மனிதராகப் பிறந்தவர்கள் இன்பம், துன்பம், பாவம் என அனைத்தையும் சுமந்தே வாழ வேண்டும் என்பது நியதி. ஆனால், இறுதியில் புனித பூமியான காசிக்கு சென்று விஸ்வநாதரை தரிசனம் செய்தால் மட்டுமே புண்ணியம் பெற்று இறப்பிற்கு பின் மறுபிறவியின்றி முக்தி பெறலாம் என்பது இந்து மத நம்பிக்கை. இந்துக்கள் மட்டுமின்றி, கங்கையில் மூழ்கி காசி விஸ்வநாதரை தரிசனம் செய்ய இந்தியா மற்றும் உலக நாடுகள் முழுவதிலும் இருந்து பக்தர்கள் காசிக்கு வந்து செல்கின்றனர்.
ஆனால், தமிழகம் மற்றும் தென்னகத்திலிருந்து நெடுந்தொலைவில் உள்ள காசிக்கு செல்ல பொருட்செலவுடன் சூழல்களும் ஒத்துழைக்க வேண்டும். ஆகவே, நினைத்தாலும் அனைவராலும் காசிக்குச் செல்ல முடிவதில்லை. ஆனால், காசிக்கு செல்வதை விட பல மடங்கு புண்ணியம் தருகிற சிறப்பு வாய்ந்த ஆலயம்தான் தமிழகத்தில் கும்பகோணத்திற்கு அருகே உள்ள, ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி திருக்கோயில். காசி திருத்தலத்திற்கு நூறு முறை சென்று வந்த பலனை இங்கு ஒருமுறை சென்று வந்தால் கிடைக்கும் என்று பிரம்மாண்ட புராணம் இக்கோயிலின் சிறப்புப் பற்றி கூறுகிறது.
அப்படி என்ன இந்தக் கோயிலுக்கு மட்டும் சிறப்பு என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா? எங்கும் இல்லாத வகையில் உயிர்களை பறிக்கும் எமதர்மனுக்கு முதல் மரியாதை என்பதுதான் இந்த ஆலயத்தின் சிறப்பு.
உயிர்களைப் பறிப்பதால் தனக்கு பிரம்மஹத்தி தோஷத்துடன் மக்களிடம் பெரும் அவப்பெயர் உள்ளதாக வருந்திய எமதர்மன், அசரீரி கூற்றின்படி, ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி திருக்கோயிலுக்கு வந்து சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தார். எமதர்மனின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் அவருக்குக் காட்சியளித்து, "என்ன வரம் வேண்டும்?" எனக் கேட்க, எமதர்மனும் தனது வருத்தத்தைக் கூறி அதிலிருந்து விடுபட வேண்டும் என்று வரம் கேட்டார்.
எமனின் கோரிக்கையை ஏற்ற இறைவனும், "இனி யாரும் எமன் உயிரைப் பறித்து விட்டான் என்பதைத் தவிர்த்து நோய், மூப்பு, விபத்தினால் இறந்ததாகக் கூறுவார்கள். மேலும், நீ தவம் செய்த இந்த இடத்திற்கு புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே வர அனுமதித்து, எம்மோடு உன்னையும் தரிசிப்பவர்களுக்கு மறுபிறவி இல்லாமலும் போகும். இத்தலத்தில் க்ஷேத்ரபாலகனாகவும் நீ எனக்கு முன் வழிபடப்படுவாய்" என்று அருளியதாகப் புராண வரலாறு.
அதன்படியே, ஸ்ரீவாஞ்சிநாதரை வழிபடும் முன், யோக நிலையில் உள்ள எமதர்மனை வணங்கி வழிபடுகின்றனர் பக்தர்கள்.
ஸ்ரீவாஞ்சியத்தில் இறந்தவருக்கு எம பயம், பைரவ தண்டனை எதுவுமே கிடையாது. இங்கு பைரவரும் யோக நிலையில் இறைவனை வணங்கிய கோலத்தில் இருக்கிறார். எனவே, எமதர்மன் மற்றும் பைரவர் இருவருக்குமே அதிகாரம் இல்லாத இத்தலம் காசியைக் காட்டிலும் நூறு மடங்கு உயர்ந்தது என்று முனிவர்கள் கூறுகின்றனர்.
மக்கள் செய்த பாவங்களைப் போக்கும் கங்கையின் பாவத்தையும் தீர்க்கும் தலமாக இது விளங்குகிறது. ‘ஸ்ரீவாஞ்சியத்திற்கு சென்று வணங்கினால் உன்னிடம் சேர்ந்த பாவங்கள் விலகும்’ என்று அருளிய சிவனின் கூற்றுப்படி கங்கை தனது ஆயிரம் கலைகளில் ஒரு கலையை மட்டும் காசியில் விட்டுவிட்டு மீதியுள்ள 999 அம்சங்களுடன் இங்குள்ள தீர்த்தத்தில் உறைந்திருப்பதாக ஐதீகம். அதனால் இத்தல தீர்த்தம், ‘குப்த கங்கை’ என்று அழைக்கப்பட்டு, தற்போது, ‘முனி தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது.
இந்த சிறப்புகளாலேயே காசியை விட பல மடங்கு புண்ணிய தீர்த்தமாகவும் முக்தி தரும் ஆலயமாகவும் இக்கோயில் விளங்குகிறது.