
கோயம்புத்தூரில் கோவில் கொண்டுள்ளவர்தான் கோனியம்மன். கோனியம்மன் கோவில் நொய்யல் ஆற்றின் வடக்கே அமைந்துள்ளது. இவர் கோயம்புத்தூரின் காவல் தெய்வமாக வணங்கப்படுகிறார்.
தற்போது உள்ள கோயம்புத்தூர் பகுதி 600 வருடங்களுக்கு முன்பு அடர்ந்த காடாக இருந்திருக்கிறது. இருளர் இனத்தலைவரான ‘கோவன்’ என்பவர் தான் இந்தப் பகுதியை சீர்ப்படுத்தி மக்கள் வாழ தகுதியான இடமாக மாற்றியமைத்தார். அதனால் தான் இந்த இடம் ‘கோவன் புத்தூர்’ என்று அழைக்கப்பட்டது. அதுவே நாளடைவில் மருவி ‘கோயம்புத்தூர்’ என்றானது.
இந்த பகுதியில் மக்களெல்லாம் பஞ்சம் ஏற்பட்டு கஷ்டப்பட ஆரம்பிக்கிறார்கள். அப்போது இருளர் இனத்தலைவனான கோவன் ஒரு கல்லை எடுத்து அம்பாளாக பாவித்து, ‘என் மக்களின் பஞ்சம் பட்னியை தீர்க்கவேண்டும்’ என்று சொல்லி வழிப்பாடு நடத்திக்கொண்டு வருகிறார். அம்பாளும், ‘நீ என்னை நினைத்தாலே போதும், அனைத்து கஷ்டங்களையும் நான் தீர்ப்பேன்’ என்று சொல்லி இவ்விடத்தில் மும்மாரி பொழிய செய்து மக்களின் பஞ்சத்தை தீர்க்கிறார்.
இருளர் ஆட்சிக்கு பிறகு பல நூறு வருடம் கழித்து ‘இளங்கோசர்’ என்பவர் இப்பகுதியை ஆட்சி செய்கிறார். அப்போது சேரர் படையெடுப்பு நடக்கிறது. அந்த படையெடுப்பில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்று ஊருக்கு மத்தியில் கோட்டை எழுப்புகிறார். அந்த கோட்டைக்கு நடுவே கோவிலைக் கட்டி இந்த அம்பாளை அங்கே பிரதிஷ்டை செய்து அம்மனுக்கு ‘கோனியம்மன்’ என்று பெயரும் சூட்டுகிறார்.
‘கோனி’ என்றால் அரசி என்று பொருள் ஆகும். கோயம்புத்தூரை ஆட்சி செய்யும் அரசி தான் கோனியம்மன் ஆவார். இக்கோவிலில் பங்குனி மாதம் நடைப்பெறும் தேர்த்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இக்கோவிலுக்கு சென்று வழிப்பட்டால் திருமணத்தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிட்டும், தீராத நோய்த்தீரும், தொழில் முன்னேற்றம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. இக்கோவிலில் தலவிருட்சமாக வேப்பமரம், நாகலிங்கம், வில்வம், அரசமரம் இருக்கிறது. ஆடி மாதத்தில் நடைப்பெரும் ஊஞ்சல் திருவிழா சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. எந்த ஒரு நல்ல காரியம் செய்வதற்கு முன்பு கோனியம்மனின் அனுமதி பெற்ற பிறகே இங்குள்ள மக்கள் அக்காரியத்தை செய்யத் தொடங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலை ஒருமுறை சென்று தரிசிப்பது நன்மைத் தரும்.