சாய்பாபா புகைப்படம், இரண்டு சிறிய படங்கள், மேலும் மஞ்சள் ஆடையுடன் இருந்த ஸ்டாண்ட் புகைப்படம்! அந்தப் புகைப்படத்தைப் பார்த்தவுடன் எனது மகன் உற்சாகமாக எனக்குப் போன் செய்து, “அம்மா, நீங்கள் கேட்டதை சாய்பாபா அனுப்பியிருக்கிறார்!” என்று கூறி என்னை மெய்சிலிர்க்க வைத்தார்.
அந்தப் புகைப்படம் இன்று வரை என் அலுவலக மேஜையில் இருக்கிறது. நான் ஓய்வுபெற்ற பின்பும், அது என் சக ஊழியர்களின் வேண்டுதல்களுக்கும் சக்தியாய் உள்ளது.
இந்த இரண்டு அனுபவங்களும் எனக்கு ஒரு உண்மையை உணர்த்தின. “நாம் மனதார அழைத்தால் சாய்பாபா எப்போதும் நம்மோடு இருந்து ஆசீர்வதிக்கிறார்.”