ஸ்ரீரங்கம் கோயில் மர்மங்கள்: உலகையே மிரள வைக்கும் ஆச்சரியங்கள்!

Srirangam Temple Surprises
Srirangam Sri Ranganatha Perumal Temple
Published on

திவ்ய தேசங்கள் 108ல் ஒன்றாகவும் பூலோக வைகுண்டம் என்றும், உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய கோயிலாகவும் கருதப்படும் ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோயில் பல மர்மங்களை உள்ளடக்கியது. அது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

வளரும் நெற்குதிர்கள்: ஸ்ரீரங்கம் கோயிலில் சக்கரத்தாழ்வார் சன்னிதிக்கு அருகில் 20 அடி விட்டமும் 30 அடி உயரமும் கொண்ட நெற்குதிர்கள் இருக்கின்றன. ஆயிரம் ஆண்டுகள் பழைமையான வட்ட வடிவ இந்த நெல் சேமிப்பு கிடங்கால் மொத்தமாக 1500 டன் எடை கொண்ட நெல்லை சேமிக்க முடியும். இதில் ஆச்சரியம் என்னவென்றால், இதில் எந்தக் காலத்திலும் நெல் குறைந்து பற்றாக்குறையே ஏற்பட்டது இல்லை. அதேபோல, எவ்வளவு நெல் கொட்டினாலும் அதை ஏற்றுக்கொள்ளும் தன்மையை உடையது இந்த நெற்குதிர்கள்.

இதையும் படியுங்கள்:
இந்திர லோகத்தின் செல்வ வளத்தை பெருக்கிய முருகப்பெருமான் திருத்தலம்!
Srirangam Temple Surprises

அசையும் கொடிமரம்: எல்லா கோயில்களிலும் உள்ள கொடிமரங்கள் மரம் மற்றும் கல்லால் செய்யப்பட்டு இருப்பதால் அசையாது. ஆனால், ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்க விலாஸ் மண்டபத்திற்கு அருகில் கொடிமரத்தை வணங்கிவிட்டு மேலே அண்ணாந்து பார்த்தால் அசையும் தோற்றம் தெரியும் என்கின்றனர். அப்படி அசைவது போல் நமக்குத் தோன்றினால் நாம் வேண்டியது நிச்சயம் நிறைவேறும் என்றும் சொல்லப்படுகிறது.

ஸ்ரீராமானுஜர் திருமேனி: 120வது வயதில் ஸ்ரீ ராமானுஜர் பரமபதம் எய்தினார். வைணவ சம்பிரதாயப்படி வைணவப் பதவி அடைந்த துறவிகளை எரியூட்டாமல் சமாதியில் அமர வைத்து மூடப்படும். அதேபோல்தான் ராமானுஜரின் உடல் ஸ்ரீரங்கத்தின் வசந்த மண்டபத்தில் சமாதிப்படுத்தப்பட்டுள்ள உடல் இன்றும் உயிரோட்டத்துடன் காட்சியளிக்கிறது. ராமானுஜரின் உடல் பச்சைக் கற்பூரம் மற்றும் குங்குமத்தால் செய்யப்பட்ட கலவையால் மூடப்பட்டிருப்பதால் 900 ஆண்டுகள் கடந்தும் அப்படியே காட்சி தருவது அதிசயமாகும்.

தேயும் செருப்புகள்: பள்ளிகொண்ட பெருமாள் ஸ்ரீரங்கத்தில் அணிந்திருக்கும் காலணிகள் தேய்மானத்திற்குப் பிறகு ஸ்ரீரங்கம் திருக்கொட்டாரம் என்னும் இடத்தில் தூணில் மாட்டி வைத்திருப்பதை காணலாம். இந்த செருப்பை செய்வதற்கென்றே தொண்டர்கள் இருக்கிறார்கள். தனித்தனியாக வெவ்வேறு இடங்களில் இரண்டு செருப்பையும் செய்வார்கள். ஆனால், அதிசயமாக இரண்டுமே ஒன்று போல இருக்கும்.

இதையும் படியுங்கள்:
எதிரிகளின் தொல்லைகளைப் போக்கும் எளிய பரிகாரங்கள்!
Srirangam Temple Surprises

பெருமாளின் ஜொலிக்கும் கண்கள்: ஸ்ரீரங்கம் பெருமாளின் கண்கள் கோஹினூர் வைரங்களை விட விலைமதிப்பற்ற வைரங்களால் உருவானதாகவும், அது ஆங்கிலேயர் காலத்தில் திருடுபோய் விட்டதாகவும் சொல்கிறார்கள். விபீஷணர் ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு இதை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

ஐந்து குழி, மூன்று வாசல்: ஸ்ரீரங்கம் கோயிலில் தாயார் சன்னிதிக்கு அருகில் உள்ள ஐந்து குழி, மூன்று வாசல் அதிசயம் நிறைந்தது. இங்கிருக்கும் ஐந்து குழிகளிலும், ஐந்து விரல்களை விட்டுப் பார்க்கும்போது பரமபத வாசல் தெரியும். இப்படித்தான் தாயார் பெருமாளை வணங்குகிறார் என்பது ஐதீகம். அர்த்தபஞ்சக ஞானத்தை குறிப்பது ஐந்து புள்ளியாகும். மூன்று வாசல் என்பது பிரம்மத்தின் ஞானம் என்றும் கூறப்படுகிறது.

வைணவ ஆலயங்களிலேயே வருடத்தில் 322 நாட்கள் திருவிழா நடைபெறும் ஒரே கோயிலாக இருக்கும் ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோயிலுக்கு 2017ம் ஆண்டு யுனெஸ்கோ விருது வழங்கி சிறப்பித்துள்ளது.

ம.வசந்தி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com