இரண்டு பக்கமும் உபய காவிரி என்ற பெயரால் காவிரி பாய, நடுவில் ஒரு திட்டில் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீரங்கநாதர். அவரை, ‘காவிரி ரங்கன்’ என்பர். ரங்கநாதர் அங்கு கோயில்கொள்ள காரணமாக இருந்தவர் பிள்ளையார்.
ஸ்ரீரங்க விமானத்தை, ‘இட்சுவாகு குலதனம்’ என்பார்கள். அது அந்த வம்சத்து அரசர்களால் வழிவழியாக பூஜை செய்யப்பட்டு வந்த விமானம். ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியால் பூஜிக்கப்பட்டதும் இதுவே.
ஸ்ரீ ராமபிரான் வனவாசம், ராவண வதம் முடித்து, பட்டாபிஷேகம் செய்து கொண்ட பின் பலருக்கு பல பொருட்களை பரிசாகக் கொடுத்தார். விபீஷணனுக்கு மிக உயர்ந்த பரிசு பொருட்களைத் தந்ததுடன் தமது பரம்பரையால் வழிபட்ட ஸ்ரீரங்க விமானத்தையும் வெகுமதியாகக் கொடுத்தார். விமானத்தையும் ரங்கராஜரையும் பரிசாகப் பெற்றுக்கொண்ட விபீஷணன், ஸ்ரீராமனை வணங்கி இலங்கை நோக்கி புறப்பட்டார்.
அப்போது ஸ்ரீ ராமபிரான், “விபீஷணா, நீ இதை இலங்கைக்குக் கொண்டு செல்ல விரும்புகிறாய். விமானத்தை வழியில் எங்கும் பூமியில் வைத்து விடக்கூடாது. தவறி வைத்து விட்டால் அங்கு இந்த விமானம் பிரதிஷ்டை ஆகிவிடும். ஜாக்கிரதை” என்று எச்சரித்து அனுப்பினார்.
விமானத்துடன் பறந்தான் விபீஷணன். வழியில் காவிரி ஆறு கண்ணில் பட்டது. பொங்கி புரண்டோடிய காவிரி ஆற்றை பார்த்தவுடன் அதில் குளித்து அனுஷ்டானங்களை செய்ய வேண்டும் என்ற ஆசையை அவன் மனதில் உருவாக்கினர் விநாயகர். அவன் கீழே இறங்க, அதே நேரத்தில் விநாயகர் ஒரு சிறுவனின் உருவத்தில் எதிரே வந்தார். அந்த சிறுவனிடம், “தம்பி எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா? நான் காவிரியில் குளித்துவிட்டு திரும்பும் வரை இதை நீ கையில் வைத்துக் கொள். பூமியில் வைத்து விடாதே” என்று கேட்டான் விபீஷணன்.
“அப்படியே செய்கிறேன். ஆனால், ஒரு நிபந்தனை. என் கைகள் களைத்துபோனால் உங்களை மூன்று முறை கூப்பிடுவேன். வரவில்லை என்றால் பூமியில் வைத்து விடுவேன்” என்றான் சிறுவன். இதற்கு ஒப்புக்கொண்டு குளிக்கப் போனான் விபீஷணன். கொஞ்ச நேரம் ஆனதும் விபீஷணன் நடுஆற்றில் குளிக்கும்போது வேகம் வேகமாக மூன்று தடவை கூப்பிட்டான் சிறுவன்.
இந்த சத்தம் கேட்டு விபீஷணன் அவசர அவசரமாக ஓடி வந்தான். அதற்குள் ஸ்ரீரங்க விமானத்தை பூமியில் வைத்துவிட்டான் சிறுவன். விரைந்து வந்த விபீஷணன் விமானத்தை அசைத்துப் பார்த்தான். ஆனால், அது அசையவில்லை. இத்தனைக்கும் சிறுவன்தானே காரணம் என்று கோபம் கொண்ட விபீஷணன் சிறுவனை துரத்திச் செல்ல முடிவில் விபீஷணன் திருச்சி மலை உச்சியை அடைந்தான்.
அங்கே சிறுவனை கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். சிறுவனை தலையில் ஒரு குட்டு குட்டினான். குட்டுபட்ட மாத்திரத்தில் சிறுவன் மறைந்தான். அங்கே விபீஷணனுக்கு விநாயகர் காட்சி தந்தார். உச்சி பிள்ளையார் தலையில் விபீஷணன் குட்டிய தழும்பு இன்றும் இருக்கிறது. இலங்கைக்குச் செல்ல வேண்டிய ஸ்ரீரங்க விமானத்தை பாரதத்தில் ஸ்ரீரங்கத்தில் தங்குமாறு செய்த செயலுக்கு இப்படித்தான் காரண கர்த்தாவானார் விநாயகர். திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாரும் இப்படித்தான் தோன்றினார்.