திருப்பம் தரும் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் தரிசனம்!

Tiruppattur Brahmapureeswarar darshan which gives a turning point
Tiruppattur Brahmapureeswarar darshan which gives a turning pointhttps://www.youtube.com
Published on

‘புது வருடம் பிறக்கப்போகிறது. ஒவ்வொரு ஆண்டிலும் நமது வாழ்க்கையில் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்ந்து விடாதா?’ என்று ஏங்குவோர் பலர் உண்டு. அப்படி உங்கள் வாழ்வில் நல்ல திருப்பம் ஏற்பட நீங்கள் சென்ற தரிசிக்க வேண்டிய திருத்தலம் திருப்பட்டூர் பிரம்ம தேவர் திருக்கோயில். இக்கோயில் சென்று பிரம்ம தேவரை வணங்கினால் உங்கள் வாழ்வில் நல்ல திருப்பம் ஏற்படும் என்பது உறுதி.

படைப்புத் தொழிலை புறக்கணித்து அகங்காரத்துடன் இருந்த பிரம்மாவை அடக்குவதற்காக சிவபெருமான் அவருடைய ஒரு தலையை கிள்ளி பதவியையும் பறித்தார். தனது தவறை உணர்ந்த பிரம்மா, பூமியில் பல தலங்களில் லிங்கங்0களை பிரதிஷ்டை செய்து சிவனை வழிபட்டு குளிர்வித்தார். அவ்வாறாக ஒரே இடத்தில் பன்னிரண்டு சிவலிங்கங்களை ஸ்தாபித்து சிவபெருமானை வணங்கி, தான் இழந்த படைப்பு தொழிலுடன் மீண்டும் பதவியைப் பெற்ற திருத்தலம்தான் திருப்பட்டூர் என்கிறது புராண வரலாறு.

இங்குள்ள ஈசன், பிரம்மபுரீஸ்வரர் என்று திருப்பெயரில் அருள்புரிகிறார். அவருக்கு அருகிலேயே தனிச் சன்னிதியில் பிரம்ம தேவர் மிக பிரம்மாண்டமான திருவுருவத்துடன்  வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். சம்பத்துகளில் ஒன்றான பதவியை பிரம்மாவுக்கு அருளியதால் இங்குள்ள அம்பிகை, பிரம்ம சம்பத் கௌரி என்று அழைக்கப்படுகிறாள். தனது தலையெழுத்தையே ஈஸ்வரன் அருளால் இங்கு மாற்றிக்கொண்ட பிரம்மாவின் மடியில் நமது ஜாதகத்தை வைத்து நம்பிக்கையுடன் வேண்டினால் தலையெழுத்து திருத்தி அமைப்பார் என்பது நம்பிக்கை.

குருவுக்கு அதிபதி பிரம்மா என்பதாலும், வாழ்க்கையை மங்கலகரமாக மாற்றி அமைத்துத் தருபவர் என்பதாலும் இங்கு மஞ்சள் பிரசாதமே பிரதானமாகிறது. பிரம்மாவுக்கும் மஞ்சள் நிற வஸ்திரமே அணிவிக்கப்படுகிறது. மேலும், தங்கள் வேண்டுதல்கள் நிமித்தம் பக்தர்களும் மஞ்சள் காப்பு செய்கின்றனர். தேவர்களின் பிரம்ம முகூர்த்தம் என சொல்லப்படும் மார்கழி பிரம்ம முகூர்த்தத்தில் இக்கோயில் வந்து பிரம்மாவை வழிபடுவது சிறப்பு.

பிராகாரத்தில் யோகக் கலையை மனிதர்களுக்கு அறிமுகம் செய்த பதஞ்சலி முனிவரின் அதிஷ்டானம் உள்ளது. மன அமைதிக்காக தியானம் செய்வதற்கு தியான அரங்கமும் இங்கு உள்ளது. வியாக்ரபாதர் வழிபட்ட காசி விஸ்வநாதர் ஆலயம் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. புலியின் கால்களைப் பெற்ற அவர் உருவாக்கிய தீர்த்தத்திற்கு புலிப்பாய்ச்சி தீர்த்தம் என்று பெயர்.

இதையும் படியுங்கள்:
எந்த விநாயகரை வணங்க என்ன பலன் கிடைக்கும்?
Tiruppattur Brahmapureeswarar darshan which gives a turning point

பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்திற்கு அருகிலேயே தமிழகத்திலேயே எங்கும் இல்லாத சிறப்பாக சுவடி ஏந்திய அரங்கேற்ற அய்யனார் எனும் மிகப்பெரிய கல் கோயில் உள்ளது. பிரம்மபுரீஸ்வரர் கோயிலுக்குச் செல்பவர்கள் அருகிலிருக்கும் இந்த சிறப்புமிக்க ஆலயங்களுக்கும் சென்று வந்தால் முழுமையான பலன்களைப் பெறலாம்.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 29 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில். திருச்சி, சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து இங்கு செல்ல பேருந்து வசதி உண்டு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com