
பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் இந்தியாவில் உருவாக காரணமாக இருந்த ராபர்ட் கிளைவ் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், அவர் ஒரு காஞ்சி வரதராஜ பெருமாள் பக்தர் என்பது பலருக்கு தெரிந்திருக்காது. அவர் வரதராஜ பெருமாளுக்கு பக்தன் ஆன கதை இதுதான்.
அப்போது ராபர்ட் கிளைவ் ஒரு படையோடு ஆற்காடை கைப்பற்ற போய்க் கொண்டிருந்தார். வழியில் காஞ்சிபுரத்தில் தங்கிய போது அவருக்கு கடும் வெய்யிலினால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு நோய் வாய்ப்பட்டார். எப்படி எடுத்த காரியத்தை முடிக்க போகிறோம் என்ற பயம் உண்டாக்கியது அவருக்கு. அவருடைய உடல் நல குறைவால் அவரது படையும் மிகவும் சோர்வடைந்தது.
அப்போதுதான் வரதராஜரின் திருத்தேர் உற்சவம் காஞ்சிபுர வீதியில் கோலாகலமாக துவங்கியது. இதைப் பற்றி அறிந்த ராபர்ட் கிளைவ் உத்ஸவத்தை பற்றி அறிந்து வருமாறு தன் உதவியாளர்களை அனுப்பினார்.
அவர்களும் திரும்பி வந்து வரதராஜரின் மகிமைகளை ராபர்ட் கிளைவுக்கு எடுத்து சொன்னார்கள். அப்போதே ராபர்ட் கிளைவ் தன்னை நோயின் பிடியிலிருந்து உடனே காப்பாற்ற வேண்டும் என்றும் தான் எடுத்த காரியம் ஜெயம் ஆக வேண்டும் என்றும் வரதராஜரை வேண்டிக்கொண்டார்.
அவரது உதவியாளர்கள் பெருமாளின் அர்ச்சகர்களை நாடி ராபர்ட் கிளைவுக்கு தீர்த்தமும், சடாரியும் கிடைக்கும் படி செய்தனர். மறுநாளே ராபர்ட் கிளைவ் நோய் நீங்க பெற்று புத்துணர்ச்சியுடன் எழுந்து படைகளோடு ஆற்காடு சென்று வெற்றியும் அடைந்தார். அங்கிருந்து மெட்ராஸ் திரும்பும் வழியில் காஞ்சியில் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்து நன்றி காணிக்கையாக மரகத அட்டிகை ஒன்றை பெருமாளுக்குத் தந்து வணங்கி நின்றார்.
இந்த ஆபரணம் இன்றும் பெருமாளுக்கு முக்கிய தினங்களில் அணிவிக்கப்படுகிறது. அவர் பெருமாளை தரிக்க வந்த போது பெருமாளுக்கு அர்ச்சகர் சாமரம் வீசிக்கொண்டிருந்தார். 'பெருமாளுக்கு சாமரம் வீசுகிறீர்கள்.. அவருக்கு என்ன உஷ்ணமா?' என்று கேட்டார்.
அதற்கு அர்ச்சகர், 'பெருமாள் யாக குண்டத்தில் தோன்றியவர்' என்று கூறி ஒரு துண்டினால் பெருமாளின் நெற்றியில் ஒத்தி எடுத்து ராபர்ட் கிளைவிடம் காண்பித்தார். துணி பெருமாளின் வேர்வையால் ஈரமாயிருந்தது!