சுட்டுவைத்த அப்பளம் நமத்துவிட்டதா?


Samayal tips in tamil
General Samayal tips
Published on

ட்லி, வடை போன்றவற்றுக்காக உளுத்தம் பருப்பு அரைக்கப் போகிறீர்களா? அதை ஒரு டப்பாவில் ஊறப்போட்டு, உடனடியாக ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். ஊறிய பிறகு அரைத்தால் இட்லி பூப்போல வரும். வடை எண்ணெய் குடிக்காமல் மெத்தென்று வரும்.

பஜ்ஜி போட காய்கள் கைவசம் இல்லையா? கோதுமை மாவைப் பிசைந்து, சப்பாத்திகளாக இட்டு, ஒரு பாட்டில் மூடியால் வட்ட வட்டமாக வெட்டி, பஜ்ஜி மாவில் தோய்த்து, எண்ணையில் பொரித்து எடுங்கள். சூடாக சாப்பிட மொறுமொறுவென்று  இருக்கும்.

சப்பாத்தி செய்து ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கும்போது, கீழே உள்ள சப்பாத்தி ஆவியினால் சொத சொதவென்று ஆகிவிடும். இதைத் தவிர்க்க துளையுள்ள தட்டில் சப்பாத்திகளை அடுக்கினால் அடியில் உள்ள சப்பாத்தியும் ஃப்ரெஷ் ஆக இருக்கும்.

சுட்டு வைத்த அப்பளம் நமத்துவிட்டதா? அந்த அப்பளங்களை நான்காக வெட்டி, எண்ணையில் மீண்டும் பொரித்தெடுங்கள். அப்பளமும் வீணாகாது, ருசியாகவும் இருக்கும்.

பாலை உறை ஊற்றும் முன் பால் நன்கு ஆறவேண்டும் என்பதில்லை. காய்ச்சிய சில நிமிடங்கள் கழித்து, சூடாக இருக்கும்போதே சில துளி மோரை ஊற்றி நுரை வருமளவுக்கு ஆற்றிவிட்டால் விரைவாகவும், கெட்டியாகவும் தயிர் தோய்ந்துவிடும்.

ஒவ்வொரு மாதமும் சர்க்கரை வாங்கியதும், இரண்டு டம்ளர் சர்க்கரையை மிக்ஸியில் நைஸாகப் பொடித்து, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வையுங்கள். வீட்டுக்கு விருந்தினர்கள் வரும்போது, அவர்களுக்கு குளிர்பானம் தயாரிக்க இந்த சர்க்கரையை பயன்படுத்தினால் சட்டென்று கரையும்.

தேங்காய் கொப்பரை தேவையா? சாதாரணமாக இருக்கும் தேங்காயை  உடைத்து, வில்லைகளாக பெயர்த்து, ஃப்ரிட்ஜில் ஒரு தட்டில் அப்படியே  வைத்துவிடுங்கள். ஐந்து நாட்களில் அது கொப்பரையாக மாறியிருக்கும்.

இதையும் படியுங்கள்:
குருமா, கிரேவி வகைகளில் காரம் அதிகமாகிவிட்டால்..?

Samayal tips in tamil

துவையல் மீந்துவிட்டால் அடுத்த நாள் வரை கெடாமல் வைத்திருந்து பயன்படுத்த ஒரு எளிய வழி. வாணலியில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெயை காயவைத்து, அதில் துவையலைப் போட்டு ஒரு  நிமிடம் நன்கு கிளறிவிடுங்கள். எண்ணையில் வதக்கிய துவையல்  அடுத்த நாளும் சுவையாக இருக்கும்.

புளி பழையதாகி இருந்தால் அதைச் சேர்க்கும் குழம்பு, சாம்பார் போன்றவையும் கருப்பாக பழைய வாசனையுடன் இருக்கும். இதைத்தவிர்க்க சாம்பார் தயாரித்து முடித்து, அடுப்பை அணைத்ததும், சாம்பாரில் தேங்காய்ப்பாலை ஊற்றிக் கலந்துவிட்டால் புளியினால் ஏற்பட்ட நிறம் மாறி சாம்பார் நல்ல மணத்துடன் இருக்கும். 

சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி உப்பு, எலுமிச்சைச்சாறு கலந்து பிசிறி வைத்தால்  தயிர்சாதத்துக்கு தொட்டுக்கொள்ள சுவையான ஊறுகாய் ரெடி.

வெங்காய ராய்த்தா தயாரிக்கும்போது, இரண்டு ஸ்பூன் தேங்காய் துருவல், ஒரு பச்சை மிளகாய் இவற்றை அரை ஸ்பூன் மைதா மாவு சேர்த்து அரைத்து, பச்சடியில் கலந்துவிட்டால், ராய்த்தா கெட்டியாக தனிச்சுவையுடன் இருக்கும்.

ஊறுகாயிலுள்ள காய்கள் தீர்ந்து வெறும் விழுது மட்டும் இருக்கிறதா? ஒரு பாத்திரத்தில் ஐந்து சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிப் போட்டு அதில் இரண்டு மூன்று ஸ்பூன் ஊறுகாய் விழுதைக் கலந்துவிடுங்கள். தயிர் சாதத்துக்கும், சப்பாத்திக்கும் தொட்டுக்கொள்ள சூப்பர் சைட்டிஷ் தயார்.

இதையும் படியுங்கள்:
ஃப்ரெட் - மில்க் ஸ்பெஷல் கேக் - டேஸ்ட்டி கேரளா டைப் அவியல்!

Samayal tips in tamil

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com