
ஸ்ரீவில்லிபுத்தூர் என்றதுமே நினைவுக்கு வருவது ஆண்டாள் கோவில். அவரது திருப்பாவையும் நாச்சியார் திருமொழி மட்டும் அல்ல ஆண்டாளின் சிறப்பு சாய்ந்த கொண்டையும், அவரது தோளில் வீற்றிருக்கும் கிளியும் ஆண்டாளின் அடையாளங்களாக கூறுவார்கள். வில்லிபுத்தூரில் குடி கொண்டிருக்கும் ஆண்டாளுக்கு தினம் தினம் ஒரு கிளி செய்யப்படுகிறது.
மார்கழி மாதத்தில் ஆண்டாள் அருளி சென்ற திருப்பாவையை பெண்கள் அனைவரும் பாடி மகிழ்வர். பனி விலகாத அதிகாலையில் நீராடி, பூச்சூடி பெண்கள் பாவை நோன்பு பாடுவது மிகவும் சிறந்த வழிபாடு.
கல்யாணக் கிளி :
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளின் இடது கையில் உள்ள 'கல்யாணக் கிளி ' திருமணத் தடையை நீக்குகிறது. கிளியை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது.
'உலகளந்தான் வரக் கூவாய் ' என்று குயிலைப் பார்த்து பாடிய ஆண்டாளின் இடது கையில் கிளி எப்படி வந்தது? அதன் கதை என்ன தெரியுமா?
வியாசரின் மகனான சுகப்பிரம்மம் எனும் ரிஷியை கிளி வடிவில் ரங்கநாதரிடம் 'தூது ' அனுப்பியவள் ஆண்டாள்.
தூது சென்று வந்த கிளியிடம், "என்ன வரம் வேண்டும்?" என ஆண்டாள் கேட்க, சுகப்பிரம்மம், "கிளி ரூபத்தில் உங்கள் கையில் தினமும் இருக்க அருள் புரிய வேண்டும்," என்றார். அதனால் தான் ஆண்டாள் கையில் கிளி உள்ளது.
பக்தர்கள் தங்களின் கோரிக்கைகளை கூறும் பொழுது அதைக் கேட்கும் கிளியும் அடிக்கடி ஞாபகப்படுத்தி ஆண்டாளிடம் பிரார்த்தனையை நினைவு படுத்துமாம். நமக்கான கடினமான விஷயத்தை செய்து முடிப்பதற்கு நம் சார்பில் யாராவது இருந்து பேசி முடித்தால் நன்றாக இருக்குமே? அதைத்தான் ஆண்டாளின் கையில் உள்ள கிளியும் செய்கிறது. பக்தர்கள் ஒரு கோரிக்கை வைத்தால், அதனை மிக சிறப்பு பெற்ற கிளி செய்து முடிக்குமாம்.
கிளி உருவாகும் விதம்:
ஆண்டாளின் கையில் உள்ள கிளி எப்படி உருவாகிறது என்பதை பார்ப்போம்.
வாழைநார், மரவள்ளிக்கிழங்கு இலைகளால் கிளியின் உடல், முகத்தை வடிவமைப்பர். சிறகுகளுக்கு நந்தியாவட்டை இலைகள். கிளி உருவாக நடுவில் வைக்கப்படும், மூன்று குச்சிகளை இந்த இலைகள் மறைக்கின்றன. இதில் உட்கார்ந்து இருப்பது போல் காட்டுவதற்கு நந்தியாவட்டை பூக்கள் பயன்படுகின்றன.
கழுத்துக்கு ஆபரணமாக பனை ஓலையும் பச்சிலைகளும் சாத்தப்படுகின்றன.
வாலுக்கு வெள்ளை அரளி, செவ்வரளி மொட்டுகள் உதவுகின்றன. கண்களுக்கு காக்கா பொன் செய்து பொருத்தப்படுகின்றன. இறுதியாக இரண்டு மூங்கில் குச்சிகளை பென்சில் போல் சீவி காலில் வைத்து கட்டி விடுவார்கள். இதுவே கிளி தயாராகும் விதம். இதற்கு நான்கு மணி நேரம் ஆகும்.
இந்த கிளி தினமும் ஆண்டாளுக்கு மாலை நேர பூஜைக்கு சாத்தப்படுகிறது. மறுநாள் காலை விஸ்வரூப தரிசனத்தின் போது கிளியை எடுப்பர். கிளியை 'தடை நீக்கும் கல்யாண கிளி' என்பார்கள்.
இதை பூஜை அறையில் வைத்து வழிபட்டால் திருமண தடை நீங்கும். தம்பதியர் இடையே ஒற்றுமை நிலைக்கும். இக்கிளியை பக்தர்கள் வாங்கி கொடுத்தால் திருமணத் தடை அகலும்.
திருச்சி ஸ்ரீரங்கம் பெருமாள் எல்லா அலங்காரத்திலும் அழகாக இருந்தாலும் அவரை கிளி மாலையுடன் காண்பது கூடுதல் அழகாக தெரிவார்.
ஶ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த பெரியாழ்வார், லட்சுமி நாராயணரை தன் குல தெய்வமாக வழிபட்டார். இவர் வழிபட்ட நாராயணர் ஆண்டாள் கோயில் முதல் பிரகாரத்தில் வடக்கு நோக்கி அருள்கிறார்.
ஶ்ரீவில்லிபுத்தூர் சென்று ஆண்டாளிடம் வேண்டி தடை நீக்கும் கிளி வாங்கி கொடுத்து திருமணம் நடை பெற அருள் பெறுங்கள்.